போர்னோ, அக். 25- நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய 50 பயங்கரவாதிகளைக் கொன்றதாக நைஜீரிய ராணுவம் 23.10.2025 அன்று தெரிவித்தது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
போா்னோ மாகாணத்தில் உள்ள டிக்வா, மாஃபா, கஜிபோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீதும், அருகிலுள்ள யோபே மாகாண ராணுவ நிலைகள் மீதும் பயங்கரவாதிகள் ஒருங்கிணைக்கந்த ட்ரோன் தாக்குதலை நடத்தினா். அவா்களுக்கு எதிராக போா் விமானங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைகளில் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். காயமடைந்துள்ள 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் பணி நடந்து வருகிற என்றாா் அவா்.
ஆப்பிரிக்காவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியா, போகோ ஹராம் மற்றும் பிற மதவாதக் குழுக்களின் வன்முறையால் 16 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நைஜீரியாவின் வடகிழக்கில் 40,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி
தாக்குதல் – 4 பேர் பலி
பெரூட், அக். 25- இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும், ஹிஸ்புல்லா மீண்டும் ஆயுதங்களை தயாரித்து தாக்குதல் நடத்துவதை தடுக்க அந்த அமைப்பினர், ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள அரபுசலீம் பகுதியில் இஸ்ரேல் 23.10.2025 அன்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் ஈடுபடுத்த மிரட்டல்; ரஷ்யாவில் தவிக்கும் அய்தராபாத் வாலிபர்
– கண்ணீர் காட்சிப்பதிவு
அய்தராபாத், அக். 25- தெலுங்கானா மாநிலம் அய்தராபாத்தை சேர்ந்தவர் முகமது அகமது. இவருடைய மனைவி அப்சா பேகம். இந்த இணையருக்கு சோயா பேகம் (10) முகமது தைமூர்(4) என்ற பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் மூலம் முகமது அகமது ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமை அனுபவித்து வருவதாக தனது மனைவியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இது தொடர்பாக அப்ஷா பேகம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதி உள்ளார். அதில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் எனது கணவரை கண்டுபிடித்து மீட்டு அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவில் இருப்பதாக சுய காட்சிப் பதிவை அகமது வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:
தன்னுடன் பயிற்சி பெற்ற 25 பேரில், ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். நான் இருக்கும் இடத்தில் ஒரு எல்லை, போர் நடந்து கொண்டிருக்கிறது. நான் உட்பட 4 இந்தியர்கள் போர் மண்டலத்திற்குள் செல்ல மறுத்துவிட்டோம். அவர்கள் எங்களை சண்டையிட மிரட்டினர், என்னையும் இன்னொருவரையும்’ நோக்கி ஆயுதத்தை நீட்டினர்.என் கழுத்தில் துப்பாக்கியை வைத்து, என்னைச் சுட்டு, டிரோன் மூலம் நான் கொல்லப்பட்டது போல் அரங்கேற்று வோம் என்கின்றனர்.
“என் காலில் பிளாஸ்டர்போடப்பட்டுள்ளது, நடக்க முடியவில்லை. என்னை இங்கு (ரஷ்யா) அனுப்பிய முகவரை தயவுசெய்து விட்டுவிடாதீர்கள். அவர் என்னை இவற்றில் சிக்க வைத்தார். வேலை இல்லாமல் 25 நாள்கள் இங்கே உட்கார வைத்தார். நான் வேலை கேட்டுக்கொண்டே இருந்தேன், ரஷ்யாவில் வேலைவாய்ப்பு என்ற போர்வை யில் நான் வலுக்கட்டாயமாக இதில் இழுக்கப் பட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அய்தராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவில் சிக்கியுள்ள அகமதுவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவைசி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம்
இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து விடும் – டிரம்ப்
வாசிங்டன், அக். 25- ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர்டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த போவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனாலும் டிரம்ப் அந்த கருத்தை மீண்டும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துவிடும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதாக இந்தியா என்னிடம் கூறி உள்ளது. இது ஒரு செயல்முறையில் இருந்து வருகிறது. இதை உடனே செய்துவிட முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து விடும். இதுபற்றிபிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.
