ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பினார் மேனாள் சிஅய்ஏ அதிகாரி தகவல்

நியூயார்க், அக்.26-  ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக மேனாள் சிஅய்ஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயார்க்கில் உலக வர்த்தக மய்யம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான கட்டடங்களைத் தாக்கி அழித்தனர். மூன்றாவது விமானத்தின் மூலம் அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகமான பெண்டகன் மீது தாக்குதல் நடத்தினர். மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் விளை நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

வேட்டையாடத் தொடங்கிய அமெரிக்க பாதுகாப்புப் படை: இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அல் கயிதா அமைப்பின் நிறுவனத் தலைவரான ஒசாமா பின்லேடனை வேட்டையாட அமெரிக்க பாதுகாப்புப் படை முடுக்கிவிடப்பட்டது. அப்போது ஆப்கனிஸ் தானில் இருந்த ஒசாமா பின்லேடன் பின்னர் அங்கிருந்து தப்பி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கு பதுங்கி இருந்தார். பாகிஸ்தானின் அப்போடாபாத் நகரில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படை கடந்த 2011ஆம் ஆண்டு மே2ஆம் தேதி சுட்டுக்கொன்றது. சிஅய்ஏ அதிகாரி ஜான் கிரியாகோ பேட்டி: இந்நிலையில், ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர் என்றும் அவர் பெண் வேடமிட்டு ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் இருந்து தப்பிவிட்டார் என்றும் அமெரிக்க உளவு அமைப்பான சிஅய்ஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.

சிஅய்ஏவில் 15 ஆண்டு காலம் பணியாற்றியவரும் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவருமான ஜான் கிரியாகோ, இது தொடர்பாக ஏஎன்அய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஒசாமா பின்லேடனும் அல் கயிதா தலைமையும் ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டதாக நாங்கள் நம்பினோம். அவர்கள் வேறு எங்கும் தப்பிக்க முடியாத அளவுக்கு சுற்றிவளைத்துவிட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும்.

அமெரிக்க பாதுகாப்புப் படையின் மத்திய தளபதிக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த அதிகாரி ஒரு அல் கயிதா ஆதரவாளர் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவர்களை மலையில் இருந்து கீழே வரச் சொன்னோம். மொழிபெயர்ப்பாளர் மூலமாகத்தான் நாங்கள் வரச் சொன்னோம். பெண்களையும் குழந்தைகளையும் வெளியேற்ற விரும்புவதாகவும் விடியற்காலை வரை அனுமதிக்க முடியுமா என்றும் அவர்கள் கோரினர். அதன் பிறகு தாங்கள் சரணடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த யோச னையை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ஆனால், எங்கள் படையின் மத்திய தளபதி ஜெனரல் பிராங்ஸ் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். அந்த மொழிபெயர்ப்பாளர்தான் அவரை சம்மதிக்க வைத்தார்.

விடியற்காலையில் டோரா போரா குகைகள் காலியாக இருந்ததைப் பார்த்தபோது, நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை தெரிந்து கொண்டோம். அதன் பிறகு நாங்கள் அவரை தொடர்ந்து துரத்தினோம். 2011இல் அப்போட்டாபாத்தில் அது முடிவுக்கு வந்தது. அன்றே கொல்லப்பட்டிருக்க வேண்டிய ஒசாமா பின்லேடன், 10 ஆண்டுகள் கழித்து கொல்லப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *