சென்னை, அக். 25 சென்னை அடையாற்றில் உள்ள, “NFDC தாகூர் திரையரங்கில்” திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கக் கூடிய, ”பைசன் – காளமாடன்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி 24.10.2025 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தந்து திரைப்படத்தைப் பார்வையிட்டனர். திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பத்திரிக் கையாளர்களை சந்தித்தபோது இயக்குநர் மாரி செல்வராஜ் அவர் களைப் பாராட்டிப் பேசினார்.
சிறப்பான இயக்குநராக இளம் வயதிலேயே ஒரு வரலாற்று சாதனைகளை செய்து கொண்டு வரக்கூடிய நம்முடைய இமயத்தின் எல்லையை எட்டிக் கொண்டிருக்கக் கூடிய இயக்குநர் மாரி செல்வராஜ் கதை, இயக்கம் அமைத்துள்ள பைசன் – காளமாடன் படத்தைப் பார்த்தபோது, இது வெறும் படம் அல்ல, சமூகத்திற்கான பாடம். இந்த பாடங்கள் இப்போது தேவைப்படுகின்றன. 1000 பொதுக்கூட்டங்களில் பேசுவதை விட, ஒரு திரைப்படத்தின் மூலமாக அதை சிறப்பாக உணர்த்த வேண்டிய வர்களுக்கு உணர்த்தக் கூடிய ஓர் அற்புதமான படம். தேவையான காலகட்டத்தில் சிறப்பான வகையில், மற்றவர்கள் சிந்திக்கத் துணியாத ஒரு கதையை எடுத்துக் கொண்டு, சிறப்பாக செய்திருக்கக் கூடிய அவருடைய துணிச்சல் பாராட்டத் தகுந்தது.
அதே நேரத்தில், இன்னமும் அவருடைய ஆற்றல் ஏராளமாக வெளிப்பட வேண்டியிருக்கிறது. ஒரு சமுதாயத்திலே பிறந்திருக்கிறோம்; அடி மட்டத்திலே இருக்கிறோம் என்பதற்காக, எவ்வளவு பெரிய சிக்கல்களை சந்திக்க வேண்டி யிருக்கிறது. ஆளுமைத் திறன் வரவில்லை என்பதைச் சொல்லித்தான் ஒவ்வொரு கட்டத்தையும் தாண்ட வேண்டியிருக்கிறது. எனவே தான் ஊர் நலம் என்பதைத் தாண்டிக்கூட உலகப்பார்வையோடு; மானுடப் பார்வையோடு அவர் அமைத்திருக்கிறார்கள். ‘விசாலப்பார்வையால் விழுங்கு உலகத்தை’ என்று சொன்னார்கள். ஒவ்வொருவருக்கும் விசாலப் பார்வையுடன் கூடிய ஒரு புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற ஒரு நல்ல பாடத்தை தன்னுடைய அருமையான திரைப்படத்தின் மூலமாக நேரம் போவதே தெரியாத அளவுக்குக் காட்டியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட ஒரு சிறந்த நல்ல விளையாட்டு எது என்றால், கபடி – அதை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். பந்து வீச்சு அது இதுன்னு சொல்வதிலும் ஜாதி இருக்கிறது. அதிலேயே ஒன்றாவது பிரிவு; இரண்டாவது பிரிவு; மூன்றாவது பிரிவு என்று இருக்கிறது. இதுவரையில் யாருடைய கவனம் இதில் போகவில்லையோ, அதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் செலுத்தியிருக்கிறார். அதற்காகவே ஆயிரம் பாராட்டுகள். அவர் வளரவேண்டும். அவருடைய சிறப்புப் படைப்பாற்றல் இந்த சமுதாய மாற்றத்துக்கு புரட்சிகரமாக இருக்க வேண்டும். அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அந்த வகையில் பார்க்க போது, இன்னமும் அம்பேத்கர் தேவைப்படுகிறார். இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார். அம்பேத்கருடைய புகழைக்கூட குறைக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் கூட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில்தான் எதைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அதை உங்கள் திரைப்படத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். 3000 ஆண்டு காலக் கொடுமையை மூன்று மணி நேர திரைப்படத்திலே சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கொடுமையைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்பதையும் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும், ஆற்றலுக்கும் என்றைக்கும் தலைவணங்கும் இந்த சமுதாயம். இன்னும் இது போன்ற ஏராளமான படைப்புகள் அடுத்தடுத்து வெளியே வரவேண்டும். நாங்கள் எல்லாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம்’’ என்று கூறி உங்கள் எல்லோருக்கும் நன்றி செலுத்துகிறேன். இவ்வாறு ஆசிரியர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
