திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (23.10.2025) சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செங்கற்பட்டு மறைமலைநகரில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று, அவற்றைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுவது தொடர்பான தீர்மானம் – கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும்.
பாடத் திட்டங்களில் நீதிக் கட்சி ஆட்சியின் சாதனைகள், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வரலாறு குறித்து பள்ளிப் பாடங்களில் இடம் பெற வேண்டும் என்று உள்ளிட்ட தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்.
‘திராவிட மாடல்’ அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் மீதான கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்களும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
சமூக நீதிக்குக் குழி பறிக்கும் வகையில் ஒன்றிய பிஜேபி அரசு கடைப்பிடிக்கும் போக்கினைச் சுட்டிக் காட்டும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
‘புதிய கல்வி’ என்ற பெயரால் நவீன குலக் கல்வியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும் – ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்தை வலிமையாக எதிர்க்கும் திராவிட மாடல் அரசான தி.மு.க. ஆட்சிக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானங்களும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மக்களாட்சி – குடியரசு ஆட்சி நடக்கும் நாட்டில் ஆளுநர் பதவி என்பது – தேவையற்றது என்றும், அப்பதவி அகற்றப்பட வேண்டும் என்ற இந்தியாவுக்கே வழி காட்டும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டுக்கு வருகை தந்து நிறைவுரையாற்றி பெரியார் உலகிற்கு தி.மு.க. சார்பில் நன்கொடை அறிவித்தமைக்கும், மாநாட்டில் அறிவித்தபடி திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்கே நேரில் வருகை தந்து பெரியார் உலகத்திற்கான காசோலையை வழங்கிய முதலமைச்சரின் பண்பாட்டைப் பாராட்டியும் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற்சாலை ஈர்ப்பு, சமூகநலத் திட்டங்கள், சுகாதாரம், சமூகநீதி, சமத்துவம், டிஜிட்டல் மற்றும் தொழில் நுட்பப் பயன்பாடு, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சிறுபான்மையினரின் நலம், கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு, பெண்கள் உரிமை மற்றும் பெண்களுக்கான உதவித் திட்டங்கள் என்றவாறு சொல்லிக் கொண்டே போகலாம் என்று கூறும் அளவுக்குத் தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குப் பல வகையிலும் உதவிக்கரம் நீட்டும் திராவிட மாடல் அரசான தி.மு.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் 2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சி மலர்ந்திட பிரச்சாரம் மற்றும் ஆக்க ரீதியான பணிகளில் திராவிடர் கழகம் பாடுபடும் என்ற மறைமலைநகர் மாநாட்டின் தீர்மானத்தையொட்டி, கழகத் தலைவர் தலைமையில் பிரச்சாரத் திட்டமும் நேற்றைய கூட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்கள் நல்ல அளவு பிரச்சாரம் செய்து, ஒத்த கருத்துள்ள கட்சியினரின் ஆதரவையும் உள்ளடக்கி, கழகத் தலைவரின் பிரச்சாரப் பயணத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திட வேண்டும்.
2026 சட்டப் பேரவைத் தேர்தல் என்பது தமிழ்நாட்டு வரலாற்றில் மிக முக்கியமானது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி நடைபெறும் இத்தேர்தலில், அந்த சுயமரியாதை இயக்க வழிவந்த தி.மு.க. தலைமையிலான ஆட்சியை நிலை நாட்ட வேண்டியது – காலத்தின் கட்டாயமாகும்!
ஒன்றியத்தில் ஆட்சி அதிகார பீடத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபியின் ஸநாதன தத்துவத்திற்கும் – ‘பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்!’’ என்ற தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை உள்ளடக்கிய சித்தாந்தத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது என்பதை மறந்து விடக் கூடாது!
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பது நமது திராவிட சித்தாந்தமாகும்! இதற்கு நேர்மாறானது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்; ஒருவன் இழிவில் கிடந்து உழல்வதும், வறுமைப்பிடியில் சிக்கித் தவிப்பதும், கர்மபலன், தலையெழுத்து, விதிப் பலன் என்பது ஆர்.எஸ்.எஸின் பார்ப்பனீய சித்தாந்தம்.
இதில் எது நாட்டுக்குத் தேவை? தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியா முழுமையும் உள்ள பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினர் அனைவரும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய இடம் இது!
மக்களிடத்தில் கடவுள், மத, பக்திப் போதையை ஊட்டி ஒரு சிறு கூட்டத்தின் ஆதிக்க நிலையைத் தொடரச் செய்யும் சூழ்ச்சிதான் ராமன் கோயில் என்றும், கும்பமேளா என்றும், சதா மக்களின் சிந்தனையை முடக்கும் இத்தகு ஆபத்தான பார்ப்பன சூழ்ச்சியை முறியடிப்பது தான் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க திராவிட இயக்க சித்தாந்தமும், செயல்பாடுகளுமாகும்.
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை நிறுவுவதன் மூலம் – இந்தக் கொள்கையின் தாக்கம் வட மாநிலங்களிலும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை மனதிற் கொண்டு நமது கழகத் தோழர்கள் மற்ற அனைத்து மக்களும் உணரும் வகையில் பிரச்சாரம் உள்ளிட்ட ஆக்கப் பணிகளில் ஈடுபட வேண்டியது கட்டாயமாகும்.
நேற்றைய தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமானதொரு தீர்மானம்: கட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்துவது – இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர்ப் பாசறை, தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணி, மருத்துவர் அணி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பலப்படுத்தும் அமைப்பு ரீதியான பணிகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செங்கற்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்த கருஞ்சட்டை இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு, மெய் சிலிர்த்த முதலமைச்சரே, கருப்புச் சட்டைக்காரர்களுக்கு ‘சல்யூட்’ என்று கூறியதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது!
பாசிச பா.ஜ.க.வின் பிற்போக்குச் சித்தாந்த நோய்க்குச் சரியான மருந்து தந்தை பெரியாரியலே – அவர்தம் சுயமரியாதைத் தத்துவமே என்று புரிந்து கொள்ளும் எழுச்சி – இளைஞர்கள் மத்தியில் வீறு கொண்டு எழுந்திருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
இந்த எழுச்சியைப் புரிந்து கொண்டு, இதன் பலன் இயக்கப் பலத்திற்கு அடிகோலும் வகையில் கழகப் பொறுப்பாளர்களின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று நேற்றைய தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இயக்கத்தின் பலம் என்பது நமது இன நலனுக்கான பலமே!
இன்று நம்முன் இருக்கக் கூடிய முக்கிய பணி ‘பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்’ என்பதற்கான அடையாளம்தான் – திருச்சி சிறுகனூரில் அமையும் ‘பெரியார் உலகம்’ ஆகும்.
அதற்கான நிதி திரட்டும் பணியில் கழகத் தோழர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியது நேற்றைய தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
தி.மு.க.வைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (23.10.2025) திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்கு வருகை தந்து, தங்கள் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது மகிழத் தக்கதும் போற்றத்தக்கதுமாகும்.
தந்தை பெரியார் ஏதோ ஓர் இயக்கத்துக்கு மட்டும் தலைவர் அல்ல! உலகில் உரிமை மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான வழிகாட்டும் சித்தாந்தத் தலைவரும் ஆவார்.
கழகத்தை வளப்படுத்துவோம் – தந்தை பெரியாரின் தத்துவத்தை சித்தாந்தத்தை எங்கெங்கும் கொண்டு செல்வோம்!
வெற்றி நமதே! வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!
