திருச்சி, அக்.28- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் கலையரங்கத்தில் 10.10.2025 அன்று ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகப் போட்டியானது பள்ளியின் கலை மற்றும் நடன மன்றம் சார்பில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் குழு மிகச் சிறப்பாகப் பங்கேற்று மூடநம்பிக்கை மற்றும் ஜாதிய வன்கொடுமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண்கல்வியின் அவசியம், சமுதாய முன்னேற்றத்திற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் போன்ற கருத்துகளை உள்ளடக்கிய நாடகங்களை மிகக் குறுகிய நேரத்தில் நடித்துக் காட்டி அசத்தினர்.
போட்டியின் முடிவில் ஏழாம் வகுப்பு மாணவி எஸ். திவ்யாசிறீயின் அணியினரின் பெண் கல்வி குறித்த நாடகம் முதலிடமும், ஆறாம் வகுப்பு மாணவி.எஸ்.தன்யாசிறீ அணியினரின் மூடநம்பிக்கைக் குறித்த நாடகம் இரண்டாமிடமும், ஆறாம் வகுப்பு மாணவர். வி. அஸ்வர்த் அணியினரின் ஜாதியக் கொடுமை குறித்த நாடகம் மூன்றாமிடமும் பெற்றது.
வெற்றி பெற்ற அணியினருக்குப் பள்ளி முதல்வர், முனைவர்.க.வனிதா, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர், மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவின் உதவி இயக்குநர், முனைவர். டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் இணைந்து பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்தார். இப்போட்டிக்குப் பள்ளியின் இளங்கலை தமிழாசிரியை, வெர்ஜின் ஷிராணி மிகச் சிறப்பாக நடுவர் பணியாற்றினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் கலை மற்றும் நடன மன்றத்தின் பொறுப்பாசிரியை, ஆர்.பிரான்ஸிட்டா உள்ளிட்ட குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்
