இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் சிறப்புரை

11 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உலகத்தில் எந்த இயக்கத்திலும், எந்த இடத்திலும், எந்த நாட்டிலும்
‘‘சுயமரியாதை” எனும் ஒரு சொல்லில் ஓர் இயக்கம் தோன்றியதே இல்லை!
இந்தியாவில்தான், அதுவும் நம் தமிழ் மண்ணில்தான் சுயமரியாதை இயக்கம் தோன்றி வாழ்கிறது!

மறைமலைநகர், அக்.25 உலக வரலாற்றில் எத்த னையோ இயக்கங்களைப் பார்த்திருக்கிறோம். ரூசோ, வால்டேருடைய சமூக ஒப்பந்தம்; அய்ரோப்பா வினுடைய அறிவொளி இயக்கம்; ஆனால், உலகத்தில் எந்த இயக்கத்திலும், எந்த இடத்திலும், எந்த நாட்டிலும் ‘‘சுயமரியாதை” எனும் ஒரு சொல்லில் ஓர் இயக்கம் தோன்றியதே இல்லை. இந்தியாவில்தான், அதுவும் நம் தமிழ் மண்ணில்தான் சுயமரியாதை  இயக்கம் தோன்றி வாழ்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன்.

கடந்த 4.10.2025 அன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக் கருத்தரங்கத்தில், தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை வெளியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தோழர்களே! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவின் தலைவர் – ஆசிரியர் அவர்களே! மேடையில் வீற்றிருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா அவர்களே! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே! திராவிடர் கழகத்தின் முன்னணி தலைவர்கள், திரளாகத் திரண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தோழர்கள் எல்லோருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் இருகரம் கூப்பி முதலில் வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு, நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்கிற போது, எனது உயரத்தின் பொருட்டு நான் குனிந்தேன். ஆனால்,‘‘எதன் பொருட்டும், யார் பொருட்டும் குனியக்கூடாது’’ என்று தந்தை பெரியார் சொன்னதை சொல்லிவிட்டு, (அவர் உயரம் சிறிது; தொண்டும், தியாகமும் பெரிதென்பதால் நான் குனிந்தேன்.) ‘‘சுயமரியாதை இயக்கம் உருவானதே, எதன் பொருட்டும் குனியக்கூடாது, கூனக் கூடாது என்பதுதான்! எனவே, வீரபாண்டியன் அவர்களே குனிய வேண்டாமென்றார்.’’

‘பகை முரண் அல்ல, வளர் முரண்!’

தோழர்களே! நண்பர்களே! ஆ.இராசா அவர்கள், என்னை வைத்துக்கொண்டு, சிங்காரவேலர் ஜீவாவை விமர்சித்தார். நான் அவரிடத்திலே சொன்னேன், ‘‘நான் எப்பொழுதெல்லாம் உங்கள் அருகில் மேடையில் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் நீங்கள் என்னை விமர்சிக்கலாம். எங்கள் இயக்கத்தை விமர்சிக்கலாம். இந்த விமர்சனங்கள் ஜனநாயகத்தை வளர்க்கும். அப்படி விமர்சித்தவர்கள்தான் சிங்காரவேலர், ஜீவா’’ என்று. நான் தமிழர் தலைவர் அவர்களிடம், ‘‘பெரியார் அவர்கள் சிங்காரவேலரை, ஜீவாவை விமர்சித்தது; நாங்கள் முரண்பட்டது; ‘பகை முரண் அல்ல, வளர் முரண்’’’ என்று நான் அவருக்கு எழுதிக் கொடுத்தேன். ‘‘இதை நீங்கள் பேசுங்கள்’’ என்று நம்முடைய தலைவர் சொன்னார்.

நான் சகோதரர் ஆ.இராசா அவர்களுக்குச் சொல்கி றேன், ஜீவா முரண்பட்டார். பகையாக அல்ல, வளர் முரண். சிங்காரவலர் முரண்பட்டார். பகையாக அல்ல, வளர் முரண். தந்தை பெரியார் இந்த இருவரையும் ஒருபோதும் ‘துரோகி’ என்று சொன்னதில்லை என்பதை  ஆ.இராசா அவர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்.

பெரியாரை நிரப்பிக் கொள்கிறோம்;
பெரியார் தேவைப்படுகிறார்!

நாங்கள் முரண்பட்டது உண்மை. ஆனால், பெரியா ருக்கு தீங்கு செய்யவில்லை; துரோகம் செய்யவில்லை. கருத்தாலும் முரண்பட்டோம். நாங்கள்  எல்லோரும் இங்கே வந்திருக்கிறோம். உண்மைதான். பெரியாரை நிரப்பிக் கொள்கிறோம். பெரியார் தேவைப்படுகிறார். ஆனால், பெரியார் வந்து சேர்ந்த இடம் கம்யூனிசம், சமத்துவம் என்பதை ஆ.இராசா அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பெரியார் சொன்னது, இந்தக் கொடியில் கருப்பு சிவப்பு இருக்கிறதல்லவா? இது தற்காலிகம். இந்தக் கருப்பு மறைந்து, உலகம் முழுவதும் சிவப்புக் கொடி மட்டும்தான் பறக்கும் என்று சொன்னவர் தந்தை பெரியார்! அவருக்கு அந்த தொலைநோக்கு இருந்தது.

எனவே, இதையெல்லாம் உள்ளடக்கித்தான் பார்க்க வேண்டும். நூறாண்டு கால இயக்கம். உலக வரலாற்றில் எத்தனையோ இயக்கங்களைப் பார்த்தி ருக்கிறோம். ரூசோ, வால்டேருடைய சமூக ஒப்பந்தம்; அய்ரோப்பாவினுடைய அறிவொளி இயக்கம்; ஆனால், உலகத்தில் எந்த இயக்கத்திலும், எந்த இடத்திலும், எந்த நாட்டிலும் ‘‘சுயமரியாதை” எனும் ஒரு சொல்லில் ஓர் இயக்கம் தோன்றியதே இல்லை. இந்தியாவில்தான், அதுவும் நம் தமிழ் மண்ணில்தான் அந்த இயக்கம் தோன்றி வாழ்கிறது.

பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை; எதன் பொருட்டும் மனிதன் உயர்வும் அல்ல; தாழ்வும் அல்ல!

சுயமரியாதையினுடைய சிறகுகள் மகத்தானது! பெரியார் சொல்கிறார்; ‘‘ஒருவன் தனக்குள் இருக்கிற எஜமான விசுவாசத்திற்கு தானே கொள்ளி வைப்பது; எதன் பொருட்டும் கூனாமல் இருப்பது; குறுகாமல் இருப்பது; பல்லிளிக்காமல் இருப்பது; பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை; எதன் பொருட்டும் மனிதன் உயர்வும் அல்ல; தாழ்வும் அல்ல. மனிதர்கள் அனைவரும் சமம்.’’ இந்த ஜனநாயகத்தின் சிறகுகள் எத்தனை நாடுகளில் இருந்தது? சுயமரியாதை இயக்கத்தில் இருந்தது! தந்தை பெரியாரினுடைய கருத்தியலில் இருந்தது! எனவேதான் பெரியாரிடம் நெருங்குகிறோம்; பெரியாரை நாங்கள் உள்வாங்குகிறோம்; தனதாக்கிக் கொள்கிறோம்!

கடவுள் மறுப்பைப் பேசியவர்கள்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்கள்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இன்றைக்குப் பெரியார்! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிரிந்தது, கருத்து வேறுபாடுகளால். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானது. எதனால்? உலகத்தின் அறிவின் ஊற்றுக்கண் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்! இரண்டு கருத்தியலில் அது முரண்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவு நிறைந்தவர்கள் இருந்தாலும், கடவுள் மறுப்பை அங்கு பேசவில்லை. கடவுள் மறுப்பைப் பேசியவர்கள்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்கள்! விடுதலை மறுப்பு பேசப்பட்டது ஆக்ஸ்போர்டில். விடுதலையை ஆதரித்தவர்கள்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்கள். எந்தப் பல்கலைக்கழகம் கடவுள் மறுப்பை அங்கீகரிக்கவில்லையோ, அந்தப் பல்கலைக்கழ கத்திலேயே தந்தை பெரியார் படமாக இருப்பது என்பது சாதாரணச் சாதனை அல்ல!

மார்க்ஸ், ‘‘தாஸ் கேப்பிட்டல்” நூல் எழுதுகிற போது, டார்வினிடம் அணிந்துரை தருமாறு கேட்டார். டார்வின் தயங்கினார். பரிணாமக் கோட்பாட்டை வழங்கிய டார்வினே தயங்கினார். ஏனென்றால், அந்தப் பரிணாமக் கோட்பாடு வெளிவந்த பிறகு, மார்க்ஸ்தான் உலகத்தில் முதன் முறையாக, ‘கடவுள் மீது விழுந்த பலத்த அடியென்று’ மிகவும் துணிச்சலோடு சொன்னார். எனவே, கடவுளுக்கு எதிரியாக இருக்கிற உங்கள் நூலுக்கு நான் அணிந்துரை வழங்குவதா? என்று தயங்கினார்.  ஆனால், தந்தை பெரியார் இந்தியாவில், தமிழ் மண்ணில் தயங்கவில்லை என்பதை இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பெரியாரின் கருத்துகளில் தேசியம் இருந்தது; ஜனநாயகம் இருந்தது!

பெரியார்… வெறும் கடவுள் மறுப்பாளர்  என்று சுருக்கி விடக்கூடாது. மத எதிர்ப்பாளர் என்று சுருக்கி விடக்கூடாது. பெரியாரின் கருத்துகளில் தேசியம் இருந்தது; ஜனநாயகம் இருந்தது; சுயமரியாதை என்பது இவ்வளவு தானா? பெண் அடிமை கூடாது. கடவுள் – இதன்மீது கேள்வி, மதம் – இதன்மீது கேள்வி, ஜாதி – இதன்மீது கேள்வி. இது மட்டும்தானா சுயமரியாதை? பெரியார் துணிச்சலோடு சொல்லுகிறார்! நாற்பது பேருக்குத் தேவையான வளங்களை, எதிர்காலத்தை, நாலு பேர் சுருட்டி வைத்துக் கொள்வதும் சுயமரியாதைக்கு எதிரானது! நாற்பது கோடி பேருக்குத் தேவையான செல்வ வளங்களை நான்கு பேர் வைத்திருக்கிறார்கள் இந்தியாவில். சுயமரியாதையா அது? பகுத்தறிவா அது? அந்தப் போரும் சுயமரியாதைக்கான போர்தான்! தன்மானத்திற்கான போர்தான்! இதையும் சேர்த்து பார்க்க வேண்டுமென்று நான், இராசா போன்ற நண்பர்களுக்கு தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனிப்பட்ட முறையில் தந்தை பெரியாருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை!

இன்றைக்குப் பிரச்சினை கம்யூனிஸ்ட்களும், திராவிட இயக்கமும் அல்ல. இரண்டுக்கும் நோக்கம் சோஷலிசம்; சமத்துவம்தான்! இன்றைக்கு பிரச்சினை ஆர்எஸ்எஸ், பிஜேபி. உலகத்தில் வேறு எந்த நாட்டிலுமில்லாத அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் இருக்கிறது. சட்டத்தின் ஆட்சிமுறை இந்தியாவில் இருக்கிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நிலவாத கூட்டுச் சேவை முறை இந்தியாவில் நிலவுகிறது. நான் ஒருவரை ஏற்பதில்லை. ஆனால், இன்னொருவரை மதிக்கிறேன். இந்தப் பண்பாட்டுக் கூறுகள் சுயமரியாதையில் இருக்கிறது. தந்தை பெரியார், தன் கருத்தை ஏற்காதவர்களையும் மதித்தார். பெரியாருக்கு என்று வரலாற்றில் கொள்கை வழிபட்ட, கருத்தியல் வழிபட்ட எதிரிகள் இருந்தார்களே தவிர, தனிப்பட்ட முறையில் தந்தை பெரியாருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.

என்னால் துணிச்சலாக சொல்ல முடியும். மார்க்ஸ் இறந்தபொழுது அந்த ஹைகேட் கல்லறையில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் இருந்தார்கள். அந்த உடல் அடக்கம் முடிந்து திரும்பிப்போகிறபொழுது அந்த மேதைகள் வாயில் உச்சரித்தது, A Belongs age.  ‘மார்க்ஸ் யுக யுகங்களுக்கான மனிதர்’ என்று… முணுமுணுத்தபடி சென்றனர். எங்களால் சொல்ல முடியும். தமிழ் மண்ணில் தந்தை பெரியார், யுக யுகங்களுக்கான மனிதர் என்றே… எங்களால் மனம் திறந்து சொல்ல முடியும். அந்த அளவுக்கு பெரியாரை உள்வாங்குகிறோம். பெரியாரை நிரப்பிக்கொள்கிறோம். கூடுதலாக இன்றைக்குப் பெரியார் தேவைப்படுகிறார்.

எதிர்காலத் தலைமுறையைப்
பாதுகாப்பதற்கான போர்!

நம்முடைய எதிரி ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அரசிய லமைப்புச் சட்டத்தை  விடுங்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தை விடுங்கள். ஒரு கூட்டுச் சேவை இருக்கிறது அல்லவா இந்தியாவில்? பல மொழி பேசுகிற தேசிய இனங்கள் ஒரு கூட்டுச் சேவையோடு வாழ்கிறார்கள். அந்தக் கூட்டுச் சேவைக்கே குறி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. எனவேதான், தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கியிருக்கிற அந்தப் போரில், அருகில் நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கியிருக்கிற  போர்  தமிழ்நாட்டின் நலனுக்கானது மட்டுமல்ல; மாநிலங்களின் கூட்டுச் சேவைக்கான போர் அது. எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாப்பதற்கான போர், அந்தப் போர். நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போர், அந்தப் போர். எனவே, இடதுசாரிகள் மிக நெருக்கமாக இருக்கிறோம். இந்த நெருக்கத்தையே விரும்பாதவர்கள் பலர் இருக்கிறார்கள். நாட்டின் நலன் பொருட்டு, அந்த நெருக்கத்தோடு நாங்கள் இருக்கிறோம்.

நூற்றாண்டு கால இயக்கம். விமர்சனங்களை எப்பொ ழுதுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்கிறது. வரவேற்கிறது. தோழமை விமர்சனங்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. ஆனால், ஒரு நூறாண்டு கால இயக்கம், சுயமரியாதை இயக்கத்துக்கு அருகில் வந்து வாழ்த்துவதற்குரிய தகுதிகொண்ட இயக்கம் எது? நூறாண்டுகளில் மூன்று முறை தடைக்குள்ளான நாங்கள்; பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் இரண்டு முறை, காங்கிரஸ் ஒரு முறை. இந்திய வரலாற்றில் இந்தத் தடையை எதிர்கொண்ட கட்சி எது? எதிர்கொண்டால் வாழுமா இந்தக் கட்சி? வாழ்ந்திருக்குமா இந்தக் கட்சி? இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் போல் வழக்குகளை சந்தித்த இயக்கம் எது? பெசாவர் சதி வழக்கு; மீரட் சதி வழக்கு; கான்பூர் சதி வழக்கு; நெல்லை சதி வழக்கு; சென்னை சதி வழக்கு. நூறாண்டுகளில் சுட்டுக்கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்கள் எத்தனை பேர்? நாடு கடத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்? தூக்கு மேடைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்? எவ்வளவு வழக்குகள்? அதையும் தாண்டி நூறாண்டுகள் இந்த இயக்கம் வாழ்கிறது!

இரண்டு இயக்கங்களின் கனவு
சமதர்மம்! சமத்துவம்!

சுயமரியாதை இயக்கம் அடக்குமுறை, அவமானங்கள், வழக்குகள் எல்லாவற்றையும் தாண்டி நூறாண்டுகள் வாழ்கிறது! இந்த இரண்டு இயக்கங்க ளுமே நூறாண்டுகளில் அழிந்திருக்க வேண்டும். ஆனால், வாழ்கிறது என்று சொன்னால், இந்த இரண்டு இயக்கங்களின் கனவு சமதர்மம்! சமத்துவம்! அந்தப்புள்ளியில் நாம் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் இடரக்கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள். நம்முடைய இலக்கு – ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. நம்முடைய முரண் வளர் முரண். அது பகை முரண் அல்ல. எனவே, நான் வேண்டிக்  கேட்டுக்கொள்வது பெரும் போரை தமிழ்நாட்டு முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார்; தமிழ்நாடு தொடங்கியிருக்கிறது! அந்தப் பெரும் போரில் கம்யூனிஸ்ட்கள் அருகில் இருக்கிறோம்.

15 – 16 வயதிலிருந்து பெரியார் திடலுக்கு
வந்து செல்கிறவர்களில் நானும் ஒருவன்!

நான் இப்போது கூட காலையில் கட்சி அலுவ லகத்துக்கு வந்தேன். ராஜ்குமார், மாவட்டச் செயலாளர். அலுவலகம் இங்கே இருக்கிறது (மறைமலை நகர்) – அலுவலகத்துக்கு வந்தபிறகு ஒரு முப்பது, நாற்பது கருப்புச் சட்டைத் தோழர்கள் – நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன்! என்ன நம்முடைய அலுவலகத்தில் திராவிடர் கழகத்தின் தோழர்கள்? 30, 40 நாள்களாக நம்முடைய அலுவலகத்தில் தங்கிதான் இங்கே வேலை பார்க்கிறார்கள் என்று, அவர் சொன்ன போது நான் மகிழ்ந்தேன். நான் அவர்களைக் கேட்டேன், வசதியான இடமில்லையே என்று… வசதியான இடம் என்று நாங்கள் சொன்னால் கிடைக்கும். அதைவிட மனநிறைவான வசதி இங்கேதான் இருக்கிறது என்று அந்தத் தோழர்கள் சொன்னார்கள். எனவே, ஆழமான புரிதல் இதில் இருக்கிறது. ஆ.இராசா சொல்கிறார் அல்லவா? 15 – 16 வயதிலிருந்து பெரியார் திடலுக்கு வந்து செல்கிறவர்களில் நானும் ஒருவன்! அங்கே கற்றுக்கொண்டது அதிகம்!

தோழர்களே! நண்பர்களே! இந்த இரண்டு நூற்றாண்டு இயக்கங்களுடைய இலக்கும் சோசலிசமும், சமதர்மமும்தான்! எனவே நாம் முன்னேறுவோம்! நாம்தான் நிறைவில் வெல்லுவோம்! தந்தை பெரியார் பகுத்தறிவின் சின்னம்! சுயமரியாதையின் சின்னம்! கலகத்தின் சின்னம்! தேசிய ஜனநாயகத்தின் சின்னம்! ஒரே வரியில் சொல்வதென்றால், சமத்துவத்தின் சின்னம்! என்று நாங்கள் நம்புகிறோம்.

பெரியாரே சொல்வது போன்று அவருடைய எழுத்துகளில் ஒருபோதும் கம்யூனிசத்தை, சமத்துவத்தை தாக்கி எழுதியதே இல்லை. இறுதி லட்சியம் அதுதான் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். எனவே பெரியாரே இந்தப் பதாகையைத் தந்த பிறகு, நாங்கள் அருகில் வராமல் வேறு யார் அருகில் வருவார்கள்? எனவே, முன்னிலும் நெருங்குவோம்!

நான் ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம். பெரியார் – திராவிடர் இயக்கத்தின் அருகில் நாங்கள் இன்றைக்கு வந்திருக்கிறோம். அதில் ஒன்றும் முரணில்லை; தவறில்லை; வருகிறோம். ஆனால், இந்த உலகில் மகத்தான புரட்சிகளை நடத்தியது யார்? பெரியாரே சொன்னது போல், அக்டோபர் புரட்சிகளை நடத்தியது யார்? ரஷ்யப் புரட்சியை யார் நடத்தியது? சீனப் புரட்சியை யார் நடத்தியது? வியட்நாம் புரட்சியை யார் நடத்தியது? ஆப்பிரிக்க நாடுகளின் புரட்சியை யார் நடத்தியது? நேரம் கிடைக்கிற போது நம்முடைய தந்தை பெரியார் எழுதிய பழைய தலையங்கங்களை எடுத்துப் படித்தால் தெரியும், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் அல்லவா இந்தப் போர்க்கொடியைத் தூக்குகிறார்கள். விடுதலையின் பக்கம் இருக்கிறார்கள் என்று தந்தை பெரியார் சொன்னதை நேரம் கிடைக்கிற போது, நாம் எல்லோரும் படிக்க வேண்டும்.

பொதுவுடைமை இயக்கத்தை  – திராவிடர் இயக்கத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது

எனவே, பொதுவுடைமை இயக்கத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. திராவிடர் இயக்கத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. நாணயத்தின் இரு பக்கம் போல் நாட்டின் நலன் கருதி இந்த இரண்டு இயக்கத்தின் பயணங்களும் தொடர வேண்டும். நாம்தான் நிறைவில் வாகை சூடுவோம்! நிறைவில் இந்த உலகம் முழுவதும் தந்தை பெரியார் சொன்னது போன்று செங்கொடி மட்டுமே பறக்கும். அதில் தான் சமத்துவமும், சமதர்மமும் இருக்கிறது.

நூற்றாண்டு கண்ட இந்த மகத்தான இயக்கத்துக்கு; நூற்றாண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் – என் சார்பில் அல்ல, நூறாண்டு காலம் செழுமையான விழுமியங்களைக் கொண்ட ஒரு மகத்தான பேரியக்கத்தின் சார்பில், இந்த சுயமரியாதை இயக்கத்தை கட்டி அணைத்துக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் சார்பில் இருகரம் கூப்பி வணக்கத்தைச் சொல்கிறோம்.

– இவ்வாறு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *