பாரீஸ், அக். 27– பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சிகம் லூவ்ரே. கடந்த வாரம் கிரேன் ஒன்றின் உதவி மூலம், மியூசியத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்த கொள்ளையர்கள் மன்னர் நெப்போலியன் காலத்து கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகள் அணிந்த நெக்லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு 102 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரீஸ் சிறப்பு படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்
கமலா ஹாரிஸ் கூறுகிறார்
வாசிங்டன், அக். 27– அமெரிக்க வரலாற்றில் பெண் அதிபர் நிச்சயம் இடம்பிடிப்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அண்மையில் பன்னாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பைடன் பாதியில் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்றாட்டை பூர்வீகமாக கொண்டவர்.
போட்டி
“நிச்சயம் எனது பேரப் பிள்ளைகள் வெள்ளை மாளிகையில் பெண் அதிபர் ஒருவர் பதவியில் இருப்பதை தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அது நானாக கூட இருக்கலாம். அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அரசியலில் எனக்கு எதிர்காலம் உள்ளதாக நம்புகிறேன்.
நான் கருத்துக் கணிப்புகளை கருத்தில் கொள்வது இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டேன், இங்கு அமர்ந்து பேசி இருக்கவும் மாட்டேன். தன் மீதான விமர்சனங்களை அதிபர் டிரம்ப்பால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நிலநடுக்கம்
பெய்ஜிங், அக். 27– சீனாவின் ஜிலின் மாகாணம் ஹன்சுன் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் குலுங்கின.
இதன் அதிர்வினை உணர்ந்த மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
