ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சி உரை!

* தமிழ்நாட்டின் அமைச்சரவையையே பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்!
* முதலமைச்சர் அண்ணா அறிவித்ததற்குக் காரணமானவர் கொள்கையாளர் முனுஆதி!
ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்!
முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சி உரை!

தாம்பரம், அக். 28- முனுஆதி நூற்றாண்டு விழாவில், ”பெரியாருக்கு தியாகிகள் மானியம் அளிக்கப்படுமா?” என்று தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பின ராக இருந்த முனுஆதி அவர்கள், முதல மைச்சர் அறிஞர் அண்ணாவைப் பார்த்து கேட்ட போது, ”தமிழ்நாடு அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்று சொன்ன அரிய வரலாற்றுச் சம்பவத்தை எடுத்துரைத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர் முனுஆதி அவர்களுக்கு நூற்றாண்டு விழா மற்றும் ஆணவக்கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா! எனும் இரு கருப்பொருள்களில், மேற்கு தாம்பரம் துரைசாமி (ரெட்டி) தெருவில் உள்ள, இராஜகோபால் திருமண மண்டபத்தில் 27.10.2025 அன்று மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி ஒன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். முன்னதாக தாம்பரம் மாவட்டக் கழக தலைவர் ப.முத்தையன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், தாம்பரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்  க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்கள் தாசன், காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாவட்டத் தலைவர் வி.பி.சிவராமன், சி.பி.அய்.(எம்) தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணன், மாவட்ட கழக ் செயலாளர் கோ.நாத்திகன், பொறியாளர் ப.சாமுவேல் எபிநேசர் (வி.சி.க.), ம.தி.மு.க. பகுதிச் செயலாளர் துரை.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்பித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து  மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப், தாம்பரம் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ்.ராஜா, தி.மு.க. தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியின் நாயகர் முனுஆதி அவர் களைப் பற்றியும், திராவிடர் இயக்கத்தின் சிறப்புகளைப் பற்றியும் வரலாற்றுத் தரவுகளுடன் எடுத்துரைத்தனர்.

”தமிழர் தலைவர்” என்பதைவிட, இந்திய அளவில் ஸநாதனத்தை எதிர்ப்ப வர்களை ஒருங்கிணைக்கும் ”இந்தியத் தலைவர்” என்று தமிழர் தலைவரை அழைப்பதே சாலப் பொருத்தமாகும் என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் குறிப்பிட்டது தற்காலத்திய படப்பிடிப்பாகும்.

அதைத் தொடர்ந்து, முனுஆதி அவர்களின் தனயன் ஆதி மாறன் நன்றியுரை வழங்கினார். அவர் தமது நன்றியுரையில், “தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள், திடீரென்று ஒருநாள் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, “முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழாவை நாங்கள் முதலில் நடத்துவோம்” என்று உரிமையுடன் சொல்லி, அதைப்போலவே அனைத்துக் கட்சியினர் முன்பும் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறார். இதைவிட பெருமை எங்களுக்கு வேறு என்ன இருக்கிறது! இதற்கு மேல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்று உணர்ச்சி வயப்பட்டு உரையாற்றி “இந்த நிகழ்ச்சி நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறி அமர்ந்தார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

கோவிலஞ்சேரி மதுரபாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.புருஷோத்தமன் இயக்க நன்கொடையாக வழங்கிய ரூ.10,000/-, மற்றும் மடிப்பாக்கம் இந்திரா பிரகாஷ் அளித்த விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000/- ஆகியவற்றை சோழிங்கநல்லூர் மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் தலைமையில், மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழினியன், ஜெயராமன் ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். அதே போல், ஆதி மாறன் குடும்பத்தினர் சார்பில், ஆதி மாறன், இயக்க நன்கொடையாக ரூ.25,000/- கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

இறுதியாக தாய்க் கழகத்தின் தலைவர்; தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  அவர் தமது உரையில், ”இந்த நிகழ்வின் கருப்பொருளாக இரண்டு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒன்று, மேனாள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரும், என்னாளும் கொள்கையாளராக திகழ்ந்தவருமான முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா! மற்றொன்று ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் பாட்சா அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு” என்று தெளிவுபடுத்தி விட்டு, இரண்டிலும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்திராத வரலாற்றுத் தகவல்களை எடுத்துரைத்தார்.

முன்னதாக 1929 இல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டுத் தீர்மானங்கள் 40 ஆண்டுகள்; 60 ஆண்டுகள் கழித்து சட்டங்களாக மாறியது. ஆனால், 2025 இல் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ’ஆணவக் கொலை களுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்’ என்ற தீர்மானத்திற்கு, இரண்டே இரண்டு வாரங்களில் அதை ஆய்வு செய்வதற்கு ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆயிரம் பாராட்டுகள் என்று அரங்கம் அதிர கைதட்டல்களுக்கு இடையே கூறினார். அதைத் தொடர்ந்து ஜாதி என்பது எவ்வளவு கொடூரமானது என்று பெற்ற பிள்ளைகளையே கூலிப் பட்டாளங்களை வைத்து கொலை செய்வதைக் கூறிவிட்டு இப்போது அரசியலிலும் கூலிப் பட்டாளங்கள் பெருகி விட்டன’ என்றும், கவுன்சிலர் இல்லை; எம்.எல்.ஏ.இல்லை; மந்திரி இல்லை; எடுத்த உடனேயே முதலமைச்சர்தான் என்று சிலர் புறப்பட்டு இருக்கிறார்கள் என்று நடப்பு அரசியலின் போக்கையும் தொட்டுக் காட்டினார்.

மேலும் அவர், ”முனுஆதிக்கு திராவிடர் கழகம் ஏன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது?” என்றொரு கேள்வியைக் கேட்டு, ”அண்ணா தலைமையில் அமைந்த ஆட்சியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் முனுஆதி தான் அண்ணாவைப் பார்த்து, ’தந்தை பெரியாருக்கு தியாகிகள் மானியம் வழங்கப்படுமா?’ என்று கேட்டார். அதற்கு அண்ணா உடனடியாக, ‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கைதான்” என்று சொன்னார். அந்தத் தகவலை வயிற்று வலி காரணமாக, சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரிடம் நான் சென்று சொன்னேன்.

அதைக்கேட்டு படுத்திருந்த பெரியார் சட்டென்று எழுந்து அமர்ந்து, ”மகிழ்ச்சி!”, ”மகிழ்ச்சி!”, ”மகிழ்ச்சி!” என்று சொல்லிவிட்டு, ’எனது வலி குறைந்தது’ என்ற நெகிழ்ச்சியான வரலாற்றுச் சம்பவத்தை, முன்னதாக தான் கேட்ட கேள்விக்குப் பதிலாகச் சொன்னார். தொடர்ந்து அவர், “இந்த அரிய வரலாற்றுக்குக் காரணமானவர் முனுஆதி! அதனால்தான் திராவிடர் கழகம் நன்றியோடு இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது” என்று நிகழ்ச்சிக்கான தோற்றுவாயையும் சுட்டிக்காட்டினார். கழகத் தலைவரின் உள்ளக்கிளர்ச்சி மக்களையும் தொற்றிக்கொண்டு,  பலத்த கையொலியாக வெளிப்பட்டன.

”தமிழர் தலைவர்” என்பதைவிட, இந்திய அளவில் ஸநாதனத்தை எதிர்ப்பவர்களை
ஒருங்கிணைக்கும் ”இந்தியத் தலைவர்” என்று சொல்ல வேண்டும்  – சி.மகேந்திரன்

 

தொடர்ந்து தாம்பரத்தில் குடியேறிய தோழர்  ஜீவா அவர்களைப் பற்றியும், அவரது மகளுக்கு தந்தை பெரியாரே மணமகன் பார்த்து அனைத்து தலைவர்களையும் அழைத்து திருச்சியில் நடத்திய திருமணம் பற்றியும், அதில் அண்ணா, ‘தமிழ்நாட்டில் உருவான தலைவர்கள் எல்லாம் தந்தை பெரியாரால் உருவானவர்கள் தான்’ எனும் அரிய கருத்தை பதிவு செய்ததையும் எடுத்துரைத்து, “திராவிடர் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக தோன்றிய இயக்கம்! பெண்ணடிமைத்தனம் போக்க உருவான இயக்கம்! அப்படிப்பட்ட இயக்கத்தின் நூறாண்டு வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியவர் நூற்றாண்டு விழாவின் நாயகர் முனுஆதி அவர்கள்” என்று கூறி தனதுரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக கிராமப்புற பிரச்சார இயக்கத்தின் மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, கலைமணி, அரும்பாக்கம் தாமோதரன், உடுமலை வடிவேல், தாம்பரம் மாவட்டத் தோழர்கள் சு.மோகன்ராஜ், மு.நாகவள்ளி, நூர்ஜஹான், ஒளிப்படக் கலைஞர் அருணா, இரா.சு.உத்ரா, சாந்தா, ஜெயகணேஷ், த.கலையரசி, சி.என்.அமுதா, பொறியாளர் ந.கரிகாலன், கடப்பேரி ஏ.வி.கிரி, மா.ராசு.கு.ஆறுமுகம், சண். சரவணன், மு.மணிமாறன், மா.குணசேகரன், மதியழகன், கரசங்கால் ரே.கதிர்வேல், சானடோரியம் பாலகிருஷ்ணன், அ.கருப்பையா, நா.குணசேகரன், எஸ்.ஆர்.வெங்கடேஷ், மா.சு.ராமச்சந்திரன், து.கார்த்திகேயன், பழனிச்சாமி, பெனிடிக், ரவிச்சந்திரன் ஆவடி மாவட்டத் தோழர்கள் க.இளவரசு, க.தமிழ்ச்செல்வன், அம்பத்தூர் ராமலிங்கம், சரவணன், துரை.முத்துகிருட்டிணன், ஆ.வெ.நடராஜன், சங்கர், இரணியன், வேல்முருகன், கார்த்திகேயன் செங்கல்பட்டு மாவட்டத் தோழர்கள் செம்பியன், திருக்குறள் வெங்கடேசன், சமத்துவமணி, தீனதயாளன், ஆதிவரசன் செங்கல்பட்டு மாவட்டத் தோழர் சே.சகாயராஜ் உள்ளிட்டோர் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த இருபால் தோழர்களும் திருமண மண்டபத்தின் கீழரங்கம், மேலரங்கம் இரண்டிலும் அமர்ந்து நிகழ்ச்சியை கேட்டதோடு, இருக்கைகள் இல்லாமல் நின்று கொண்டும் பார்த்து, திராவிடர் இயக்கத்தின் அரிய வரலாற்று அடிச்சுவடுகளை கேட்டுத் தெரிந்து பயன் பெற்றனர். இறுதியாக கழகத் தலைவர் தோழர்கள்: அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *