சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா! உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்! சுயமரியாதைத் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை

4 Min Read

சென்னை, அக்.27-சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட வாழ்வி ணையர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுமாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.10.2025) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொக்கர் அவர்களின் பேரனும், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சிறீ ராஜா சொக்கர் அவர்களின் மகனுமான சிவராஜா சிறீ ராஜா – எஸ். சாலுபாரதி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, ஆற்றிய உரை வருமாறு:

வருகை தந்திருக்கக் கூடிய உங்கள் அனைவ ருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த திரு. சிறீராஜா சொக்கர் – திருமதி பூர்ணிமா இணையரின் அருமை மகன் சிவராஜா சிறீராஜா அவர்களுக்கும், தொழிலதிபர் சரவணன் – சுசிலா இணையரின் அருமை மகள் சாலுபாரதி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, மணவிழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகின்ற வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தந்தவர் அறிஞர் அண்ணா!

இந்த மணவிழா நிகழ்ச்சி ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரி யாதை உணர்வோடு நடை பெறுகின்ற திருமணமாக நடந்தேறியிருக் கிறது என்பது உங்களுக் கெல்லாம் நன்றாக தெரியும். இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதைத் திரும ணங்கள் 1967-க்கு முன்பு நடைபெற்றது என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தைப் பெறமுடியாத நிலையில் அந்த திருமணங்கள் நடந்தேறி இருக்கின்றன. ஆனால், 1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று, முதன் முதலாக சட்டமன்றத்தில் முதலமைச்சராக நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இன்று நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற நிலையில் நடந்தேறியிருக்கிறது. நம்முடைய சிறீராஜா சொக்கர் அவர்கள், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரின் தந்தையார் சொக்கர் அவர்கள், விருதுநகர், சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து, வணிகர்களுடைய முன்னேற்றத்திற்கு, வணிகர்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் பாடுபட்டிருக்கிறார்; பணியாற்றியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

தலைவர் கலைஞர் அவர்களின் கையால் முதன்முதலாக தமிழ்நாடு அரசின் காமராசர் விருதை நம்முடைய சொக்கருக்குத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்து முதன்முதலாக அவர் வழங்கினார்.  நாட்டின் ஒற்றுமைக்காக வும், ஒரே அணியில் பயணிக்கக் கூடியவை தி.மு.க.வும் – காங்கிரசும்! திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் பேரியக்கமும் ஒரு காலத்தில், வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்றைக்கு நாட்டின் நன்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக் காகவும், அதையும் தாண்டி,  நாட்டின் ஒற்றுமைக் காகவும், ஒரே அணியில் – அதே சிந்தனையுடன் நாம் பயணித்துக் கொண்டி ருக்கிறோம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

அதிலும், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது காட்டுகின்ற அன்பை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. “மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பேசுகின்ற போது, விளிக்கின்ற போது யாரையும் நான் சகோதரர் என்று சொன்னது கிடையாது; ஆனால், ராகுல் காந்தியை பற்றி மட்டும் நான் விளிக்கின்றபோது அருமை சகோதரர் என்று நான் சொல்வதுண்டு. காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், அவர் என்னை அண்ணன், மூத்த அண்ணன் – எப்போது பார்த்தாலும், என்னிடம் ஃபோனில் பேசுகின்ற போதும் சரி – நேரடியாக பார்க்கும் போதும் ‘மை டியர் பிரதர்’ என்று தான் சொல்வார். அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது. எதற்காக சொல்கிறேன் என்றால், இந்த அளவுக்கு அரசியல் நட்பு மட்டுமல்ல; கொள்கை உறவாகவும் வலுப்பெற்று, இந்தியாவின் குரலாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

இந்த உணர்வைதான் நாங்கள் எல்லோரிடமும் எதிர்பார்க்கிறோம். தனிமனிதர்களுடைய நலனைவிட நாட்டின் நலன்தான் முக்கியம் என்ற உணர்வோடு, அந்த நட்புணர்வு இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இந்த இரண்டு அரசியல் இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற இந்தப் புரிதலும் – கொள்கை உறவும் நிச்சயம் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும். அது உறுதி.

குழந்தைகளுக்குத்  தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்!

இந்த மகிழ்ச்சியான நேரத்தில், நான் மணமக்களிடம் அன்போது நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மணமக்கள் தங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று நான் இந்த நேரத்தில், நான் பெற்றிருக்கக்கூடிய அந்த உரிமையோடு, அந்த குடும்பத்திற்கு என்னுடைய வேண்டுகோளாக வைத்து, மணமக்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திடவேண்டும்.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லியபடி, “வீட்டிற்கு விளக்காக – நாட்டுக்குத் தொண்டர்களாக” இருந்து மணமக்கள் வாழ்க!  வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.  நன்றி! வணக்கம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை யாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *