சென்னை, அக்.26- இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வரும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படக் குழுவினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனமாரப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில், “சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக ‘பைசன்’ மிளிர்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, திரைக்கதைக்கு உயிரூட்டிய துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து 890 கி.மீ தொலைவில் புயல் சின்னம்
சென்னை, அக்.26- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் முதலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ என்று தாய்லாந்து பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகும் ‘மோன்தா’ புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நாளை (27.10.2025) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்நிலையில், வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் சென்னையில் இருந்து 890 கி.மீ தொலைவில் நிலவுவதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
