கல்வியில் ‘திராவிட மாடல்’ அரசின் அடுத்தகட்ட பாய்ச்சல்!

தமிழ்நாட்டின் மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கவும், தரமான கல்வியை உறுதி செய்யவும் திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து வசதியின்மை மற்றும் வனவிலங்கு அச்சுறுத்தல் காரணமாக மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்லும் சிரமத்தைப் போக்க, தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக 26 ஜீப் வாகனங்களை வழங்கியுள்ளது.

இதில் 23 வாகனங்கள் அரசு நிதியிலும், 3 வாகனங்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலும், மொத்தம் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இவை சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டு – உறைவிடப் பள்ளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை அக்டோபர் 6, 2025 அன்று தொடங்கி வைத்தார். இந்த ஜீப் வாகனங்கள் மூலம் மாணவர்கள் பாதுகாப்பாகவும், உற்சாகமாகவும் பள்ளிக்குச் செல்ல முடிகிறது. வாகனங்களின் பராமரிப்பு, எரிபொருள், ஓட்டுநர் ஊதியம் ஆகியவை அரசால் வழங்கப்படுகின்றன. இதனால், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்து, பள்ளி சேர்க்கை மீண்டும் உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 65 உண்டு – உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், பெத்தநாயக்கன்பாளையம் அருகே சின்னகல்வராயன்மலை தேக்கம்பட்டு கிராமத்தில் உள்ள பள்ளியில் 142 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளிக்கு வழங்கப்பட்ட ஜீப் வாகனம் மூலம் 69 மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தலைமை ஆசிரியை ஜூலியட் கூறுகையில், “முன்பு மாணவர்கள் 6 கி.மீ. வரை நடந்து வந்தனர். மழை, வனவிலங்கு அச்சுறுத்தல், பாதுகாப்பின்மை ஆகியவை பெரும் சவாலாக இருந்தன. இப்போது ஜீப் வாகனம் மூலம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகின்றனர். இதற்கு முதலமைச்சருக்கு நன்றி,” என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், கொங்காடை, ஆசனூர், தலமலை ஆகிய மலைக்கிராமங்களில் 4 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 173 மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கின்றன. இதன் விளைவாக, ஒரு வாரத்தில் 17 புதிய மாணவர்கள், இதில் 2 இடைநின்ற மாணவர்கள் உட்பட, பள்ளியில் சேர்ந்துள்ளனர். வெள்ளியங்கிரி என்ற மாணவன் “2 ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லவில்லை. இப்போது புதிய வாகனத்தில் பள்ளிக்குச் செல்வது மகிழ்ச்சி யாக உள்ளது,” என்றார். பெற்றோர் கெம்பே கூறுகையில், “வனவிலங்கு அச்சமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிகிறது. இது பெரும் சிரமத்தைக் குறைத்துள்ளது,” என்றார்.

கொங்காடை பள்ளியில் ஒரு மாணவன் படிக்கட்டில் விழுந்து காயமடைந்தபோது, புதிய ஜீப் வாகனம் ஆம்புலன்ஸாக மாறி முதலுதவிக்கு உதவியது. இதனால், மலைப்பகுதிகளில் அவசர மருத்துவ உதவிக்கும் இவை பயன்படுகின்றன. திராவிட மாடல் அரசின் இந்த முயற்சி, மலைவாழ் மக்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்குச் செல்வதும், பெற்றோரின் மனநிறைவும், பள்ளி சேர்க்கை உயர்வும் இதன் வெற்றியைப் பறைசாற்றுகின்றன. “கல்வி முதல் முன்னுரிமை” என்ற திராவிட மாடல் அரசின் அர்ப்பணிப்பு, மலைவாழ் மக்களின் மகிழ்ச்சியில் பிரதிபலிக்கிறது.

ஓர் அரசாங்கத்தின் முழு முதற்கடைமை எது என்று கேட்டால் ‘கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, அனைவருக்கும் கல்வி’ என்பதுதான்.

தந்தை பெரியார் அவர்கள் ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி, ஆட்சியை விட்டு அவரை விலகிப் போகச் செய்ததற்கும், குலக்கல்வி திட்டத்தை ஒழித்து கல்வி வெள்ளத்தைக் கரை புரண்டு ஓடச் செய்த காமராசரைக் ‘கல்வி வள்ளல்’ என்று போற்றி, அவர் ஆட்சியை நிலை நிறுத்தப் பாடுபட்டதற்கும் முக்கியக் காரணமே கல்வியில் அவர்கள் காட்டிய கவனமும் அக்கறையுமேயாகும்.

பச்சைத் தமிழர் காமராசரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிட ஆட்சிகள் கல்வியில் அக்கறை காட்டியே வந்துள்ளன. சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்த நீதிக்கட்சியின் தலைவர் வெள்ளுடைவேந்தர்
சர். பிட்டி தியாகராயர் முதன் முதலாக ‘இலவச மதிய உணவு திட்ட’த்தைக் கொண்டு வந்தார் – காமராசரும், தொடர்ந்து வந்த திராவிட இயக்க ஆட்சிகளும் அதை மேலும் மேலும் செழுமைப்படுத்தின.

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘காலை உணவுத் திட்ட’த்தை கொண்டு வந்து கல்விச் செல்வத்தை வாரி வழங்கினார்.

இப்பொழுது அடுத்த பாய்ச்சல்! யாரும் கற்பனை செய்யவே முடியாத ஒன்று. மலைப் பகுதிகளில் நடக்கும் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றிட ஜீப்புகள் வழங்கி இருப்பது – கல்வி வளர்ச்சிக்குச் சூட்டப்பட்ட மணி மகுடமாகும்.

எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இல்லாமல் குறைந்தபட்சம் கல்வி வளர்ச்சிக்குத் ‘திராவிடமாடல் அரசு செய்த வரும் அருமையான திட்டங்களையாவது பாராட்டும் மன வளர்ச்சி பெறுவார்களாக!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *