டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவ ஆலோசனை

மருத்துவம்

டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ்

இராஜா முத்தையா

மருத்துவக் கல்லூரி,

சிதம்பரம்

 

டெங்குக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு வெப்ப மண்டலத் தொற்று நோய் ஆகும்.  இது ஏட்ஸ் ஏஜிப்தி (AEDES AEGYPTI)
எனும் கொசுக்களால் உண்டாகிறது. இந்்நோய் வந்தால்  கடும் காய்ச்சலுடன், கடுமையான மூட்டுவலி, தசைவலி, தலைவலி, தோல் அரிப்பு போன்ற உணர் அறிகுறிகள் ஏற்படும். இது மிகவும் உடலை வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது.

டெங்கு வைரஸ் இனத்தில் நான்கு வகைகள் உள்ளன. இந்த வைரசுகளில் ஏதேனும் ஒரு வகை நம்மைத் தாக்கினாலும் டெங்கு காய்ச்சல் வந்து விடும். இக்கொசு (ஏட்ஸ் ஏஜிப்தி) இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள்  பொதுவாக பகலிலேயே மனிதர்களை பொதுவாக விடியற் காலையிலும், பிற்பகலிலும் குறிப்பாக பெண் கொசுவே கடிக்கின்றது. ஒருதரம் கொசு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிவகுக்கும். நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோய் இல்லாத மற்ெறாருவரை இக்கொசு கடிக்குமாயின் இவ்வைரஸ் பரவக்கூடும். இவ் வைரஸ்கள் கொசுவுக்குக் கேடு தரும் விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. மனிதனுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர் நிலைத் தேக்கங் களில் முட்டை இடுவதை இக்கொசுக்கள் விரும்புகின்றன. ஏனெனில் அப்போதுதான் தமது இரத்த உணவைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இரத்தத்தில் உள்ள  புரதம் அது முட்டையிடப் பயன்படுகிறது.

கொசுக்கள் பொதுவாக சாக்கடை போன்ற நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழ்வது வழக்கம். ஆனால் டெங்கு கொசுக்களோ சுத்தமான நீர் நிலைகளில் மட்டுமே வளரக்கூடியது. ஆகவே தான் மழை ஆரம்பித்த காலத்திற்குப்பிறகு டெங்குக் காய்ச்சல் காணப்படுகிறது.

பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கும்,  சிறுவர்களுக்கும் கடுமையான நோய் உண்டாகின்றன. ஆண்களைக்காட்டிலும் கூடுதலாகப் பெண்கள் பாதிக்கப்படு கின்றனர். நீரிழிவு, ஆஸ்மா போன்ற நீண்ட கால நோய்கள் உள்ளவர்களுக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாதிப்பை உண்டாக்கும்.

நோய் ஆரம்பத்தில் மிதமான அறிகுறிகள் இருப்பினும் நான்காம் நாளில் காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்புடன் எலும்பு வலியுடன் சிவப்புப் புண்களும் தோலில் தோன்றும், இதன் காரணம் டெங்கு வைரஸ் இரத்தக் குழாய்களைப் பாதிப்பதால் அவற்றில் துளை விழுந்து இரத்தத்தைக் கசியவிடுவதே ஆகும்.

நோயை அறிதியிடல்

ஆரம்ப கட்டத்தில் நோயை ஏனைய வைரஸ் நோய்களிலிருந்து வேறுபடுத்தி அறிவது சுலபமாகிறது. அறிகுறியாக காய்ச்சலுடன்  குமட்டல், வாந்தி, கண்ணுக்குப்பின்னால் வலி, தோல் அரிப்பு, உடல்வலி காணப்படும். பிறகு வெள்ளை இரத்த அணுக்கள் குறைவுபடும். கடுமையான நோய் உருவாகும் முன்னர் தோன்றும் எச்சரிக்கை அறிகுறிகள்  வயிற்று வலி, வாந்தி, கல்லீரல் வீக்கம், மூக்கு வாய் போன்றவைகளில் மென் சவ்வு இரத்தக் கசிவு, உயர் சிகப்பணுக்கள் அளவு வீதம், இரத்தத் தட்டு குறைவு (பிளேட்லட்) ஆகியவை உண்டாகும்.

பரிசோதனை:

நோயின் ஆரம்ப காலத்தில் இரத்தத்தட்டுக்கள்  குறையும், கல்லீரல் நொதிகளில் அளவுகள் மிகையாகும் நோயின் கடுமை கூடும்போது இரத்த அடர்த்தி கூடும். அல்புமின் புரதம் இரத்தத்தில் குறைந்து காணப்படும். இத்துடன் சில சமயம் நுரையீரல் உறையில் நீர், வயிற்றில் நீர் கோர்ப்பு ஆகியவை உண்டாகும். சிறுநீர் பரிசோதனையில் சிறுநீருடன் இரத்தம் கலந்துள்ளதை காணலாம்.

மருத்துவம்:

நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு (தண்ணீர், உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி) தேவை. சிலருக்கு  ஏற்படும் அதிர்ச்சி நிலை அப்போது குளுகோஸ் மற்றும் உப்பு கலந்த நீர் சிரை  வழியாக ஏற்ற வேண்டாம்.  இரத்தத் தட்டு அணுக்கள் குறைந்த நிலையில் அதை ஈடுகட்ட இரத்த தட்டணுக்கள் செலுத்த வேண்டும். இதற்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறவேண்டும்.

ஆரம்பத்தில் காய்ச்சலுக்கு பாராசிட்டம்மால் பயன்படுத்தப் படுகின்றது. ஆஸ்பிரின், ஸ்டீராய்டு, மற்றும் வலிபோக்கி மருந்துகளை (NSAID) அறவே உண்ணக்கூடாது, ஏனெனில் இவை இரத்தப் போக்கை மேலும் மிகையாக்கிவிடும். மேலும் தசைவழியே ஊசி போடுதல் போன்ற இரத்தப் போக்கை ஏற்படுத்த வல்ல மருத்துவ முறைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

நிலவேம்பு:

பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நிலவேம்பு குடிநீர்,  பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை காலை, மாலை, ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இரத்தத் தட்டணுக்கள் அளவு குறையாமல் பாதுகாக்கப்படுவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

தடுப்பு முறை:

தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே தடுப்பு முறையாகும். கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்,  அவற்றின் வசிப்பிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வசிப்பிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின்  பெருக்கத்தைத்  தடுக்கின்றது.  பூச்சிக்கொல்லி மருந்துகளால் மனிதருக்கு ஏற் படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்தில் தேங்கிய  நீர்நிலைகளை வெறுமைப்படுத்தும் முறையே சாலச் சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசு வலை உபயோகிப்பது கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும். மழை பெய்து நீர் தங்கும் நேரங்களில் வீட்டைச் சுற்றி சாக்கடை மட்டுமின்றி; எங்கும் தண்ணீர் தேங்காது பாதுகாக்க வேண்டும். இக்காலங்களில் நகராட்சியின் மூலம் டெல்டா மெத்ரின் மருந்து தெளிக்கப்படுகிறது. குடிநீர் தொட்டிகளில் டெமிபாஸ் (TEME PHOS) மருந்தைத் தெளிக்க வேண்டும். தொட்டிகளை நன்றாக மூடி வைக்க வேண்டும். குப்ைபத்தொட்டி, தேங்காய்மூடி, ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர பூந்தொட்டி அழகு ஜாடி, உடைந்த ஒடு, தகரடப்பா, டயர்கள், வாளி, பேப்பர் டம்ளர் ஆகியவற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது கொசு வளர்வது தடுக்கப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *