சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களை அகற்றச் சொல்லி,
சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து
மனு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது!
சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களை அகற்றச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து மனு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
வரவேற்கத்தக்கது!
சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து மனு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பது மிகவும் வர வேற்கத்தக்கது.
பொது இடங்களிலும், சாலைகளிலும் (சட்ட) அனுமதி பெறாமல், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் அதேபோன்று மத நிறுவனங்களால் கட்டப்பட்ட அமைப்புகள் எவையும் இல்லை என்பதை உறுதி செய்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அம்மனு வில் கோரப்பட்டுள்ளது.
கண்டும் காணாததுபோல
அலட்சியப்படுத்தி விட்டு விடுகின்றனர்
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சிறீவத்சவா, ஜஸ்டிஸ் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு இப்படி ஒரு முக்கிய வழக்கைத் தாங்களே பதிவு செய்துள்ளதற்கு முக்கிய காரணம், 31.1.2018 அன்று தந்த ஒரு தீர்ப்பில், ஆக்கிரமிப்பை இந்த மத நிறுவனங்கள் அகற்றிடவேண்டும் என்று தீர்ப்பு தந்தும், நாம் பலமுறை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் வழக்காடியும், அத்தகைய ஆக்கிரமிப்புக் கோவில்கள், அமைப்புகள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் பாயாமல், மறைமுகமாக அதனை ஊக்குவிக்கும் வகையில், காவல்துறையும், அரசு இயந்திர அதிகாரிகளும் கண்டும் காணாததுபோல அலட்சியப்படுத்தி விட்டு விடுகின்றனர்.
அரசியல் கட்சியினரும் இதனால் தங்களது ‘வாக்கு வங்கி’ பாதிக்கப்படுமோ என்பதற்காகத் தெரிந்தும், தெரி யாததுபோல் நடந்து கொள்கின்றனர்!
இரட்டை அளவுகோல் கொண்ட
இரட்டை அநீதிகள் அல்லவா!
நமது ஏழை மக்கள், நடுத்தர மக்கள், எந்த விவரமும் தெரியாமலோ அல்லது ஏமாற்றப்பட்டுத் தங்களது சிறு சேமிப்பையும் செலவிட்டு, வாங்கிய வீடுகள், குடிசைகள் இடிக்கப்படும்போது, அவர்கள் அல்லற்பட்டு ‘ஆற்றாது அழுத கண்ணீர்’ அவலத்தின் உச்சமாகும்!
ஆனால், மதவெறியர்களின் மிரட்டல், பூச்சாண்டிக்குக் காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் இதில் அலட்சியமாக இருக்கும் நிலையில், ஏழைகளிடம் காட்டும் ‘புல்டோசர் அதி காரம்’, இந்தக் கடவுள், கடவுளச்சிகள், சாமிகள், கோவில், மத அமைப்புகள் விஷயத்தில் பாய மறுப்பது – இரட்டை அளவுகோல் கொண்ட இரட்டை அநீதிகள் அல்லவா!
சாலைகளை விரிவுபடுத்தும்போது, நடைபாதைக் கோவில்களை மட்டும் விட்டுவிட்டு செல்வதன்மூலம் பொதுப் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சல் மட்டுமல்ல, விபத்துகளுக்கும் இடம்தரும் கெடுவாய்ப்பு அல்லவா?
இதுபோல பலமுறை பட்டியல் கேட்டும், விரைந்த நடவடிக்கை ஏதும் வந்ததில்லை.
அதே நிலை இப்போதும் ஏற்பட அரசுகளோ, அரசு அதிகாரிகளோ, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற ஆணைப்படி நடவடிக்கைகளை கை விடவே கூடாது!
உடனடியாக செயலில் புயல் வேகத்தில் இறங்கவேண்டியது அவசரம், அவசியமாகும்!
‘ஒப்புக்குச் சப்பாணி’ என்று கிராம மக்கள் கூறுவதுபோல, நடவடிக்கைகளை மெத்தனப்படுத்தி, ‘‘ஊறுகாய் ஜாடியில்’’ போட்டு மூடாமல், விநோத விளக்கங்களைக் கூறாமல், உடனடியாக செயலில் புயல் வேகத்தில் இறங்கவேண்டியது அவசரம், அவசியமாகும்!
போக்குவரத்து நெரிசல் இப்போது எல்லாப் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுவதால், இரண்டு வழிப் பாதைகளை, நான்கு வழிப் பாதைகளாக்கி, நான்கு வழிப் பாதைகளை ஆறு வழிப் பாதைகளாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற மதவாதிகள் சிலர் கூச்சல் கிளப்பினால், சட்டம் அவர்கள்மீது பாய வேண்டுமே தவிர, சமரசத் தீர்வு என்பதை காவல்துறை உருவாக்கக்கூடாது என்பதை, துறை அதிகாரிகளுக்குப் புரிய வைக்கவேண்டியது மிகமிக முக்கியம்.
கடவுளை வணங்குகிறவர்கள், நடுரோட்டில்தான் வந்து வணங்கவேண்டுமா?
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறையின் வாயி லில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, கவசங்களை ஒப்படைத்த போது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்ட பிறகு சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்த போது அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது 4.54 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தி நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் பேத்தியை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இந்தக் கொள்ளைச் சுரண்டலை (அய்யப்பனால் கண்டுபிடிக்க முடியவில்லையானாலும்) சி.பி.அய். போன்ற காவல் கண்காணிப்புத் துறையினர் கண்டுபிடித்து, ஊழல் பெரும் அலை இப்போது மிக உயரத்திற்கு எழும் நிலையில், எதற்கு இப்படி நடுத்தெருவில், ஆக்கிரமிப்பாக ‘திடீர்க்’ கோவில்கள் தேவை?
ஆந்திராவில் உள்ள கார்ப்பரேட்டுகளை மிஞ்சும் கோவிலான திருப்பதி கோவிலிலும் முன்பு தங்கம் ஊழல் பற்றி நடவடிக்கை வரவில்லையா?
சுரண்டல் வியாபாரக் கேந்திரம் அல்லாமல் வேறு என்ன?
அவை ஒருபுறம்; இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அறநிலையப் பாதுகாப்புத் துறை கண்காணிப்பிலும் வராது. தனியார் கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கான வருவாய் ஈட்டும் சுரண்டல் வியாபாரக் கேந்திரம் அல்லாமல் வேறு என்ன?
மத உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் ‘லகான்’ இல்லாத குதிரை அல்ல! கட்டுப்படுத்தப்பட்ட வண்டிக் குதிரைதான் என்பதை மறவாதீர்!
விரைந்து நடவடிக்கை தேவை!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.10.2025
