சென்னை, அக். 25- நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க் கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்.31இல் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழ்நாட்டில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.
இந்த திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்காததால், 2025-2026ஆம் கல்வியாண்டுக்கானமாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. இதுகுறித்த வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியதையடுத்து ஒன்றிய அரசு நிதியை விடுவித்தது. இதையடுத்து பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேரும் விண்ணப்பித்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒதுக்கப்பட்ட இடங்களைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை அக். 30இல் நடைபெறும். ஒதுக்கீட்டைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன் குலுக்கல் முறையில் அக்.31ஆம் தேதி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த சேர்க்கை செயல் முறை பள்ளிக்கல்வித் துறை வலைத்தளம் மூலம் வெளிப்படையாக செயல்படுத்தப்படுகிறது இதை மாவட்டக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்புக் குழுக்கள் மேற்பார்வையிடுவார்கள். ஆதரவற்றோர், எச்அய்வி பாதித்தோர், 3ஆம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
