தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
இலால்குடி, அக்.29 நவம்பர் 26ஆம் தேதி – இலால்குடி, கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீர வணக்க நாள் மாநாடு, ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த முதலமைச்சருக்கும், திராவிட மாடல் அரசிற்கும் பாராட்டு விழா நடத்துவது எனவும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டம்
இன்று (29.10.2025) காலை 10 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் இலால்குடி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், இலால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர், மாவட்டக் காப்பாளர் பா. ஆல்பர்ட், மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீ. அன்புராஜா, மாவட்ட துணைத் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்ட ப.க. துணைச் செயலாளர் மு. செல்வி, பொதுக் குழு உறுப்பினர் மு. முத்துசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் பி. பூங்கோதை, இலால்குடி ஒன்றிய செயலாளர் சி. பிச்சைமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. பனிமலர் செல்வம், ஒன்றிய இளைஞரணி தலைவர் ச. யுவராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் க. சண்முகவேலு, அமைப்பாளர் மு. அறிவழகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாநாடு
கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது, வருகிற நவம்பர் 26ஆம் தேதி காலை இலால்குடியில் ஜாதி ஒழிப்பிற்காக சட்ட எரிப்புப் போராட்ட 69ஆவது நினைவு வீர வணக்க நாள் மாநாட்டை கருத்தரங்கமாக நடத்துவது என்றும், மாலையில் ஜாதி ஒழிப்புப் பேரணியும், இரவு கீழவாளாடியில் திறந்த வெளி மாநாடு நடத்துவது என்றும், ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த முதலமைச்சருக்கும், திராவிட மாடல் அரசிற்கும் பாராட்டு விழா நடத்துவது என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் இலால்குடி மாவட்ட தோழர்கள் தமிழர் தலைவருக்கு சால்வைக்கு பதில் நன்கொடை வழங்கி சிறப்பித்தனர்.
