உலகச் செய்திகள்

பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் இருண்ட நாட்கள்
மேனாள் அதிபர் ஜோ பைடன் விமர்சனம்

வாசிங்டன், அக். 28- அமெரிக்க மேனாள் அதிபர் ஜோ பைடனுக்கு சிறுநீர்ப் பையில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்த நிலையில், எட்வர்டு கென்னடி மய்யம் சார்பில் வாழ்நாள் கால சாதனையாளர் விருது ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஜோ பைடன் பேசும்போது: வரையறுக்கப்பட்ட அதிகாரம் கொண்ட அதிபர் பதவி, செயல்படும் நாடாளுமன்றம் மற்றும் தன்னாட்சி உடைய நீதித்துறையை அமெரிக்கா சார்ந்துள்ளது. பெடரல் அரசு அதன் இரண்டாவது மிக நீண்ட முடக்கத்தை எதிர்கொண்டுள்ளது. டிரம்ப் அரசாங்கத்தின் மீது புதிய கட்டளையைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியாக நிதி இழப்பைப் பயன்படுத்தியுள்ளார். நண்பர்களே, இதில் எதையும் நான் மறைக்க முடியாது.பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் நிர்வாக அதிகார வரம்புகள் மீதான சோதனைகள் அதிகரித்துள்ளன. அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஊழியர்கள் பதவி விலகியுள்ளனர். இவை இருண்ட நாட்கள் ஆகும். அதில் இருந்து மக்கள் மீண்டு எழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மடகாஸ்கரில் முன்னாள்
அதிபரின் குடியுரிமைப் பறிப்பு

ஜோகன்னஸ்பர்க், அக். 28- மடகாஸ்கரில் அதிபரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அதிபரான ராஜோலினா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்பது உள்ளிட்ட விவரங்கள் முழுவதுமாக தெரியவில்லை. மேலும் அவரிடம் பிரான்ஸ் குடியுரிமையும் உள்ளது. இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமர் ஹெரிண்ட்சலமா அனைத்து மடகாஸ்கர் மக்களுக்கும் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை இருந்தால் அவர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டங்களை இயற்றும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மேனாள் அதிபர் ராஜோலினாவின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம் இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வெள்ளையின வாலிபர் கைது

லண்டன், அக். 28- இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளம்பெண் இன ரீதியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வெள்ளையின வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் மாகாணம் வால்சால் நகரில் வசிப்பவர் 20 வயது இந்திய வம்சாவளி இளம்பெண். பஞ்சாபி. கடந்த 25ஆம் தேதி, இவர் இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளி என்பதற்காக இளம்பெண்ணின் வீட்டின் கதவை உடைத்துச் சென்ற வெள்ளையினத்தவர் ஒருவர் பெண்ணை பாலியல் வன்முறை செய்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல் துறையில் புகார் தரப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை பெற்று வெள்ளையின வாலிபரின் ஒளிப்படத்தை வெளியிட்டனர். தீவிர தேடுதல் வேட்டையின் கீழ் 32 வயதான சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். கடந்த மாதம் ஓல்ட்பரி பகுதியில் இந்திய வம்சாவளியான சீக்கிய இளம்பெண் இதே போல இன ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய இளம்பெண்களுக்கு எதிரான இன ரீதியான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

30 நிமிடங்களில் அடுத்தடுத்து விபத்து! கடலில் விழுந்த அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர்

வாசிங்டன், அக். 28- அமெரிக்க கடற்படையில் விமானம் தாங்கி கப்பலில் இருந்து 30 நிமிடங்களில் போர் விமானம், ஹெலிகாப்டர் தென்சீனக்கடலில் விழுந்தது. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் பதிலடியாக மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டு இருந்த யூஎஸ்எஸ் நிமிட்ஸ் வாஷிங்டன்னில் உள்ள கிட்சாப் கடற்படை தளத்திற்கு திரும்புகின்றது. இந்நிலையில் யூஎஸ்எஸ் விமானம் தாங்கி கப்பலில் இருந்து சுமார் 30 நிமிடங்களில் ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் தென்சீனக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளது. இதில் எம்எச்-80ஆர் ஹெலிகாப்டரில் இருந்த 3 பணியாளர்கள் நேற்று முன்தினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 2 விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *