பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்! தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு, பெரியார் கொள்கைக்கு உடன்படாதவர்கள் இருக்கிறார்கள்; அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவர்கள், தயங்குகிறவர்கள், பயப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்!
ஆனால், பெரியார் கொள்கையினால் பயனடையாதவர்கள் இருக்கிறார்களா? யாராவது ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்!
பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்!
தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

தஞ்சை, அக்.28- சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு, பெரியார் கொள்கைக்கு உடன்படாதவர்கள் இருக்கி றார்கள். அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற வர்கள், தயங்குகிறவர்கள், பயப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கொள்கையினால் பயனடையாதவர்கள் இருக்கிறார்களா? யாராவது ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம். பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா!

கடந்த 10.10.2025 மாலை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில், தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மேடையில் அமர்ந்திருந்தாலும், ஒவ்வொருவரையும் அடையாளம் காணக்கூடியவன் நான்!

அந்தப் பணி என்னவென்றால், திருவையாறு, பூதலூர் பகுதிகள். யாருக்கு எந்தப் பகுதி? என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், ஒவ்வொருவரையும் அடையாளம் காணக்கூடிய வகையில், இயக்கத்தில் பணியாற்றக் கூடியவன் நான். மேடையில் அமர்ந்து விட்டு, அப்படியே செல்பவன் அல்ல. மேடையில் அமர்ந்திருக்கும்போதே, யார் வருகிறார்கள், எந்த இடத்தில் அமருகிறார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டே இருப்பது எனக்கும் பழக்கம், தந்தை பெரியாருக்கும் பழக்கம், கலைஞருக்கும் பழக்கம்.

‘‘மூன்று வரதராஜன்கள் இருக்கிறார்கள்!’’

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஜெயலலிதா அம்மையார் பக்கத்தில் அமரக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அந்த அம்மையார் என்னிடம், ‘‘ஏங்க முன் வரிசையில் ஒருவர் அமர்ந்திருக்கிறாரே, கூட்ட அழைப்பிதழில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து  வரதராஜன் பங்கேற்பார் என்று போட்டிருந்தார்களே, ஆனால், அவர் போன்று தெரியவில்லையே!’’ என்று கேட்டார்.

நான் சொன்னேன், ‘‘மூன்று வரதராஜன்கள் இருக்கிறார்கள். ஒருவர், இங்கே அமர்ந்திருக்கின்றார்; இன்னொரு வரதராஜன் பின் வரிசையில் அமர்ந்துள்ளார்’’ என்று சொன்னேன்.

இதுபோன்ற சந்தேகமே எங்களுக்கு வராது. ஏனென்றால், எங்களுக்கு எல்லோருமே பழக்கம். ஒரு குடும்பம் போன்று நாம் இருக்கிறோம்.

எனக்கு உற்சாகத்தைக் கொடுத்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
நிறைவு விழா மாநாடு!

இதுவரையில் கொஞ்சம் தேக்கமாக இருந்த எனக்கு,  இவ்வளவு பெரிய உற்சாகம் வந்ததற்கு அடிப்படைக் காரணம்  என்ன தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடுதான்.

அந்த மாநாட்டில், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் – உலகம் பாராட்டக்கூடிய முதலமைச்சர் அவர்கள், ஓர் இன்ப அதிர்ச்சிக்கு நம்மையெல்லாம் ஆளாக்கினார். நாங்கள் எல்லோரும்கூட எதிர்பார்க்கவில்லை.

பெரியார் உலக திட்டத்தைத் தொடங்கி விட்டோம்; அந்தத் திட்ட முடிவுகளை நாம் பார்க்கிறோமோ இல்லையோ – வயதாகிக் கொண்டிருக்கின்றது.

இருந்தாலும், மக்கள் அதை விடமாட்டார்கள். ஏனென்றால், அந்தத் திட்டம் நமக்கானதல்ல; பெரியாருக்காக.

பெரியார் உலகத்திற்கு
ஒன்றரைக் கோடி ரூபாய்!

அந்த மாநாட்டில், முதலமைச்சர் அவர்கள், ‘‘முதலமைச்சர் உள்பட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடை யாகக் கொடுக்கின்றோம். மொத்தம் ஒன்றரைக் கோடி ரூபாய்’’ என்று அறிவித்தார்.

ஓர் அரசாங்கத்தில், பல கோடி ரூபாய் கொடுத்தா லும்கூட, அதையெல்லாம்விட மேலானது முதல மைச்சரின் அறிவிப்பு. அடுத்து செய்யவேண்டியது இருந்தால், செய்வார்கள் என்பது வேறு விஷயம்.

தந்தை பெரியார் ஏற்றுக்கொள்ளமாட்டார்!

ஆனால், இதில் என்ன சிறப்பு என்றால், தந்தை பெரியார் அவர்களுடைய எல்லா முயற்சிகளும், இந்தப் பாலிடெக்னிக் கல்லூரி உள்பட, ஒரு நபர் வசதியாக இருந்து, அவர் மட்டும் நான் அந்தக் கட்டடத்தைக் கட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னாலும், நம்மிடம் அம்பானியோ, அதானியோ, டாட்டாவோ, பிர்லாவோ இல்லை. அப்படி இருப்பதாக வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்கூட, அதைப் பெரியார் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

நம்முடைய இயக்கத்திற்கு என்ன பெருமை என்றால், இவ்வியக்கம் மக்கள் இயக்கம் என்பதால், ஒவ்வொரு செங்கல்லும், மக்களுடைய உழைப்பினால் கட்டப்பட்ட கட்டடமாக இருக்கவேண்டும். அதில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று நினைப்பார்.

அந்தப் பங்களிப்பை, நம்முடைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள் எவ்வளவு லாவகமாக செய்தார்!

மிகத் தெளிவாகச் சொன்னார், ‘‘ஒவ்வொரு சட்டமன்ற தி.மு.க. உறுப்பினரும், ஒவ்வொரு நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினரும் பெரியார் உலகத்தை ஆதரிக்கிற நிலையில், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாத ஊதியத்தை அதற்கு நன்கொடையாக வழங்குவார்கள்’’ என்று அறிவித்தார்கள்.

மாநாடு முடிந்து மேடையை விட்டு கீழே இறங்கும்போது, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தின்போதும் அந்த மகிழ்ச்சி மாறாமல் பேசினார்.

மேடையை விட்டு அவர் இறங்கியதும், ‘‘ரொம்ப நன்றிங்க’’ என்று சொன்னேன். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா நம்முடைய கழகப் பொதுச்செய லாளர் அன்புராஜ், அமைச்சர்களும் இருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் ஊதியத்தை உயர்த்தவேண்டும்!

நன்றி சொல்லிவிட்டு, ‘‘உங்கள் அறிவிப்பைக் கேட்டவுடன், ஒரு போராட்டத்தை அறிவிக்கலாம் என்று இருக்கிறேன்’’ என்று சொன்னேன்.

‘‘என்னங்க?’’ என்று கேட்டார்.

‘‘அந்தப் போராட்டம் என்ன தெரியுங்களா? நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கெல்லாம் ஊதியத்தை உயர்த்தவேண்டும் என்பது தான். அதுவும், ரெட்ராஸ்பெக்ட்டிவ் எபெக்ட்டில்’’ என்றேன்.

உடனே இராசா அவர்கள், ‘‘பெரியார் கணக்கை அப்படியே ஆசிரியர் போடுகிறார்’’ என்று சொன்னார்.

நம்முடைய முதலமைச்சர் அவர்களும் சிரித்து விட்டார்.

இங்கே நம்முடைய மேயரிடம் ஒரு தகவலைக் கேட்டேன்.

மொத்தம் எத்தனை மாநகராட்சி?

எத்தனை நகராட்சி?

எத்தனை டவுன் பஞ்சாயத்து?

எத்தனை ஊராட்சிகள்?

என்பதுதான் அந்தத் தகவல்.

உடனே அந்தப் புள்ளிவிவரத்தைக் கொடுத்தார்.

இதில் ஒரு செய்தி. ‘விடுதலை’யைப் படிக்கின்ற வர்களுக்குத் தெரியும். மற்றவர்களும் அந்தச் செய்தி யைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

பெரியார் உலகத்திற்கு நிதியைச்  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில், நம்மு டைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவுடன்,  பொதுச்செயலாளர் அன்புராஜூக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர்

அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என்றால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் நம்முடைய தோழர் பூச்சி முருகன் அவர்கள்.

அதில் என்ன சொல்லியிருந்தார் என்றால், ‘‘நம்மு டைய முதலமைச்சர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு மாதம் ஊதியம் அளிப்பார்கள் என்று சொன்னார். ஆனால், வாரியத் தலைவர்களை விட்டுவிட்டாரே’’ என்று  சொல்லிவிட்டு, என்னுடைய ஒரு மாத ஊதியத்தை பெரியார் உலகத்திற்காகக் கொடுக்கிறேன் என்று சொன்னார்.

அப்பொழுதுதான் எனக்கு ஒரு யோசனை வந்தது. ‘‘மாநகராட்சி 25 இருக்கிறது. அவர்களுக்கு மாத ஊதியம் எவ்வளவு?’’ என்று கேட்டேன்.

30 ஆயிரம் ரூபாய் என்று சொன்னார்கள்.

அதேபோன்று நகராட்சித் தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள், டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கி றார்கள்.

இப்போது இங்கே இவருடைய மாத ஊதியத்திற்கு  மேல்தான் கொடுத்திருக்கிறார். அதற்காக நன்றி சொல்கிறோம். இன்னும் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இது நமக்காக அல்ல;
நம்முடைய தன்மானத்திற்காக!

இது நமக்காக அல்ல – பெரியாருக்காக – நம்முடைய தன்மானத்திற்காக. இது வரலாற்று ஆவணமாக இருக்கும். நம்முடைய பேரப் பிள்ளைகள் பெரியார் உலகத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, இதில் எங்கள் தாத்தாவினுடைய பங்கும் இருக்கிறது என்று பூரிப்போடு சொல்வார்கள்.

பெரியார் நாடான ஒரத்தநாடு இவ்வளவு ரூபாய் கொடுத்தார்கள்.

தஞ்சை மாநகரம் இவ்வளவு ரூபாய் கொடுத்தார்கள்.

தஞ்சைதான் என்னுடைய பாடி வீடு, தாய்வீடு என்பார் தந்தை பெரியார்!

பெரியார் அய்யா எப்பொழுதுமே சொல்வார், ‘‘எப்பொழுதுமே என்னுடைய இயக்கத்திற்கு ஒரு பெரிய செல்வாக்கே – தஞ்சைதான் என்னுடைய பாடி வீடு, தாய்வீடு’’ என்பார்.

மற்ற எல்லா மாவட்டங்களையும் ஒரு தராசில் வைத்து, தஞ்சையை இன்னொரு தராசில் வைத்தால், தஞ்சையை வைத்திருக்கும் தராசுதான் சிறப்பாக இருக்கும் என்றார். அது அன்றும் உண்மை, இன்றும் உண்மை, நாளையும் உண்மை என்பதை தோழர்கள் நிரூபித்திருக்கிறீர்கள்.

அதற்காக ஒத்துழைத்த அத்துணை தோழர்களுக்கும் நன்றி!

இது ஒரு நல்ல தொடக்கம். இந்தத் தொடக்கம் மிகவும் தேவையானதாகும்.

பெரியார் கொள்கையினால் பயனடையாதவர்கள் இருக்கிறார்களா?

சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு, பெரியார் கொள்கைக்கு உடன்படாதவர்கள் இருக்கிறார்கள். அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவர்கள், தயங்குகிறவர்கள், பயப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கொள்கையினால் பயனடையாதவர்கள் இருக்கிறார்களா? யாராவது ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம். பார்ப்பனப் பெண்களும், பார்ப்பனர்க ளும்கூட பயனடைந்திருக்கிறார்கள்.

இவ்வளவு பாதுகாப்பாக மற்ற மாநிலங்களில் இல்லை. காந்தியாரைக் கொன்றது கோட்சே என்று சொன்ன நேரத்தில், அன்றைக்கு இளைஞராக இருந்த கலைஞர் அவர்கள் மிகவும் ஆவேசமாகப் பேசினார்.

அந்த ஆவேசத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எல்லோரும் அக்கிரகாரத்திற்குள் செல்லுங்கள் என்று சொல்லவில்லை.

சத்தாராவில், மகாராட்டிராவில் அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் ஒருவருக்குக்கூட ஆபத்து வரக்கூடாது என்று சொன்னார் தந்தை பெரியார்.

மதவெறியை ஒழிப்பதற்கு
முயற்சி செய்யவேண்டும்!

கோட்சேவிற்குப் பின்னால் இருப்பது மதவெறி; அதை ஒழிப்பதற்கு முயற்சி செய்யவேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒரு மனிதரையோ அல்லது ஒரு வகுப்பினரையோ எதிர்த்துப் பேசக்கூடாது என்று சொன்னார்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இயக்கம் இந்த இயக்கம்.

மனுதர்மத்திற்கு
நேர் எதிரானது திராவிடம்!

இப்போது ஏன், நம்முடைய முதலமைச்சர் மேல், ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது கோபம்?

இரண்டு வார்த்தைகளால்தான் அவர்களுக்குக் கோபம். ‘திராவிட மாடல்’ ஒன்று. அந்தத் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை என்ன? இந்த ஆட்சியை அவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? மனுதர்மத்திற்கு நேர் எதிரானது திராவிடம்.

நம்முடைய வழி சமதர்மம். அனைவருக்கும் சமூகநீதி.

‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’

பெரியார் பிறந்த நாளை ‘சமூகநீதி நாள்’ என்று அறிவித்து அன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்கவேண்டும்.

அந்த உறுதிமொழியில், பெரியாருடைய வார்த்தை யைத் தேடிக் கண்டுபிடித்து அதில் சேர்த்தார் நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் அவர்கள். ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் அந்த வரிகள்.

கொள்கை எதிரிகளாக இருக்கிறவர்களுக்குக்கூட, இன எதிரிகளுக்குக்கூட, உயர்ஜாதி என்ற ஆண வத்தோடு இன்னும் இருப்பவர்களுக்குக்கூட, ஸநாதனத்திற்கு எதிராகக் கருத்துச் சொல்லிவிட்டார். அதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது செருப்பை வீசுகிறேன்.  அதைச் செய்யச் சொல்லி கடவுளே சொன்னார் என்று திமிராக இன்னமும் பேசிக்கொண்டிருக்கின்ற ஆரிய ஸநாதனத்தின் முது கெலும்பை முறிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கின்ற பி.ஆர்.கவாய் அவர்கள் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்.

காலங்காலமாக ஒதுக்கி வைத்திருந்த ஒரு சமுதாயத்திலிருந்து…

ஒரு மனிதன், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு மனிதன், எட்டி நில், கிட்டே வராதே! படிக்காதே, நீ மனிதனதல்ல, நீ கீழானவன், உன்னைத் தொட்டால், குளிக்கவேண்டும் என்று சொல்லி, காலங்காலமாக ஒதுக்கி வைத்திருந்த ஒரு சமுதாயத்திலிருந்து ஒரு மனிதர், அம்பேத்கரைப் படித்து, குலதர்மத்தை அழித்து, பெரியாரை அறிந்து, சுயமரியாதை உணர்வைக் கொண்டு, மனுதர்மத்தைக் கடைப்பிடிக்காமல், தன்னு டைய உழைப்பினால், சொந்த அறிவினால் வாய்ப்பைப் பெற்று, வழக்குரைஞராகி, நீதிபதியாகி, உயர்நீதிமன்ற நீதிபதியாக, உச்சநீதிமன்ற நீதிபதியாக, பிறகு உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதியானார்.

சாதாரணமானதல்ல அந்தப் பதவி; குடியரசுத் தலைவருக்கே அவர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடியவர்.

அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த பதவியில் உள்ளவர்மீது,   ஸநாதனம் என்ற பெயரால், சாதாரணமாக செருப்பைத் தூக்கி வீசுகிறார் ஒருவர். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அப்படி செய்துவிட்டார் என்று சொல்லலாம்.

பெருந்தன்மைமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!

ஆனால், பெருந்தன்மைமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள், ‘‘அதை நான் அலட்சியப்படுத்துகிறேன், மற்றவர்கள் எல்லாம் அவரவர் வேலையைப் பாருங்கள்’’ என்று சொன்னார்.

ஆனால், அந்தப் பெருந்தன்மை மட்டும் நமக்குப் போதாது. நாம் எங்கே இருக்கிறோம்? நம்முடைய சமுதாயம் இன்றைக்கு எங்கே இருக்கிறது? என்பதை உணரவேண்டிய உணர்வைத் தோழர்களே, ஒவ்வொருவரும் பெற்றாகவேண்டும்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *