சென்னை, அக்.28 சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்காக 215 இடங்களில் வெள்ள நிவாரண மய்யங்கள் இயங்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (27.10.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் வகையில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மய்யங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண மய்யங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மய்ய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.புகாருக்கு `1913′ அழைக்கலாம்:
மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 2000-க்கு மேற்பட்ட மோட்டார் பம்புகள் ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளன. 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை வெள்ளம் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 150 இணைப்புகளுடன் கூடிய ‘1913’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இந்த புகார்கள் மீதும், சமூக ஊடகங்களில் வரும் புகார் மீதும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியத்தின் 2,149 களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொலைதூரப் படிப்பு
அங்கீகாரம் பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.28 பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: நடப்புக் கல்வியாண்டில் (2025-2026) பிப்ரவரி பருவச் சேர்க்கைக்கான இணையவழி, தொலைத்தூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைத்தூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
தகுதியான உயர்கல்வி நிறுவனங்கள் deb.ugc.ac.in/ எனும் வலைத்தளம் வழியாக நவ.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை ஆவணங்களுடன் நவ.20-ஆம் தேதிக்குள் யுஜிசி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின் விண்ணப்ப படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுசார்ந்த விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
