ஆரோக்கிய உணவுமுறை பட்டியல் என்று இப்போது எடுத்தால் அதில் கண்டிப்பாக நட்ஸ் இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது நமது உணவுகள் சத்தானதாக இல்லை. அதனால் உடல் ஆரோக்கியத்தைப்பெற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட நட்ஸ் வகைகளில் முக்கியமான ஒன்றுதான் அக்ரூட் பருப்பு, அதாவது வால்நட்ஸ். ஒருகாலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே இதனை சாப்பிட்டு வந்தார்கள். அப்படி அரச குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்: வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் (ALA) சிறந்த மூலமாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படும் ஒரே பருப்புவகை வால்நட்ஸ் ஆகும். அதிக கொழுப்பு பெரும்பாலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இதய நோய்களை ஏற்படுத்துகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன.
மூளை ஆரோக்கியம்: வால்நட்ஸில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பாலிபினால்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை மெதுவாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடல் ஆரோக்கியம்: குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை எளிதாக்கவும், குடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகின்றன. வால்நட்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் வால்நட் சாப்பிடும் பெரியவர்களுக்கு குடலின் நுண்ணுயிர் உற்பத்தி அதிகமாக இருப்பதாகக் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன
புற்றுநோய் தடுப்பு: குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வால்நட்ஸில் காணப்படும் சேர்மங்களை கொண்டு யூரோலிதின் (தசைகளின் வலிமையை மேம்படுத்த உதவும் ) கலவையை உற்பத்தி செய்கின்றன. இந்த யூரோலிதின்கள் சில புற்றுநோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்
