வானிலை ஆய்வாளர்
செல்வகுமார்
- தகட்டூரில் 18 செ.மீ. மழைப் பதிவு
- ஏரி, குளம் நிரம்பவில்லை என்று சொல்கிறார்கள்!
- 100 நாள்கள் மழை இருக்கின்றது!
- மேட்டூர் அணை முழுக் கொள்ளவை எட்டியுள்ளது!
- வருகின்ற 97 நாள்களும் மழை நாள்கள்தான்!
- தென்மாநிலங்கள் முழுவதும் மழை பொழியப் போகிறது!
- பொதுச் சொத்துகளை ஆக்கிரமித்தால், உங்கள் ஊருக்குத்தான் கேடாக அமையும்!
- அடுத்த சிஷ்டம் 27 ஆம் தேதி தொடங்குகிறது
- சராசரி மழைப் பொழிவைத் தாண்டி கூடுதல் மழை பெய்யும்
- இந்த ஆண்டு இரு மடங்கு மழை பொழியும்!
இந்த மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி மீண்டும் மழை பொழியத் தொடங்கும். 27 ஆம் தேதி கண்டிப்பாகத் தொடங்கிவிடும். 27, 28, 29, 30 அடுத்த மழை; 31 ஆம் தேதியும் மழை இருக்கும். அதற்குப் பிறகு நவம்பர் ஒன்றாம் தேதி இடைவெளி. அடுத்தது, நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதிவரை அடுத்த சிஷ்டம். இப்படியே நவம்பர் மாதம் முழுவதும் சிஷ்டம்தான். எல்லாமே அச்சுறுத்தும் சிஷ்டம்தான். எல்லாமே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் அளவிற்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும். ஜனவரி 26 ஆம் தேதிவரை மழை உண்டு என்றார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார்.
தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார், தமிழ்நாட்டின் வானிலை குறித்த தனது ஆய்வுகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியிட்டு வருகிறார். இவர் புயல் மற்றும் கனமழை குறித்த எச்சரிக்கைகள், வானிலை முன்னறிவிப்புகள், மண்டல வாரியான வானிலை அறிக்கைகள் மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குகிறார்.
இவர் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை வர உள்ள மாதங்களில், எவ்வெப்போது மழை பொழியும், அதன் அளவீடு என்ன என்பன குறித்த விவரங்களைப்பற்றி வானிலை ஆய்வாளர் செல்வகுமார் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:
வடகிழக்குப் பருவ மழை வரக்கூடிய மாதங்களில் எப்படி இருக்கும்?
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்த அறிக்கைப் பதிவு செய்யப்படுவதற்கான காரணம், இன்னும் ஒரு சில மாவட்டங்களில் மழை தொடங்கி பொய்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு செ.மீ., இரண்டு செ.மீ., மூன்று செ.மீ. பெய்து கொண்டிருக்கின்றது.
தகட்டூரில் 18 செ.மீ. மழைப் பதிவு
இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் 118 மி.மீட்டர் மழை பெய்திருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் 183 மி.மீட்டர் மழை பெய்திருக்கிறது. இவையெல்லாம் தானியங்கி மழைப் பதிவு மானிட்டரில் பதிவாகி இருக்கக்கூடிய மழைப் பதிவுகள்.
தகட்டூரில் 183 மி.மீட்டர் என்றால், 18 செ.மீ. நாகப்பட்டினத்தில் 12 செ.மீ. மழைப் பதிவு. தகட்டூர் மழை பதிவு என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டு இருக்கக்கூடியது. ஆனால், வருவாய்த் துறையினரால் கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிக்கை பதிவு செய்யப்படக்கூடிய நேரம் அதிகாலை 4.30 நிமிடம்.
ஏரி, குளம் நிரம்பவில்லை என்று சொல்கிறார்கள்!
இப்பொழுது பல மாவட்டங்களில் மழையே பொழியவில்லை, ஏரி, குளம் நிரம்பவில்லை என்று சொல்கிறார்கள்.
என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய கஷ்டங்களையெல்லாம் சொல்கிறார்கள். மக்களுடைய கஷ்டமெல்லாம் எனக்கும் தெரிகிறது. ‘‘தயவு செய்து இதற்கு மேலே உங்களுடைய கஷ்டங்களையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். எனக்குப் பெரிய சோகமாகிவிடும், நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’’ என்று சொன்னாலும், தங்களுக்கு இருக்கின்ற கஷ்டங்களையெல்லாம் சொல்லி வருகிறார்கள்.
அவர்களுக்கு என்ன கஷ்டம்?
ஆறு, குளங்களில் தண்ணீர் இல்லை. ஏரியில் தண்ணீர் இல்லை. திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் – திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் – கரூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில். மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்நிலை இருக்கலாம்.
அதிகமாகக் கைப்பேசி அழைப்புகள் வருவது தாராபுரத்திலிருந்துதான்.
100 நாள்கள் மழை இருக்கின்றது!
நான் ஏற்கெனவே பல அறிக்கைகள் கொடுத்திருக்கின்றேன். 100 நாள்கள் மழை இருக்கின்றது என்று. இடைவெளியே பெரிதாக இருக்காது என்று சொன்னேன். இப்போது இடைவெளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம். மழையை ஆராய்ச்சி செய்த காலம் போய், இன்றைக்கு இடைவெளியை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றோம்.
நீண்ட கால அறிக்கை கொடுக்கும்போது என்ன சொன்னோம்?
இறுதிக்கட்ட தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக இருக்கும் என்றும், கேரளாவில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னோம்.
சொன்னபடியே பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கும்போது பெய்த மழை, இறுதிக் கட்ட தென்மேற்கு பருவ மழையால் கேரளாவில், கருநாடகா, ஆந்திராவில் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அணை
முழுக் கொள்ளவை எட்டியுள்ளது!
முழுக் கொள்ளவை எட்டியுள்ளது!
அப்படியே அது, வடகிழக்குப் பருவமழையாக மாறி, தென்மாவட்டங்களில் கொட்டோ கொட்டென்று மழை கொட்டியது. இப்போது அணைகள் எல்லாம் நிரம்பியிருக்கின்றன.
மேட்டூர் அணை இந்த ஆண்டுகளிலேயே முழுக் கொள்ளளவை பல முறை எட்டியுள்ளது.
அதேபோன்று, பவானி சாகர் அணை நிரம்பும் என்று அறிக்கையில் சொல்லியிருந்தோம். அப்படியே அணை நிரம்பி, உபரி நீர் திறக்கும் அளவிற்கு, கிட்டத்தட்ட 2 டி.எம்.சி, 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணை நிரம்பி, உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
எல்லா அணைகளும் நிரம்பிவிட்டன. தேனி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம்.
மழை தொடங்கிய அன்றே, அதிக மழை. வடகிழக்குப் பருவ மழை 16 ஆம் தேதி தொடங்கியதாக எடுத்துக் கொண்டாலும், 17 ஆம் தேதி, நன்றாகத் தொடங்கியது. 18 ஆம் தேதிதான் உண்மையான வடகிழக்குப் பருவ மழையே தொடங்கியது.
வருகின்ற 97 நாள்களும்
மழை நாள்கள்தான்!
மழை நாள்கள்தான்!
20 ஆம் தேதி. வடகிழக்குப் பருவ மழை தொடங்கி மூன்று நாள்கள் முடிந்திருக்கிறது. 100 நாள்களில் மூன்று நாள்கள் முடிந்து, மீதம் 97 நாள்கள் இருக்கின்றன.
வருகின்ற 97 நாள்களும் மழை நாள்கள்தான் அதிகமாக இருக்கும். இடைவெளி நாள் மிகவும் குறைவாக இருக்கும்.
அதிக மழை எங்கே இருக்கும் என்றும் சொல்லியிருக்கின்றோம்?
குறைந்த அழுத்த பகுதி, டெல்டா மாவட்டங்களுக்கு அருகே வந்து, டெல்டா மாவட்டம் வளிமண்டலம் வழியாக, புயல் கிடையாது – சாதாரண ஒரு குறைந்த அழுத்தப் பகுதி நகரும்போது, அங்கே மழை இல்லாமல், கொஞ்சம் இடைவெளி கொடுக்கும். சுற்றிலும் மழை பெய்யும்.
தென்மாநிலங்கள் முழுவதும்
மழை பொழியப் போகிறது!
மழை பொழியப் போகிறது!
அப்படியென்றால், அந்தப் பகுதியில் குறைந்த அழுத்தப் பகுதி வந்துவிட்டது என்று அர்த்தம்.
அந்த குறைந்த அழுத்தப் பகுதி இலங்கைமீது ஏறி, டெல்டா மாவட்டங்களின்மீது ஏறி, வட கடலோரங்கள் வரைக்கும் கரையையொட்டியே நகர்ந்து, பிறகு ஆந்திரப் பிரதேச கரைக்குப் போய், பிறகு ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கருநாடகாவிற்குப் போய், மகாராட்டிரா, கோவாவிற்குப் போகிறது.
இதனிடையே அந்தமான் பகுதியில் இருக்கின்ற சிஷ்டம் அப்படியே ஆந்திரப் பிரதேசம் போய், தென்மாநிலங்கள் முழுவதும் மழை பொழியப் போகிறது.
இப்போது இந்த சிஷ்டம், அதிக மழையை, இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிய, அப்படியே ஒரு டெல்டா மாவட்டத்தில் ஒரு காம்பஸ் வைத்து ஒரு வட்டத்தைப் போடுங்கள் – இராமநாதபுரம் இராமேசுவரம் பகுதியில் வையுங்கள் – இராமேசுவரம் பகுதியிலிருந்து மதுரை, மதுரையிலிருந்து திண்டுக்கல், திருப்பூர் – கோயம்புத்தூர், நீலகிரி – ஈரோடு, கிருஷ்ணகிரி – தருமபுரி இவையெல்லாம் அடக்கம்.
இந்தப் பகுதியில்தான் இரு காட்டு இணைவு ஏற்படும். இதற்கு வடக்கேயும், தெற்கேயும் உள்ள மாவட்டங்களைப் பாருங்கள் – தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, வடக்கே புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம்.
திண்டுக்கல் ஒட்டுமொத்த பகுதி – இதனால் திருப்பூர் மாவட்ட பகுதிகளும் இதில் அடங்கிவிடும். நாளைக்குள் நல்ல மழை பொழியும். குளம் நிரம்பாது – ஒரு சில இடங்களில் நிரம்பும் – ஒரு சில இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தாழ்வான பகுதிகளில் வடிகால், வாய்க்கல் சரியில்லை என்றால், தண்ணீர் புகத்தான் செய்யும். இந்த வடிகால், வாய்க்கால் கட்டியதின் காரணமாகத்தான், குளமே நிரம்பவில்லை. சரியாக, வடிகால், வாய்க்கால் வழியாக தண்ணீர் சென்றால், குளம் நிரம்பும். வடிகால், வாய்க்கலை அடைத்ததால்தான் குளங்கள் நிரம்பவில்லை.
ஒவ்வொருவருக்கும் சுயநலம். இதையெல்லாம் ஏற்கெனவே பல அறிக்கைகளில் சொல்லிவிட்டேன். மனிதன் பிறக்கும்போது எதுவும் கொண்டுவரவில்லை; போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை.
பொதுச் சொத்துகளை ஆக்கிரமித்தால்,
உங்கள் ஊருக்குத்தான் கேடாக அமையும்!
உங்கள் ஊருக்குத்தான் கேடாக அமையும்!
வடிகால், வாய்க்காலை ஆக்கிரமிக்கிறீர்கள். குளங்களை ஆக்கிரமிக்கிறீர்கள்; பொதுச் சொத்துகளை ஆக்கிரமிக்கிறீர்கள். இப்படி ஆக்கிரமித்தால், உங்கள் ஊருக்குத்தான் கேடாக அமையும்.
வடிகால், வாய்க்கால் எல்லாம் மிகவும் அவசியமாகும். குளங்கள் நிரம்பாததற்கு இது ஒரு காரணம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை; போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்.
இராமநாதபுரம் இராமேசுவரம் தொடங்கி, கோயம்புத்தூர், பெங்களூரு வரைக்கும் மழை பொழியும்.
டெல்டா மாவட்டத்திலும் மழை பொழியும். வடகடலோரத்திலும் மழை பொழியும்.
ஆனால், வடகடலோரம் லேசான மழை பதிவானாலும், பேசு பொருளாகிவிடும். ஊடகங்கள் எல்லாம் தூறலையும் பெரிதாகக் காட்டும். ஆனால், அதைவிட பெரிய மழை, தென்மாவட்டங்களில் இருக்கிறது.
தென்மாவட்டங்களில் குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் இரண்டு நாள்கள் கன மழை பொழியும்.
அப்படியே இரண்டு நாள்கள் இடைவெளி கொடுக்கும். மழை கொஞ்சம் ஓய்ந்திருக்கும்.
கருநாடகாவிலும், கேரளாவிலும் மழை பொழிந்துகொண்டே இருக்கும்.
அடுத்த சிஷ்டம் 27 ஆம் தேதி தொடங்குகிறது
அடுத்த சிஷ்டம் அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்குகிறது. 26 ஆம் தேதியே மழை பொழியத் தொடங்கும். 27 ஆம் தேதி கண்டிப்பாகத் தொடங்கிவிடும். 27, 28, 29, 30 அடுத்த மழை; 31 ஆம் தேதியும் மழை இருக்கும்.
அதற்குப் பிறகு நவம்பர் ஒன்றாம் தேதி இடைவெளி. அடுத்தது, நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதிவரை அடுத்த சிஷ்டம். இப்படியே நவம்பர் மாதம் முழுவதும் சிஷ்டம்தான். எல்லாமே அச்சுறுத்தும் சிஷ்டம்தான்.
எல்லாமே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் அளவிற்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும்.
குறைந்தபட்சம், ஒரு தாழ்வு பகுதியாக இருந்து, இப்போது எப்படி தாழ்வுப் பகுதி மழைப் பொழிவைக் கொடுக்கிறதோ, இதே போன்று ஒவ்வொரு சிஷ்டமும் மழைப் பொழிவைக் கொடுக்கும்.
ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். அரபிக் கடலுக்குப் போகாது என்றார்கள், போய்விட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்யாது என்று சொன்னார்கள்; மழை பெய்து கொண்டிருக்கிறது.
தென்மாவட்டங்களில் பற்றாக்குறை மழை என்று சொன்னார்கள்; தேனி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. எங்கும் மழை பெய்யும் என்று சொன்னோமோ, அதேபோன்று மழை பெய்து கொண்டிருக்கின்றது.
சராசரி மழைப் பொழிவைத் தாண்டி கூடுதல் மழை பெய்யும்
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு வானிலை அமைப்பை ஏற்படுத்தப் போகிறது. நிறைய மழை பொழியும். சராசரி மழைப் பொழிவைத் தாண்டி கூடுதல் மழை பெய்யும்.
தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களையும் தாண்டி, கேரளா, கருநாடகா மாநிலத்திலும் மழை பொழியும் என்று சொன்னோம். அதேபோன்று மழை பொழிந்துகொண்டிருக்கின்றது.
ஆகவே, நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். நல்ல மழை காத்திருக்கிறது.
நவம்பர் மாதம் முழுவதும் மழை நிகழ்வுதான்.
இப்போது ஆந்திரப் பிரதேசம் போயிருக்கின்ற நிகழ்வு, அடுத்தடுத்து வடகடலோரம் சென்னையையொட்டி வரும். பிறகு மாமல்லபுரம், பிறகு கடலூர், பிறகு புதுச்சேரியையொட்டி, தெற்கே காரைக்கால், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகள். டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என்று எல்லா மாவட்டங்களும் நிகழ்வுகள் இருக்கின்றன.
ஆனால், அச்சப்படவேண்டாம். காற்றுப் பாதிப்பு இல்லாமல், நிறைய மழைப் பொழிவைக் கொடுக்கும்.
ஏற்கெனவே மழைப் பொழிவு, 55, 60 சதவிகிதத்திற்கு மேல் கூடுதலாகப் பொழிந்துவிட்டது.
இந்த ஆண்டு இரு மடங்கு மழை பொழியும்!
இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை, ஒட்டுமொத்தம் 45 செ.மீ. மழை என்றால், இந்த ஆண்டு 75 செ.மீ. மழை பொழிவைக் கொடுக்கலாம். எவ்வளவு கூடுதலாகப் பெய்யும் என்றால், கிட்டத்தட்ட பெய்ய வேண்டிய மழைக்கு இரு மடங்கு மழை பொழியும்.
எல்லா மாவட்டங்களுக்கும் சராசரியாக கூடுதல் மழை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இதைக் கேட்கும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும்.
அதனால்தான், ஜனவரி 30 ஆம் தேதிவரை பருவ மழை இருக்கிறது. இலங்கைக்கு அதைவிட கூடுதல் மழை இருக்கிறது என்கிறோம்.
தமிழ்நாட்டினுடைய டெல்டா மாவட்ட வானிலைதான், வட இலங்கை வானிலை.
தமிழ்நாட்டினுடைய தென்மாவட்ட வானிலைதான், தென்னிலங்கை வானிலை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணம், காங்கேசன் துறை, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் நிறைய மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.
ஆக, இந்த மழைக் குறிப்பு, ஒட்டுமொத்த இலங்கைக்கும், மழை பொழியும். நாளைக்கும் மழை பொழியும். அதற்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி கொடுக்கும்.
பிறகு அடுத்த சிஷ்டம் வந்துவிடும்.
பிப்ரவரி மாதம் வரையில் இலங்கைக்கு மழை இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு ஜனவரி 26 ஆம் தேதிவரை மழை உண்டு. ஒட்டுமொத்த மழைப் பொழிவு சராசரிக்கும் மிகுதிக்கு மிகுதி. கடலோரம் கண்டிப்பாக, உள்ளே சராசரி, சராசரிக்குக் கூடுதல்.
கடலோரம் சராசரிக்கு, மிகுதிக்கு மிகுதி.
இதில், டெல்டா வடகடலோரம் அதிகம்.
எல்லா மாவட்டங்களுக்கு சராசரிக்கு அதிகமாக மழை பொழியும். உங்கள் ஊரில் குளங்கள், ஏரிகள் நிரம்பும் என்கின்ற நம்பிக்கையுடன் இருங்கள்.
உடனடியாக உங்கள் ஊருக்கு மட்டும் மழை வந்து கொட்டிவிட்டுப் போகாது, நிகழ்வு!
ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வு வரும்.
தொடர்ந்து மழை பொழிந்து கொண்டிருக்கும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
