சென்னை, அக்.28- தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம் என்று மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திராவிட இயக்கம்
சென்னை மியூசிக் அகாடமியில் திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் (27.10.2025) நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:-
இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினர் எல்லாம் இன்றைக்கு படித்து, முன்னேறி உலகம் முழுவதும் உயர்ந்த இடங்களில் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கம்தான்.
கல்வித்திட்டங்கள்
இந்த அடித்தளத்தில், உயர் கல்வியில் தலைசிறந்த தமிழ்நாட்டை கட்டமைத்தவர் மேனாள் முதலமைச் சரான கலைஞர் உயர்கல்விக்கு என்று ஏராளமான திட்டங்கள், கல்விக் கட்டணச் சலுகைகள், புதிய பல்கலைக்கழகங்கள், 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்று உயர்கல்விக்காக அதிகமாக செய்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் நம்முடைய திராவிட மாடல் அரசும், ஏழை-எளிய மாணவ-மாணவியரும், உலக தரத்தில் கல்வி பெறவேண்டும் என்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கல்லூரி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம், படித்து முடித்ததும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெறுவதற்காக நான் முதல்வன் திட்டம், அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு முதலமைச்சரின் ஆய்வு திட்ட நிதி உதவி, வசதி வாய்ப்பு இல்லாத வீட்டுப் பிள்ளைகளும் உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேரவேண்டும் என்று மாதிரிப்பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்று பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.
தலைமைப் பண்பு
உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓடவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், ‘காலாவதி’ ஆகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள். அதேபோல், தலைமைப்பண்பு என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய பதவியோ, அவர்கள் ஊதியமோ கிடையாது. அவர்கள் உருவாக்கும் நேர்மறையான தாக்கம்தான். இந்த ஏ.அய். செயற்கை நுண்ணறிவு) காலத்தில், உங்களின் நேர்மைதான் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும். ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை மிகவும் அவசியம்.
எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில அடிப்படைகள் எப்போதும் மாறா தேவை. அதில் நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும். இதற்காக பெரிய பெரிய புத்தகத்தையெல்லாம் படிக்கவேண்டும் என்று இல்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும் அடிப் படையான மேலாண்மை பாடங்கள் நம்முடைய திருக்குறளிலேயே நிறைய இருக்கிறது.
கைதூக்கி விடவேண்டும்
எல்லோரும் நல்ல மனிதர்களாக. வெற்றியாளர்களாக, மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக வளர வேண்டும். உயர உயர வளரும்போது, உங்களுக்கு கீழே இருப்பவர்களையும் நீங்கள்தான் கைதூக்கி விடவேண்டும். இதுதான் உண்மையான தலைமைத் துவத்துக்கான தரம்.
நவீன உலகத்தில் பல்வேறு பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக நீங்கள் வரவேண்டும். பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.
பெரிதாக கனவு காணுங்கள். கடுமை யாக உழையுங்கள். எளிமையாகவும், கனிவாகவும் இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டோர்
விழாவில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., உயர் கல்வித்துறை செயலாளர் பொ.சங்கர், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவர் ரவி அப்பாசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் பாலபாஸ்கர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகிருஷ்ணா, முதுகலைதுறை தலைவர் ராகவேந்திரா, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
