வட மாநிலங்களில் ‘சத்’பூஜா என்பது யமுனை நதியில் குளித்துக் கொண்டாடப்படும் ‘புனித’ பூஜை என்று கூறப்படுகிறது.
ஹிந்துத்துவாவில் மூழ்கிக் குதூகலிக்கும் இந்தியாவின் பிரதமர் கொண்டாடாமல் இருப்பாரா? அதுவும் பீகாரில் தேர்தல் நேரமாயிற்றே! பெரும்பான்மையான மக்கள் யமுனை நதியில் குளித்துப் பூஜை செய்யும்போது, பிரதமர் மோடி மட்டும் யமுனை ‘புண்ணிய’(?) நதியில் குளிக்காமல், டில்லி மாநில அரசால் தனிக்குளம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ‘புனித’க் குளியல் போடுகிறார்.
இதுகுறித்து டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா என்ன கூறுகிறார்?
மோடி ‘சத்’ பூஜையை கொண்டாட டில்லி அரசால் பல லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட செயற்கைக் குளத்தின் படிக்கரையில் அமர்ந்து ‘‘மோடிக்காக இதைச் செய்ததில் பெருமை கொள்கிறேன்’’ என்று டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார்.
மோடி குளிப்பதற்காகவே அரியானாவில் உள்ள தனியார் குடிநீர் நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டாங்கர்களில் தூய்மையான நீர் கொண்டு வரப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டில்லி அருகே யமுனை நதி ஓடிக் கொண்டு இருந்தாலும் இந்தப் பூஜையைப் பெரும்பாலான மக்கள் யமுனை நதியில் ‘புனித’ நீரோடும் நிலையில், மோடி மட்டும் அதைத் தவிர்ப்பது ஏன்?
அவருக்காக ரூ.17 லட்சம் செலவில் செயற்கைக்குளம் வெட்டுவானேன்? ஏழைத் தாயின் மகன் என்றும் சொல்லிக் கொள்வது எல்லாம் யாரை ஏமாற்றிட?
இவர்கள் நம்பும் ‘புனித’ நதி யமுனா என்பது சாக்கடைகளின் சங்கமம்!
உத்தராகண்டத்தின் யமுனோத்திரி பனி ஏரியில் தோன்றி, டில்லி, அரியானா, உத்தரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களின் வழியாக, 1,376 கி.மீ. தொலைவு பயணித்து கங்கையில் கலக்கும் யமுனை நதி, இந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று.
இது அரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டில்லியின் குடிநீர், விவசாயம் ஆகியவற்றுக்கு ஆதாரமாக இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நதி கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
டில்லி, அரியானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இயங்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வரும் சாக்கடை நீர் – நதியில் கலக்கும் நிலையில், யமுனை நதி “இறந்த நதி” என்று அழைக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு வரையிலும், இந்த மாசுபாடு தீவிரமாகத் தொடர்கிறது, நதியின் 22 கி.மீ. டில்லி பகுதி மட்டுமே 76% மாசை ஏற்படுத்துகிறது.
டில்லி உள்ளிட்ட நகரங்களில் உருவாகும் சாக்கடை, நதியின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. டில்லி நாள்தோறும் 3,800 மில்லியன் லிட்டர் சாக்கடைக் கழிவு நீரை உருவாக்குகிறது. ஆனால் சுத்திகரிப்பு திறன் வெறும் 2,600 மில்லியன் லிட்டர் மட்டுமே உள்ளது.
உண்மையில், 20% சாக்கடை நீர் மட்டுமே சரியாக சுத்திகரிக்கப்படுகிறது, மீதி 1 பில்லியன் லிட்டர் அளவு சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் நதியில் கலக்கிறது. அரியானாவின் சோனிபத், பனிபத் போன்ற பகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தின் நொய்டா, ஆக்ரா ஆகிய இடங்களிலும், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளிலிருந்து வரும் சாக்கடை கழிவு நீர் நதியை மாசுபடுத்துகின்றன. அதனால் நோய்ப் பரப்பும் பாக்டீரியாக்களுக்கும் பஞ்சமில்லை.
அரியானாவின் பனிபத், சோனிபத், யமுனா நகர் போன்ற தொழிற்சாலை பகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தின் மத்துரா, ஆக்ரா, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களிலும் இயங்கும் 359 தொழிற்சாலைகள் (டெக்ஸ்டைல், ரசாயன, திறல் ஆலைகள்) கழிவு நீரினை சுத்திகரிக்காமல் வெளியேற்றுகின்றன. இவை குரோமியம், கேட்மியம், லெட், நிக்கல்), அம்மோனியா நைட்ரேட், சல்ஃபேட் போன்றவற்றை நதியில் கலக்கின்றன.
50க்கும் மேற்பட்ட வேதிப்பொருள் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் யமுனை நதிக்கரையில் உள்ளன. இது சட்டவிதிமீறல் ஆகும். இதில் வெறும் 34 நிறுவனங்கள் மட்டுமே பெயரளவிற்குக் கழிவு நீர் மற்றும் வேதிப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளன.
இந்த மாசு யமுனையின் நீரின் தரத்தை மோசமாக்கி, நீர்வாழ் உயிரிகள் மற்றும் மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்துகின்றன.
10 ஆண்டுகளுக்கு முன்பே டில்லி உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் யமுனை நதி 75% உயிரினங்கள் வசிக்க இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.
மேலும் யமுனை நதிநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தோல் நோய்கள், சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, யமுனையில் கலந்த அமோனியா நச்சுத்தன்மை, மனிதர்களின் உள் உறுப்புகளை சேதப்படுத்துகிறது. அரியானா, உத்தரப் பிரதேச பகுதிகளில் நீர் தரக்குறியீடு குறைந்து – குடிநீர், விவசாயத்துக்கு அனைத்தும் அபாயகரமாக மாறியுள்ளன. 2020–2023 காலத்தில் மாசு இரு வகையான (Bod & Cod) ஆக்சிஜன் பற்றாக்குறைகள் 42%, 39% அதிகரித்துள்ளன.
இப்படிப்பட்ட யமுனை தான் ‘புண்ணிய’ நதியாம் – புடலங்காயாம்!
என்னதான் பக்தி முற்றிப் போயிருந்தாலும், பிரதமர் மோடி மாசுபட்ட – நோய்ப் பரப்பக் கூடிய சாக்கடைகளின் சங்கமமான யமுனையில் குளிப்பாரா?
அதற்காகத்தான் பல லட்ச ரூபாய் செலவு செய்து டில்லியில் தனிக்குளமே வெட்டி, அதில் நீராடி ‘சத்’ பூஜா செய்கிறார் மோடி!
பிரதமர் அல்லவா – பக்தி நம்பிக்கையைவிட உடல்நலம்தானே முக்கியம்!!
பாமர மக்கள் அந்த யமுனையாகிய ‘புனித’ சாக்கடை நீரில் பயபக்தியோடு முழ்கிச் சாகட்டும் – அப்படித் தானே!
