அறிவாசான் வார்த்தளித்த அறிவாயுதம் ஆசிரியர்! தமிழர் தலைவரின் தமிழ்நாடு தழுவிய பரப்புரைப் பெரும் பயணம்

6 Min Read

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி’’
‘‘இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
முனைவர் அதிரடி
க.அன்பழகன்
மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம்

திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் 23.10.2025 அன்று நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆட்சி’’ ‘‘இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ எனும் தலைப்பில், வரும் 29.10.2025 முதல் 7.1.2026 வரை முதற்கட்ட பரப்புரைத் தொடர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

22 நாட்களில், 40 பொதுக் கூட்டங்களில் பரப்புரையாற்றுகிறார்.

கழக மாவட்டங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதி மாவட்டங்களில் முதற்கட்ட பரப்புரை செய்திட திட்டமிட்டு மாவட்ட கழகத்தினர் பணியாற்றத் தொடங்கி விட்டனர்.

நாடு தழுவிய அளவில் பரப்புரைப் பய ணங்கள் என்பது தமிழர் தலைவரின் பொது வாழ்வில்  புதிதல்ல –  முதலுமல்ல. இதற்குமுன் பல்வேறு முறை தமிழ்நாடு தழுவிய பரப்புரை பயணங்கள் மேற்கொண்டு ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பெண்ணுரிமை, அனைத்து ஜாதியினரின் அர்ச்சகர் உரிமை, மூடநம்பிக்கை  ஒழிப்பு, வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, காவிரி நீர் உரிமை காத்திடல், ஈழத் தமிழர் பிரச்சினை, நுழைவுத் தேர்வு – நீட் எதிர்ப்பு மற்றும் நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல் பரப்புரை என பல பரப்புரை பெரும் பயணங்களை மேற்கொண்டு – வெற்றிகளைக் குவித்திட்ட தமிழர் தலைவரின் இப்பயணம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் நடைபெறுகிறது.

வருகிற டிசம்பர் 2ஆம் நாள் தமிழர் தலைவரின் 93ஆம் பிறந்த நாள். 92 வயது நிறைவுற இன்னும் ஒரு மாத இடைவெளி இருக்கிறது.

92 வயதில் 22 நாட்களில் 40 பொதுக் கூட்டங்களில் உரையாற்றிடச் செல்லும் சாதனைக்குரிய பெரும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சியின் சித்தாந்தத்தை விளக்கி, அந்த ஆட்சியின் விளைவாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள், சமூகநீதி, மதச் சார்பின்மை, அறிவியல் மனப்பான்மைகளுக்கு எதிராக நடைபெறும் மதவெறி ஆட்சியின் போக் கையும்  – தமிழ்நாட்டில் திராவிடம் காக்க – இனம், மொழி காக்க, மக்கள் உரிமை காத்து தமிழ்நாட்டை வளமாக்கும், வலிமையாக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் – திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பினையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இம்மாபெரும் பரப்புரை பெரும்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் தழுவிய பரப்புரைப் பெரும் பயணங்களால் மக்களிடையே விழிப்புணர்வை  உருவாக்கியும் – எந்த நோக்கத்திற்காக எழுச்சிப் பயணம் மேற்கொண்டு அனல் கக்கும் பரப்புரை செய்யப்பட்டதோ அவற்றிற்கு கைமேல் பலனாக வெற்றிகளைக் குவித்திட்ட வரலாற்றுக்குச் சொந்தக் காரர் நம் தலைவர் – கழகத் தலைவர் – தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் என்பதற்கு இதோ சில வெற்றிகளின் பட்டியல்.

நுழைவுத் தேர்வு ஒழிப்பு

நெய்வேலி நிலக்கரி – நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி

காவிரி நடுவர் மன்றம் அமைப்பு

இடஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அடிப்படை (9000 ரூபாய் உச்சவரம்பு) ஒழிப்பு

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

ஹிந்தித் திணிப்பை தடுத்து நிறுத்தல்

மண்டல் பரிந்துரை அமலாக்கம்

நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்தல்

விஸ்வ கர்மா திட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடுப்பரண்

தேர்தல்களில் பார்ப்பனரல்லாதார் வெற்றியை நிலைநாட்டல்

இப்படி ஏராளமான வெற்றிகள் அணி வகுக்கும்.தமிழர் தலைவரின் இந்தபரப்புரை பெரும் பயணம் மிக முக்கியமான பொருளில்  அமைந் துள்ளது.

‘‘ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி

திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’

இரண்டு சித்தாந்தங்களில், ஆரிய சித்தாந்தம் – ஒன்றிய ஆட்சியை இயக்குகிறது.

திராவிட சித்தாந்தம் – திராவிட மாடல் ஆட்சியை  இயக்குகிறது.

இந்த இரு ஆட்சிகளை – நேர் எதிர் திசையிலமைந்த சித்தாந்தங்களின் ஆட்சிகளை மக்கள் மத்தியில், உள்ளது உள்ளபடி விளக்கி உரையாற்றி, பா.ஜ.க. ஆட்சி ஒழிக்கப்பட வேண்டியது, திராவிட மாடல் ஆட்சி காக்கப்பட வேண்டியது என்பதற்குத் தேவையான ஆதாரங்களை – புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லி பரப்புரை ஆற்றிட கழகத் தலைவர் பம்பரமாய் சுற்றிச் சுழன்று பணியாற்றிட அணியமாகி விட்டார். களம் காணக் காத்திருக்கிறார்.

பரப்புரைப் பயணத்தில் தனது உரையும் – அதற்கு வலுவூட்டும் நூல்களும் – பல தலைப்புகளில் பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் நூல்களும் மக்களுக்குக் குறைந்த விலையில் வாங்கிப் படித்துப் பரப்பிட வாய்ப்பாக தனி ஊர்தி  – என இப்பயணம் பல்நோக்கில் திட்டமிட்டு நடைபெறவுள்ளது.

ஒன்றியத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி   அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து ஒரே ஆட்சி, ஒரே சட்டம், ஒரே கட்சி, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என்று உருவாக்கத் திட்டமிடுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக, ஆளுநரைப் போட்டி அரசாங்கம் நடந்திடச் செய்து – சட்டமன்றம் நிறைேவற்றிய எந்தச் சட்டமும் நிறைவேறி விடாமல் தடுத்திடச் செய்திடும் சதிகள் – உச்சநீதிமன்றம் சொன்னாலும் கேட்க மறுக்கும், சட்டத்தை மதிக்க மறுக்கும் போக்கு  –  மாநிலத்தை முடக்க, மக்களின் வளர்ச்சியை தடுக்க, தர வேண்டிய நிதிகள் அனைத்தையும் மறுத்திடும் மாபெரும் குற்றத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கூசாமல் நாளும் செய்கிறது.

கல்வி, வேலை வாய்ப்பு, அதற்குரிய சமூகநீதித் தத்துவத்தை முற்றிலும் ஒழிக்க, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க. ஆட்சி கங்கணம் கட்டி காரியமாற்றுகிறது.

தமிழ்மொழி, தமிழினம், திராவிடப் பண்பாடு ஒழிக்கப்பட எதையும் செய்ய சூழ்ச்சித் திட்டம், திராவிட ஆட்சியை ஒழிக்க திராவிட கட்சிகளையும், திராவிடர்களையும் பயன்படுத்தி ஆரியக் கூத்தாடும்  ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்டம் போடுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சிக்கு  – அதன் மிரட்டல் போக்குக்குப் பணியாமல் ‘‘எந்தக் கொம்பனும் திராவிட மாடல் ஆட்சியினை ஒழிக்க முடியாது. தி.மு.க. மீது தொட்டுக்கூட பார்க்க முடியாது’’ எனத் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முழக்கமிடுகிறார்.

மக்கள் நலத் திட்டங்கள் – பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள்  – கல்வி வளர்ச்சி –  சமூகநீதி காத்தல் – வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் விடா முயற்சி என்ற திசையில்

குழந்தைகள் நலத் திட்டம்

தாய் நலத் திட்டம்

குடும்பத் தலைவி உரிமைத் தொகை

மாணவிகளுக்கு உதவித் தொகை

மாணவர்களுக்கு உதவித் தொகை

மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்

இல்லம் தேடி மருத்துவம்

அயல்நாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு

உங்களுடன் முதல்வர் ஸ்டாலின்

விளையாட்டு மேம்பாடு

சீரான சட்ட ஒழுங்கு

சிறப்பான நிர்வாகம்

என பல்வேறு வகையில் மேம்பட்ட ஆட்சியை நடத்தி, தமிழ்நாட்டை இந்தியாவில் முதல்தர மாநிலமாக்கிடும் ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி வரும் இத்திராவிட மாடல்  ஆட்சி தொடர, தி.மு.க. தலைமை யிலான கூட்டணி 2026 தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டை அசுர பலத்தோடு ஆண்டிடவும், ஆரிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திடவும், தமிழர் தலைவரின் பரப்புரை பெரும் பயணம் அடித்தளமாக அமைய உள்ளது.

இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையே நடைபெறும் போரின்  வெற்றியை 2026இல் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்திட, 92  வயதில் தமிழர் தலைவர் பரப்புரைப் பயணம் தொடங்க உள்ளார். முதற்கட்டம், பின் இரண்டாம் கட்டம் – 69 மாவட்டங்களில் அறிவார்ந்த – ஆதாரங்கள் நிறைந்த ஆரியத்தை வீழ்த்தும் அனல் தெறிக்கும் பரப்புரைப் பயணம்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி என மக்களிடையே விளக்கிக் கூறிட,  இதுதான் திராவிட – திராவிட மாடல் ஆட்சி என்பதை மக்கள் மீண்டும் நிறுவிட,  தமிழர் தலைவர் பரப்புரை பயணம் வென்றிட திட்டமிட்டு உழைப்போம் – திராவிடம் காப்போம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *