இசுலாமியர்களே… உங்களுக்கென ஒரு கூட்டமைப்பை உருவாக்குங்கள்!
உங்களுக்காகப் பாடுபடுகிறவன் என்ற உரிமையில் சொல்கிறேன், சிந்தியுங்கள்!
அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்
சென்னை, அக்.27 ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்பு அரசியல் கொள்ளிக்கட்டையாக சுழல்கிறது. இசுலாமியர்களே… உங்களுக்கென ஒரு கூட்டமைப்பை உருவாக்குங்கள்! உங்களுக்காக பாடுபடுகிறவன் என்ற உரிமையில் சொல்கிறேன்; சிந்தியுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இந்திய யூனியன் முசுலீம் லீக் அமைப்பின் சார்பில், சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று (26.10.2025) மாலை 4 மணியளவில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தொடங்கி இசையரங்கம், கருத்தரங்கம், தலைவர்களின் சொல்லரங்கம் என்று இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.
தலைவர்களின் சொல்லரங்கம்
மாலை 6 மணியளவில் தலைவர்களின் சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமை ஏற்றார். முன்னதாக
அய்.யூ. எம் எல். பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தமிழர் எம்.இலியாஸ் எழுதிய, “உலக அரங்கில் சிராஜுல் மில்லத்” நூலை அய்.யூ.
எம்.எல். தேசியத் தலைவர் வெளியிட்டார். முதல் பிரதியை அப்துல் சமது அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, அப்துல் பாசித், பாத்திமா சுப்பர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்துரையாற்றினர்.
தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., திராவிடர் இயக்கப் போர்வாள் வைகோ ஆகியோர் அப்துல் சமது அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவர் தமது உரையில், “அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடினால் மட்டும் போதாது, அவர்களது சிந்தனைகளை, வழிகாட்டுதல்களை அசை போடுவது மட்டும் போதாது, அவரது இலக்கு எதுவாக இருந்தது. அதை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்று தொடங்கினார்.
மேலும் அவர், சிராஜுல் மில்லத் அவர்களது தந்தையார் அப்துல் ஹமீது பாகவி அவர்களுக்கும், தந்தை பெரியாருக்குமான தொடர்பை – வரலாற்றுச் சுவடுகளை எடுத்துக் காட்டிப் பேசினார்.
“அப்துல் ஹமீது பாகவி அவர்கள் 1930 ஆம் ஆண்டில், இயற்கை மதம்” என்ற ஒரு நூலை எழுதினார். அந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை தந்தை பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையிலே வெளியிட்டார்” என்ற ஓர் அரிய நிகழ்வைச் சுட்டிக்காட்டினார்.
அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்!
தொடர்ந்து, ‘‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மிடையே, வெறுப்பு உணர்ச்சியைத் திட்டமிட்டு வளர்த்து வருகிறார்கள். அந்தக் கொள்ளிக் கட்டை நம்மீது சுழன்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில், இசுலாமியப் பெருமக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதுதான் அப்துல் சமது நூற்றாண்டு விழாவின் செய்தி. அது முதலில் தமிழ்நாட்டில் தொடங்கட்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று பலத்த கையொலிகளுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமை உரையைச் சுருக்கமாக ஆற்றினார்.
அவ்வூரையில் அவர், ‘‘திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உள்ளத்திலிருந்து பேசியிருக்கிறார். இதை நாங்கள் கட்டளையாக எடுத்துக்கொண்டு பணி செய்வோம்” என்று நெஞ்சுருக உறுதி கூறினார்.
அப்துல் சமது பற்றிய
ஆவணப்படம் திரையிடல்!
நிறைவாக தலைவர்கள் மேடையை விட்டு இறங்கியதும், அப்துல் சமது பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தின் கீழரங்கம், மேலரங்கம் இரண்டும் நிறையும் அளவிற்கு இசுலாமியப் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கலைமணி, உடுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
