உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜின் வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பிற அதிகாரிகள் மீதான கட்டாய மதமாற்றக் குற்றச்சாட்டுகள் தொடர் பான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேச அரசின் மதமாற்ற தடைச்சட்டம் ‘சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம்’ என்றும், இதன் சில பிரிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய கூறுகளை கவனத்தில் கொள்ளாமல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று கூறியது.
ஒருவர் தான் தற்போது பின்பற்றும் மதத்தைத் தவிர வேறு ஒரு மதத்தை ஏற்க விரும்பினால், இந்தச் சட்டம் மிகவும் கடுமையான குற்றங்களை அவர் மீது சுமத்துவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மதமாற்றத்திற்கான முன் மற்றும் பின் அறிவிப்பு நடைமுறைகள் மிகவும் கடினமானதாகவும், தனிநபரின் விருப்பத்தில் அரசின் தலையீடு உள்ளதாகவும் அமர்வு கருதியது.
மதமாற்ற நடைமுறையில் மாநில அதிகாரிகளின் தலையீடு தெள்ளத் தெளிவாகத் தெரிவதாகவும், மதமாற்றத்திற்கான ஒவ்வொரு வழக்கிலும் மாவட்ட ஆட்சியர் காவல்துறை விசாரணைக்கு வலுக்கட் டாயமாக உத்தரவிடுகிறது என்றும் நீதிமன்றம் குறிப் பிட்டுள்ளது.
மதம் மாறிய நபரின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது, தனியுரிமைக்கான அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு களுக்கு இணங்குமா? என்று அமர்வு கேள்வி எழுப் பியது. இதற்காக கே.எஸ். புட்டசுவாமி தீர்ப்பை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள ‘மதச்சார்பற்ற’ என்ற சொல், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு ஆகும். மேலும், அரசியலமைப்பின் பகுதியில் உத்தரவாத மளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், குறிப்பாக சரத்து 25 (மத சுதந்திரம்), இந்தச் சட்டத்தின் சில பிரிவுகளால் மீறப்படுவதையும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
இந்திய மக்கள் சிந்தனை, கருத்து, நம்பிக்கை, மதம் மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம் பெற்றுள்ளனர் என்றும், இந்தச் சுதந்திரம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் வெளிப்பாடு என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஷபின் ஜஹான் / அசோகன் கே.எம். வழக்கை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், மதம் மற்றும் நம்பிக்கை போன்ற விஷயங்களில் ஒரு தனிநபரின் உரிமை மிக உயர்ந்தது என்றும், இவற்றை கட்டுப்படுத்தவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ சட்டத்திற்கோ அல்லது அரசுக்கோ அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தது.
சட்டத்தின்படி, மதமாற்றம் செய்ய விரும்புபவர், மதமாற்றத்திற்கு 60 நாட்களுக்கு முன் வற்புறுத்தல் இல்லை என்று அறிவிக்க வேண்டும். மதமாற்றம் செய்பவரும் ஒரு மாதத்திற்கு முன் அறிவிக்க வேண்டும். இதன் பின்னர், காவல்துறை விசாரணை கட்டாயமாகும் (பிரிவு 8). மதமாற்றம் முடிந்த பிறகு, மதமாற்றம் செய்தவர் 60 நாட்களுக்குள் மீண்டும் ஓர் அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பின் நகலை அதிகாரிகள் அறிவிப்புப் பலகையில் ஒட்டவேண்டும்.
மேலும், மதம் மாறியவர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த 21 நாட்களுக்குள் அதிகாரியின் முன் நேரில் ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் இது போன்ற உத்தரப் பிரதேச மதமாற்ற தடைச் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மதவாத சக்திகள் மீதான சம்மட்டி அடியாகும்.
இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியத்தை உருவாக் குவோம் என்று மிக வெளிப்படையாகக் கூறுவோர் – இந்தத் தீர்ப்புக்குப்பின் பேசினால், செயல்பட்டால் அவர்கள் சட்டப்படியான குற்றவாளிகள் என்பது நினைவில் இருக்கட்டும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் – வரவேற்கிறோம்!
