* ‘பெரியார் உலக’ திட்டத்தைத் தொடங்கிய நேரத்தில், 100 கோடி ரூபாய் திட்டமா?
உங்களால் முடியுமா? என்று எங்களைப் பல பேர் அச்சுறுத்தினார்கள்!
* அந்தத் திட்டம் நமக்காக அல்ல; ஒரு வீரமணிக்கோ அல்லது
இங்கே இருக்கின்ற தோழர்களுக்கோ என்றால், அது முடியாது!
தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
தஞ்சை, அக்.27 – ‘பெரியார் உலக’ திட்டத்தைத் தொடங்கிய நேரத்தில், எங்களைப் பல பேர் அச்சுறுத்தினார்கள், 100 கோடி ரூபாய் திட்டமா? எல்லோருக்கும் மலைப்புதான்; எல்லோருக்கும் திகைப்புதான்; உங்களால் முடியுமா? என்று கேட்ட நேரத்தில், அந்தத் திட்டம் நமக்காக அல்ல; ஒரு வீரமணிக்கோ அல்லது இங்கே இருக்கின்ற தோழர்களுக்கோ என்றால், அது முடியாது. ஆனால், பெரியாருக்கு என்று சொன்னால், அது முடியும், முடிந்தே தீரும் என்பது நியதி! ஏனென்றால், அவருடைய தொண்டு காலத்தைத் தாண்டிய– வென்ற தொண்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா!
கடந்த 10.10.2025 மாலை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில், தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
சிறுகனூர்
உலக வரைபடத்தில் நிலைக்கப் போகிறது!
தந்தை பெரியார் அவர்களுடைய பெயரில், ‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’ என்ற அந்தத் தத்துவத்தை காலங்காலமாய் விளக்கும் வகையில், காலத்தை வென்று நிலைக்கக்கூடிய ஓர் ஏற்பாடாக ‘பெரியார் உலகம்’ அமைய உள்ளது. அது திருச்சி சிறுகனூரில் – அந்த சிறுகனூர் இனி பெருகனூர் என்று சொல்லக்கூடிய அளவில், உருவாக்கப்பட்டு உலக வரைபடத்தில் நிலைக்கப் போகிறது.
உலகம் பாராட்டக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியை – மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தி ருக்கின்ற தாளாளர் கா.மா.குப்புசாமி போன்றவர்கள் முன்னால் நின்று, வல்லம் என்கின்ற ஒரு சிறிய கிராமத்தில் நிறுவினார்கள். அந்தக் கல்லூரி உலகம் பாராட்டக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளது, உலக நாடுகளில், கனடாவில் முதல் பரிசு வாங்கிய பாலிடெக்னிக் கல்லூரியாகும்.
எனவே, பெரியார், வல்லத்திலிருந்து கனடாவிற்குப் போனார்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பு. எனவே, இப்போதுதான் பெரியார் உலக மயமாகிறார் என்பது அல்ல.
கல்வித் துறையில், அவர்களுடைய அருட்கொடை யினால் ஏற்கெனவே அவர்கள் உலகமயமாகி விட்டார்.
இப்போது மற்ற துறைகளிலும் பெரியார் உலக மயமாகிறார். அந்த உலகமயமானதினால் பெரியார் என்ன செய்தார்?
பெரியார் உலகம் என்று ஏன் பெயரிட்டிருக்கிறார்கள்?
பெரியாரின் கருத்துகளைக் காட்சிப்படுத்தி, கருத்துப்படுத்தி, வரலாற்று ஆவணமாக, வரலாற்றில் நிலைக்கக் கூடியதாக அமைய உள்ளது. இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படக்கூடிய ஒரு பெரும் பணி – அரிய பணி.
பெரியாருக்கு என்று சொன்னால்,
அது முடியும், முடிந்தே தீரும்!
வரலாற்றில் இதுவரை மற்றவர்கள் துணியாத ஒரு துறை – அதைத் தொடங்கிய நேரத்தில், எங்களைப் பல பேர் அச்சுறுத்தினார்கள், 100 கோடி ரூபாய் திட்டமா? எல்லோருக்கும் மலைப்பு தான்; எல்லோருக்கும் திகைப்புதான்; உங்களால் முடியுமா? என்று கேட்ட நேரத்தில், அந்தத் திட்டம் நமக்காக அல்ல; ஒரு வீரமணிக்கோ அல்லது இங்கே இருக்கின்ற தோழர்களுக்கோ என்றால், அது முடியாது. ஆனால், பெரியாருக்கு என்று சொன்னால், அது முடியும், முடிந்தே தீரும் என்பது நியதி!
ஏனென்றால், அவருடைய தொண்டு காலத்தைத் தாண்டிய வென்ற தொண்டு.
கைம்மாறு கருதாத தொண்டு – மானம் பாராத தொண்டு – நன்றி பார்க்காத தொண்டு – பதவிகளை விட்டு விலகிய பிற்பாடான தொண்டு – பதவிக்கான தொண்டு அல்ல.
மேலும் உழைப்பதற்கு எனக்குக் கொடுத்த ஊக்க மாத்திரை!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நிகழ்ச்சியில், குறுகிய காலத்தில் தோழர்கள் பம்பரமாகச் சுழன்று சுழன்று மிகப்பெரிய அளவில் உழைத்திருக்கிறார்கள்.
நிதியை இன்றைக்கு வழங்கி, என்னுடைய வயதைக் குறைத்திருக்கிறீர்கள். மேலும் உழைப்ப தற்கு எனக்குக் கொடுத்த ஊக்க மாத்திரை இது.
‘‘ஓய்வெடுத்துக் கொள்ளாதே! சோர்வு கொள்ளாதே! உனக்கு வலி தீராதா? இதைப் பார்த்தவுடன் வலிமை தானே வரும்’’ என்று சொல்லாமல் சொல்லி, இந்தக் குதிரை சோர்ந்து போகவிடக் கூடாது; என்னைத் தட்டிக் கொடுக்கவேண்டும் என்று அந்த உற்சாகத்தைக் கொடுத்திருக்கக்கூடிய உங்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், இயக்கத்தின் சார்பில்.
தோழர்களே, இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கக் கூடிய செயல்வீரர் மாநகர தலைவர், அவரே சொன்னதுபோல, ‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்’’ என்பதற்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆகவே, அப்படிப்பட்ட தமிழ்ச்செல்வன் அவர்களே,
உழைப்புத் தேனீக்களாக இருக்கக்கூடிய
ஜெயக்குமார் – உரத்தநாடு குணசேகரன்!
வரவேற்புரையாற்றிய தேனீ போன்ற மாநகர செயலாளர் வீரகுமார் அவர்களே, முன்னிலை ஏற்றி ருக்கக்கூடிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எந்தப் பணியைக் கொடுத்தாலும், அதைச் சிறப்பாகச் செய்யக்கூடிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் – உழைப்புத் தேனீயாக இருக்கக்கூடிய நண்பர்கள் என்று சொன்னால், ஒருவர் ஜெயக்குமார்; இன்னொருவர் உரத்தநாடு குணசேகரன் அவர்கள்.
இன்றைக்கும், அவரவர் பணிகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். நான், வேலையைக் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.
இயங்கிக் கொண்டே
இருந்தால்தான், இயக்கம்!
எங்களுக்குள் ஓய்வு கிடையாது. ஏனென்றால், இது கட்சியல்ல – இயக்கம். இயங்கிக் கொண்டே இருந்தால்தான், இயக்கம். இல்லையென்றால், இது இயக்கம் அல்ல.
இது இதயம் போன்றது. இதயம் ஓய்வெடுத்துக் கொண்டது என்றால், அது முடிவு என்று முற்றுப் பெறும். ஆகவேதான், மற்ற உறுப்புகளுக்கு ஓய்வு உண்டு. ஆனால், இதயத்திற்கு எப்போதுமே ஓய்வு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், அதற்குக் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டால், அதைத் தட்டி எழுப்புகிறோம்; ஒட்டுப் போடுகிறோம். அதில் அடைப்பு ஏற்பட்டால், உடனே அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்கிறோம்.
என் சிகிச்சைக்கு மருந்து மருத்துவர்களால் 40 விழுக்காடு;
60 விழுக்காடு உங்களால்தான்!
மேற்சொன்ன அத்தனையையும் அனுபவித்தவன் நான். ஆகவே, அதைத்தாண்டித்தான் உங்கள் முன்னால் நிற்கின்றேன். அது மருத்துவர்களால் 40 விழுக்காடு; மீதமுள்ள 60 விழுக்காடு சகோதரர்களால், உடன்பிறப்புகளால், இயக்கத் தோழர்களால், மேடை யில் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய அத்துணை தோழர்களுடைய உழைப்பி னால்தான்.
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, மாவட்டச் செயலாளர் அருணகிரி அவர்களே, மாவட்டக் காப்பாளர் அய்யனார் அவர்களே, மாநகர துணைச் செயலாளர் இளவரசன் அவர்களே, எப்போதும் நம்மோடு இருக்கக்கூடிய இளைஞர் மேயர் சண்.இராமநாதன் அவர்களே, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களே, அருமைச் சகோதரர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் அவர்களே,
எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த கா.மா.குப்புசாமி அய்யாவினுடைய அருமைச் செல்வன் பன்னீர்செல்வம் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி முதுபெரும் தோழர் பண்டரிநாதன் அவர்களே,
பெரியார் பெருந்தொண்டர் முத்துராஜேந்தர்
பெரியார் பெருந்தொண்டர் முத்துராஜேந்தர் அவர்களே, இவர் இளைஞரணியிலிருந்து இந்த இயக்கத்திற்கு முதியோர் வரையில் வந்திருக்கின்றார். எல்லாப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். அவருடைய துணைவியார் இங்கே இருக்கிறார்.
என்னுடைய தலைமையில்தான், அவருடைய இல்லத் திருமணங்கள் நடைபெற்று இருக்கிறது.
பரிந்துரை என்று அவர் என்னிடம் வந்ததில்லை. அவர் கடமையைச் செய்துகொண்டிருப்பார்.
சில நாள்களுக்கு முன்பு அவரைச் சந்திக்கும்போது, அவருடைய டாக்டர் மகள் எங்கே இருக்கிறார் என்று கேட்டேன்.
எனக்கு ஏற்பட்ட
இரட்டிப்பு மகிழ்ச்சி!
அப்போது அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அந்தச் செய்தி என்னவென்றால், மெடிக்கல் ஆபீச ராக, மறைமலைநகரில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
நம்முடைய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு, முதலமைச்சர் வந்தபோது, அங்கே அவர்தான் ஆன் டியூட்டியில் இருக்கிறார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மறைமலைநகரில். ஒரு பெண் டாக்டர், மெடிக்கல் ஆபீசர் – இந்த இயக்கத்திலிருந்து வந்தவர் அவர்.
பெரியார் என்ன செய்தார்?
இதைத்தான் செய்தார்.
இந்த இயக்கம் என்ன செய்தது?
இதைத்தான் செய்தது.
மறைமலைநகருக்கு வருகின்ற முதலமைச்சருக்கு, அவர்தான் மருத்துவத் துறை அதிகாரியாக இருந்தார்.
ஆகவே, இந்த இயக்கம் எத்தனை தலைமுறையைத் தாண்டியிருக்கின்றது என்பதை நினைத்துப் பாருங்கள்.
எத்தனைத் தடங்கல்களை ஒதுக்கியிருக்கிறது.
எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
அதேபோல, ‘விடுதலை’ வாசகர் வட்டப் புரவலர் அய்யா திருநாவுக்கரசு அவர்களே, அகில இந்திய மகளிர் முன்னேற்றக் கழகத் தலைவர் சொர்ணலட்சுமி சூரியமூர்த்தி அவர்களே, பொறியாளர் கீதப்பிரியா அவர்களே, ரவிச்சந்திரன் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், எப்போதும் எங்களோடு இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் கலிமேடு செல்வம் அவர்களே,
காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்டத் தலைவரும், தஞ்சை ‘விடுதலை’ வாசகர் வட்டப் பெருமமைமிகு தலைவருமான அய்யா பி.ஜி.ராஜேந்திரன் அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மாவட்டத் தலைவர் நரேந்திரன் அவர்களே,
இங்கே வந்திருக்கக்கூடிய பேராசிரியர் டாக்டர் தவமணி அவர்களே மற்றும் நண்பர்களே, மகளிரணியைச் சேர்ந்த சகோதரிகளே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘திருஞானசம்பந்தன்’ என்று சொல்லி, என்னைக் குழந்தையாக ஆக்கினார்!
இங்கே உரையாற்றியவர்கள் என்னை உற்சாகப் படுத்துவதற்காக ‘திருஞானசம்பந்தன்’ என்று சொல்லி, என்னைக் குழந்தையாக ஆக்கினார்கள்.
அடுத்து ஒருவர், என்னை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று சொன்னார்.
இன்னொருவர், ‘இந்த வயதிலும்’ என்று சொல்லி, என்னை முதுமைக்கு ஆளாக்கிவிட்டார்.
ஆகவே, எல்லாப் பருவங்களையும் கடந்து விட்டோமே, இப்போது நாம் எந்தப் பருவத்தில் நிற்கி றோம் என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
‘‘செவன்த் ஸ்டேஜஸ் ஆஃப் மேன்!’’
ஷேக்ஸ்பியரைப்பற்றி நீங்களெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஷேக்ஸ்பியர் பாடத்தில், ‘‘செவன்த் ஸ்டேஜஸ் ஆஃப் மேன்’’ – முதலில் குழந்தை யாகப் பிறக்கின்ற மனிதன், ஏழாவது கட்டமான வயதாகிய பிறகு, மீண்டும் அவன் குழந்தை.
நான் என்றும் ‘வாலிபன்’ –
பெரியார் காட்டிய வழி அது!
ஆகவே, முரண்பாடு இல்லை. குழந்தைக்குக் குழந்தை உங்களுக்கு எல்லோருக்கும். தொண்டாற்றக்கூடிய வகையில், முதியவர்களுக்கு முதியவர். உங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு உழைப்பவன் ஆகையால், நான் என்றும் வாலிபன் – பெரியார் காட்டிய வழி அது.
பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டு வந்ததினால்தான், எந்தக் கெட்டப் பழக்கத்திற்கும் வாய்ப்பில்லை. எல்லாவற்றிலும் தன்னம்பிக்கைதான் – அதுதான் மிகப்பெரிய அளவிற்கு டானிக் அது. எதிர்ப்பு என்றால்தான், ஒருபடி அதிகமாக வளருவோம்.
ஆகவே, இப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சியை ஒரு வார காலத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கென்று நம்முடைய தோழர்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்கள். வசூல் பணியில் ஈடுபட்ட தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் அவர்கள், மாவட்டக் காப்பாளர் அய்யனார் அவர்கள், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்கள்.
அமர்சிங் அவர்களுக்கு வேறு பணிகளை வைத்தி ருக்கின்றோம். இங்கே வரும்போதே அவரிடம் நான் சொன்னேன், மாநகரத்தின் சார்பில் அவர்கள் நிதி கொடுக்கின்றார்கள். உங்களுடைய பணி ஒன்று இருக்கிறது.
(தொடரும்)
