காசா, அக். 29- ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இன்னொருபுறம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் படைகளால் மீட்கப்பட்ட ஒரு பணயக் கைதியின் உடல் பாகங்களை ஹமாஸ் முன்னதாக ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான விதிமீறல் என்று நெதன்யாகு கண்டனம் தெரிவித்திருந்தார்.
நெதன்யாகுவின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், நேற்று (28.10.2025) மாலை மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல்:
சவுதியின் கனவுத் திட்டம்!
நியோம், அக். 29- சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்தத் திடல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியின் மூலம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வளங்கள் மட்டுமே நிறைந்துள்ள சவுதி அரேபியா, பயணிகளைக் கவரும் வகையில் பல புதிய கட்டுமானங்களை நிறுவி வருகின்றது. அந்தவகையில், உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்களைக் கவரும் வகையில் நியோம் பகுதியில் 350 மீட்டர் உயரத்தில் கால்பந்துத் திடல் கட்ட சவுதி திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் உலகின் மிக உயரமான திடல் என்ற பெருமையை இது பெரும். இதற்கு நியோம் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. 2032ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க சவுதி திட்டமிட்டுள்ளது.
2034 ஆம் ஆண்டு நடைபெறும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நியோம் ஸ்டேடியத்தில் நடத்தும் வகையில் பணிகளை முடிக்க சவுதி முடிவு செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நியோம் ஸ்டேடியம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாமில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய பாரம்பரிய இடங்கள்!
வியட்நாம், அக். 29- வியட்நாம் நாட்டின் மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வரலாற்று சிறப்புடைய பண்டைய தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வியட்நாமில், கடந்த அக்.27 ஆம் தேதி இரவு வரையிலான 24 மணிநேரத்தில், வரலாற்றில் முதல் முறையாக சுமார் 1,085.8 செ.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நேற்று (அக்.28) வியட்நாமின் ஹியூ நகரத்தின் வரலாற்று சின்னமாக அறியப்படும் பெர்ஃபியூம் நதியின் நீர்மட்டம் 4.62 மீட்டர் (15 அடியாக) உயர்ந்துள்ளது.
இதேவேளையில், யுனெஸ்கோவால் பட்டியலிடப் பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஹோய் நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இத்துடன், வியட்நாமின் வடக்கு திசையில் உள்ள ஹனோய் மற்றும் தெற்கு திசையில் உள்ள ஹோ சி மின் ஆகிய நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, வியட்நாம் வெள்ள அபாயமிக்க நாடு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் அதிக வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
