குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது
கட்டாய மத நடைமுறை அல்ல!
திருவனந்தபுரம், அக். 25- “அர்ச்சகர்கள் குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மத நடைமுறை எதுவும் இல்லை” என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்வது அரசியலமைப்பு கூறும் சமத்து வத்தை உறுதி செய்யும். ஜாதிக்கும் பாரம்பரி யத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியிருக்கும் நீதிபதிகள், இதுதொடர் பான விவகாரத்தில், அகில கேரள தந்திரி சமாஜம் (AKTS) தாக்கல் செய்த ரிட் மனு வையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
2023-2024ஆம் ஆண்டில் 75 பகுதி நேர சாந்திகள் (அர்ச்சகர்கள்) நியமன நட வடிக்கைகளை கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியம் (KDRB) மேற்கொண்டது. அப்போது பகுதிநேர சாந்திகளாக நியமிக்கப்படு வதற்கு, எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியுடன், திருவாங் கூர் தேவசம் வாரியம் (TDB) மற்றும் கேரள தேவசம் ஆட் சேர்ப்பு வாரியத்தால் அங்கீ கரிக்கப்பட்ட தந்திர வித்யா பீடங்கள் வழங்கும் அனுபவச் சான்றிதழ்கள் போதுமானது என்று அறிவித்திருந்தது.
பாரம்பரிய வேதப் பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் விடுபடுவார்கள் என்று தந்திரி சமாஜம் கவலை தெரிவித்தபோது, அந்த மாணவர்களும் விண்ணப்பிக்க அரசு அனுமதித்தது. எழுத்துத் தேர்வுக்கு கூடுதலாக, சடங்கு சம்பிரதாயங்கள் பற்றிய அறிவை மதிப்பீடு செய்து குறுகிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.
கடந்த 22.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது
இதனிடையே, அர்ச்சகர் பணிக்கு ‘தந்திர வித்யாலயாக்கள்’ வழங்கும் அனுபவச் சான்றி தழை அங்கீகரிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம் (TDB), கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியம் ஆகியவற்றின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில கேரள தந்திரி சமாஜம் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் வி. ராஜா விஜயராகவன், நீதிபதி கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வில் கடந்த 22.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் கே.ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். “கேரளத்தில் உள்ள சுமார் 300 பாரம்பரிய தந்திரி குடும்பங்களை உள்ளடக்கிய பதிவு செய்யப்பட்ட சங்கமான அகில கேரள தந்திரி சமாஜ மான தாங்கள் தான், தலைமுறை தலை முறையாக அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். ஆனால் பாரம்பரிய தந்திரி சமூகம் உள்ளிட் டோரை ஆலோசிக்காமல் தந்திர வித்தியா பீடம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. தாந்ரீகக் கல்வியை வழங்கும் நிறுவன ங்களை மதிப்பிடுவதற்கோ அல்லது அங்கீகரிப்பதற்கோ கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியத்திற்கு நிபுணத்துவம் இல்லை” என்று அவர்கள் வாதங்களை வைத்தனர்.
திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் சார்பில் வழக்குரைஞர் ஜி. பிஜு, கேரள தேவ சம் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் வி.வி.நந்தகோபால் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்கள், “அர்ச்சகர் பணியில், ஒதுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும், அவர்களை அர்ச்சகர் பணிக்கு தயார்ப்படுத்துவதற்கான பாடத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாததை கவனத்தில் கொண்டே தந்திரி கல்வியை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை விரிவுபடுத்த முடிவு செய்தது.
ஓர் ஆண்டு பாடத் திட்டம்!
அதன்படி, தந்திரிகளைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவின் மூலம், ஓர் ஆண்டு பாடத்திட்டத்தை வகுத்து பயிற்சி அளிக்கும் ‘தந்திர வித்யா பீடங்கள்’ போன்ற நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கேரள தந்திரி சமாஜத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களும், அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கவும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய நடைமுறைகளை ஒழிக்காமல், அதேநேரத்தில் தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ள அகில கேரள தந்திரி சமாஜம் என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் அமைப்பாகும்.
கேரள அரசுத் தரப்பில்…
அர்ச்சகர்கள் நியமனத்தை தங்களின் பரம்பரை பாத்தியதையாக கருதும் இந்த அமைப்பு, குறிப்பிட்ட பிரிவினரை அர்ச்ச கர்களாக நிலை நிறுத்தும் நோக்கத்தின் அடிப்ப டையிலேயே மனுத்தாக்கல் செய்துள்ளது. தகுதியைக் கருத்தில் கொள்ளாமல், ஏழு தலைமுறைகளாக தாந்ரீக பூஜை செய்து வரும் தந்திரி குடும்பங்களுக்கே அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்” என்று கேரள அரசுத் தரப்பில் வாதங்களை வைத்தனர்.
இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், “அர்ச்சகர்கள் நியமனத்திற்குத் தகுதி பெற ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்து வதை, ஓர் அத்தியாவசிய மத நடைமுறை, சடங்கு அல்லது வழிபாட்டு முறையை வலியுறுத்துவதாகக் கருத முடியாது.
அரசியலமைப்பிற்கு முந்தைய காலத்தி லிருந்தே எந்தவொரு வழக்கமோ அல்லது பழக்கவழக்கமோ இருந்தாலும், அது மனித உரிமைகள், கண்ணியம் அல்லது சமூக சமத்து வத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதனை அங்கீகரிக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின்
அங்கீகாரத்தைப் பெற முடியாது
அடக்குமுறையான, தீங்கு விளைவிக்கும், பொதுக் கொள்கைக்கு முரணான அல்லது நாட்டின் சட்டத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு வழக்கமோ அல்லது நடைமுறையோ, அரசிய லமைப்புச் சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியாது.
எங்களைப் பொறுத்தவரை, கோயிலில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய தகுதியானவர்கள் என சான்ற ளிக்கும் தந்திர வித்யாலயா முறை ஒரு முழுமையான செயல்முறையாகவே தோன்றுகிறது. பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், கோயில் கடமைகளை மேற்கொள்வதற்கான அவர்களின் தயார்நிலை யைக் குறிக்கும் வகையில், தீட்சை விழாக்க ளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.
மேலும், அத்தகைய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கூட, இறுதித் தேர்வு மற்றும் முறையாக அமைக்கப்பட்ட குழு வால் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படு கின்றனர்.
இதில் கற்றறிந்த அறிஞர்களைத் தவிர, ஒரு புகழ்பெற்ற தந்திரி குழுவும் அடங்கும். இந்தப் பின்னணியில், பாரம்பரிய அர்ச்சர்களின் கீழ் பயிற்சி பெற்ற நபர்களை மட்டுமே சாந்திகளாக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது’’ என்று தீர்ப்பளித்தனர்.
