
சென்னை, அக். 28- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இணைந்து “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் மக்களிடம் சமூக நீதிப் பார்வையையும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் போட்டிகளை அறிவித்துள்ளது.
மக்களிடையே பிரிவினையை தூண்டி பிரித்தாளும் சக்திகளின் ஆதிக்கம், போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சு ஆகியவை அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்த முயற்சியை முன்னெடுக்கின்றது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் சமூகநீதி, பகுத்தறிவு, சமத்துவம், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்க இந்த விழிப்புணர்வுப் போட்டிகள் எட்டு பிரிவுகளில் நடைபெறவுள்ளன. இந்த முயற்சி, தமிழ்நாட்டில் அறிவியல் சிந்தனையும் சமூக ஒற்றுமையும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாகும்.
போட்டிப் பிரிவுகள்:
வயதுவரம்பு இல்லாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
* பேச்சுப் போட்டி – மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை, வெறுப்புப் பேச்சு, இடஒதுக்கீடு போன்ற தலைப்புகளில் 3 நிமிட காணொலி. சிறந்த 10 பேர் இரண்டாம் சுற்றுக்கு சென்னைக்கு அழைக்கப்படுவர்.
* கட்டுரைப் போட்டி – சமத்துவம், பெண்ணியம், சமூகநீதி உள்ளிட்ட தலைப்புகளில் 3 பக்கங்கள் வரை கட்டுரை. Word/PDF கோப்பாக அனுப்ப வேண்டும்.
* கவிதைப் போட்டி – அறிவு, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றை மய்யமாகக் கொண்ட 16 வரிகளுக்குள் மரபு/புதுக்கவிதை.
* வாசகம் எழுதும் போட்டி – சமத்துவம், மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வாசகங்கள். எத்தனை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* குறும்படப் போட்டி – கருத்துச் சுதந்திரம், தலைமுறை மாற்றம் போன்ற தலைப்புகளில் 1.30 நிமிட காணொலி.
* மீம், ஒளிப்பட, ஓவியப் போட்டிகள் – சமத்துவம், அறிவியல் மனப்பான்மை, வெறுப்புப் பேச்சு போன்ற தலைப்புகளில் JPG, PNG, PDF கோப்புகள் அனுப்ப வேண்டும்.
படைப்புகளை அனுப்பக் கடைசி நாள் 31.10.2025 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள பின்வரும் QR கோடுகளை ஸ்கேன் செய்யலாம்.
