அரசு விதிகளுக்கு எதிராக கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை
கிருஷ்ணகிரி, மே 16 – அரசு அலுவலகங்களிலுள்ள சுவாமி சிலைகள் ஒளிப்படங்களை அகற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு கடந்த1968ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்பின் கடந்த 1993இல்அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்கள் இல்லை என்பதை, உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த 2010இல் ஒரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதம் தொடர்பான நிகழ்வுகளை, அரசு அலுவலக வளாகங்களில் நடக்காமல் பார்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உத்தர விட்டது.
இந்த உத்தரவை மேற்கோள் காட்டி, அனைத்துத் துறை தலைவர்களுக்கும், தமிழ்நாடு பணியாளர் நிருவாகத்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி, அரசு அலுவலக வளாகத்தில் ஏதேனும் மத ரீதியிலான நிகழ்வுகள் நடந்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகும். பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த 2009இல் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டபோது, நகராட்சி அலுவலக வளாகத்தின் முன், லட்சுமி சிலை இருந்தது. இப்போது லட்சு சிலைக்கு முன்பாக, வலம்புரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். நகராட்சி ஆணையர் வசந்தி, பூஜை செய்த கலசத்துடன் சுவாமி சிலையை வலம் வந்தார். பின் கலசத்திலிருந்த புனித நீர், விநாயகர் சிலை மீது ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், நகராட்சி இளநிலை உதவி யாளர்கள் அறிவழகன், செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் செந்தில்குமார், செழியன், மின் பணி யாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
சிலை பிரதிஷ்டை குறித்து நகராட்சி ஆணையர் வசந்தியிடம் கேட்டபோது, லட்சுமி சிலை மட்டும் இங்கு இருந்தது. அதனால், ஏற்கெனவே பல பிரச்சினைகள் நடந்துள்ளது. எனவே, அனைத்தும் சுமூகமாக நடக்கவும் குழப்பங்கள் நீங்கி, அனை வரும் நன்றாக இருக்கவும், பணிகள் யாவும் சிறப்பாக நடக்கவும் வேண்டி அனைத்துக்கும் முதற் கடவு ளான விநாயகர் சிலை, இங்கு பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது என்றார்.