
கவிஞர் கலி. பூங்குன்றன்
தோழர்களே, தோழர்களே!! கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்தீர்கள்! கடும் மழையின் மிரட்டல் – போக்குவரத்துச் சிக்கல்கள். இந்த முள் வேலிகளையெல்லாம் கடந்து தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்தீர்கள்.
‘கூட்டத்தைத் தள்ளி வைத்து விடலாமா?’ என்று நம் தலைவர் நினைக்கும் அளவுக்கு நிலைமை அப்படித்தான் இருந்தது.
அத்தனையையும் அலட்சியம் செய்து, தலைவர் அழைக்கிறார் என்ற உணர்ச்சியோடு வந்தீர்கள்!
கருஞ்சட்டைகளின் கடமை உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு வலிமை இல்லை! வணக்கம் தோழர்களே! வாழ்த்துகள் தோழர்களே! நன்றி தோழர்களே!!
தலைமை செயற்குழுவில் மக்கள் நலனுக்காக தீர்மானங்கள் இந்தக் கால கட்டத்திற்கு மிகவும் அவசியமானவையே!
அதில் முக்கிய புள்ளியாக இருந்தது – ‘பெரியார் உலகமே!’ நமது தலைவர் ஆசிரியரின் கனவுத் திட்டம் அது! அவர் நினைத்தது எதுவும் நிறைவேறாது போனதில்லை.
பெரியார் மணியம்மைப் பொறியியல் கல்லூரியைத் தொடங்கினார் – பிறகு அது பல்கலைக் கழகமாகப் பரிணமித்தது!
கையில் காசு இல்லை– எப்படி வந்தது அந்தத் துணிச்சல்? வங்கியில் கடன் வாங்கினோம் – நாணயமாகத் திருப்பிச் செலுத்தினோம்! நாணயத்திற்கு மறுபெயர் தானே திராவிடர் கழகம் – பெரியார் தொண்டர்கள்.
தந்தை பெரியார் காலத்தில் இரு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் – ஒரு நடுநிலைப்பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம்.
அன்னை மணியம்மையார் காலத்தில் பெரியார் மணியம்மை பெண்கள் உயர் நிலைப்பள்ளி!
அன்னையார் மறைவிற்குப் பிறகு அப்பப்பா, எத்தனை எத்தனைக் கல்வி நிலையங்கள், நிறுவனங்கள்!
பெரியார் நூற்றாண்டு நினைவுப் பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஜெயங்கொண்டத்திலும். வெட்டிக்காட்டிலும் பெரியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், பெரியார் அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ். பயிற்சி நிறுவனம், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம், இத்தியாதி… இத்தியாதி… மளமளவென்று வளர்த்தார் நமது தலைவர் ஆசிரியர்.
நான்கு பக்கங்களாக இருந்த ‘விடுதலை’ எட்டுப் பக்கங்களாக பல வண்ணங்களில்; சென்னையில் மட்டும் வெளிவந்த ‘விடுதலை’ திருச்சியிலும் மற்றொரு பதிப்பு!
இடையில் நின்ற ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ மீண்டும் புதுப் பொலிவோடு தொடக்கம் – குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு! திறந்த மனம் உள்ளவர்கள் சிறந்த பாராட்டுகளைக் குவிக்கிறார்கள்.
இப்பொழுது இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு திருச்சி சிறுகனூரில் 27 ஏக்கரில் பெரியார் உலகம்!
60 அடி பீடத்தில் 95 அடி பெரியார் சிலை, அருங்காட்சியகம், மெழுகுச்சிலை அரங்கம், குழந்தைகள் பூங்கா, அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம், உணவகம், வாகன நிறுத்தகம் இன்னோரன்ன அம்சங்களோடு – வரலாற்றில் நிலை பெற்ற சின்னமாக நிலை நிறுத்தும் பெரிய முயற்சி.
முதலில் 10 கோடி என்று ஆரம்பித்து, இப்பொழுது நூறு கோடிக்கு மேலே எட்டியது!
நாம் என்ன ஆலை முதலாளிகளா? தொழிற்சாலைகள் நடத்தும் அதிபர்களா? ஏதோ கட்டடங்கள், அதில் வரும் வாடகை ‘விடுதலை’ உள்ளிட்ட ஏடுகளை நடத்த வேண்டும், நூல்களை வெளியிட வேண்டும், கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும். தொண்டு நிறுவனங்கள் நடத்திட வேண்டும். (இலாப நோக்கில் அல்ல!)
வெறும் கட்டடங்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
இந்த நிலையில் வழக்கமாக நம் தலைவர் ஆசிரியர் எடுக்கும் முடிவுதான் பெரியார் உலகம்!
அவருக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. தந்தை பெரியாரால் பலன் பெறாத ஒரே ஒரு குடும்பம் தமிழ்நாட்டில் உண்டா? ஒவ்வொரு கதவாகத் தட்டுவோம்!
தந்தை பெரியார் தொண்டால் பலன் பெற்ற மக்கள் நன்றி மறவாதவர்கள் என்ற நம்பிக்கை மேலும் நமக்குண்டு.
‘பெரியார் உலகம்’ பணியை மக்களிடம் ஒப்படைத்தார் – அறிக்கைகளை வெளியிட்டார் – தோழர்களை முடுக்கி விட்டார். ‘தனிப்பட்ட என் மூலம் நிதி திரட்டல் இரண்டு கோடி’ என்றார். தலைவர் கட்டளையிட்டால் அதற்கு அட்டி ஏது?
இரண்டு கோடிக்கு மேல் நிதியைக் குவித்துக் காட்டினார்! கழகத் தோழர்களுக்குள், பொறுப்பாளர்களிடையே ஆரோக்கியமான போட்டி!
நீ முந்தி, நான் முந்தி ‘உங்களைவிட நாங்கள் அதிக நிதி’ என்று களத்தில் குதித்தனர் – திட்டமிட்டனர்.
குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் நிதி அளிக்கும் பட்டியலைத் திரட்டினர். தோழர்கள் புடைசூழ அவர்களை எல்லாம் சந்தித்தனர்!
‘பெரியாருக்குத்தானே – தாராளமாகத் தருகிறோம்’ என்று அவர்களின் தாராளக் கைகள் நீண்டன!
அவர் நெற்றியில் திரு நீறு பூசி இருப்பார், நாமம் தரித்திருப்பார், ஏன் காவி வேட்டிகூட அணிந்திருப்பார்! அவற்றை எல்லாம் கடந்து தந்தை பெரியார் ஊட்டிய இனமானம் – சமூகநீதித் தொண்டு – இவற்றால் நம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி என்னும் உணர்ச்சி அவர்களையும் நன்கொடையாளர்களாக்கிற்று.
இப்பொழுது ஒரு நல்ல திருப்பம் தோழர்களே! செங்கற்பட்டு மறைமலை நகரில் கடந்த 4ஆம் தேதி… சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டையினர் குடும்பம் குடும்பமாக சங்கமம் – அதிலும் சிறப்பாகப் பெரும்பாலும் நெஞ்சு நிமிர்த்தி தோள் புடைக்கும் கருஞ்சட்டை இளைஞர் பட்டாளம்!
பல்வேறு கட்சிகளின் சங்கநாதம், கழகத் தோழர்களின் கருத்தரங்கம், தீர்மான அரங்கம் – பேரணி – அப்பப்பா… சொல்லி அடங்காது!
சுயமரியாதை இயக்க வழிவந்து ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வராமல் இருப்பாரா?
வந்தார் – பெரியார் சமூகக் காப்பணி மரியாதையோடு மாநாட்டு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மக்கள் கடலைப் பார்த்தார்! அதிலும் குறிப்பாக கருஞ்சட்டை இளங்குருத்துகள் ஆயிரக்கணக்கில் குழுமி இருப்பதைக் கண்டார்!
‘தாய்க் கழகம்’ என்று பெயரிருந்தாலும் இளைஞர் பாசறையின் பேரலையாக இருந்ததைக் கண்டு ‘தானாடா விட்டாலும் தசை ஆடும்?’ என்பதுபோல் மிகுந்த உணர்ச்சியோடு, புளகாங்கிதத்தோடு, கருப்புச் சட்டைக்காரர்களுக்கு ஒரு ‘சல்யூட்’ அளித்தாரே – அது சாதாரணமா? அந்தத் தருணம் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர்களையும் உச்சி முதல் உள்ளங்கால் வரை சுண்டி இழுத்தது! உணர்ச்சியின் உந்துதலால் அவர்களின் தலைகள் செம்மாந்து நிமிர்ந்தன.
திராவிடர் கழகம் என்றால் ஏதோ ஊருக்கு நான்கு பேர் என நினைப்பவர்கள் உண்டு – மறைமலை நகர் மாநாட்டைப் பார்த்தவர்கள் தப்புக் கணக்குப் போட்டு விட்டோம்! தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, தலைவர் ஆசிரியரின் வழி நடத்தலும், திட்டமிடுதலும் அறிவியல் ரீதியில், காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் இயக்க அமைப்பு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்களும், சனி, ஞாயிறன்று என்றால் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் (குற்றாலத்தில் தொடர்ந்து 47 ஆண்டுகளாகப் பயிற்சிப் பட்டறை இதுவரை) தொடர்ச்சியான நூல்கள் வெளியீடு, காணொலி வழி உரையாடல்கள், அந்தந்த நாளில் வரும் பிரச்சினைக்கு சற்றும் தாமதியாமல் அன்றைக்கே பதிலடி – அடுத்தடுத்துப் போராட்டங்கள் – சதா மக்கள் மத்தியில் திராவிடர் கழகம் பேசு பொருளாகும் நிலையை வளர்த்து எடுக்கப்பட்டதன் விளைச்சலைத்தான் மறைமலை நகர் மாநாட்டில் பார்க்க முடிந்தது.
தமிழர் தலைவரின் எழுச்சி உரையும், முதலமைச்சரின் உணர்ச்சி உரையும் மாநாட்டை நிசப்தம் ஆக்கியது (Pin Drop Silence) கண்கொட்டாமல், காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டார்கள்.
102 வயது பொத்தனூர் சண்முகமும், 103 வயது ஆத்தூர் ஏ.வி. தங்கவேலனாரும் மாநாட்டில் பங்கு கொண்ட சிறப்பும் நடந்தது. ஆசிரியர் அவர்கள் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
105 வயது முடிந்து 106 வயதில் நடைபோடும் பெங்களூர் மானமிகு வேலு அவர்கள் வர முடியாத சூழ்நிலை.
திராவிடர் கழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியோர்கள் என்று கூறப்படும் இளைஞர் பட்டாளத்தின் நேர்த்திதான் என்ேன, என்ேன! தலைமுறை இடைவெளியின்றிக் காணப்பட்ட கண் கொள்ளாக் காட்சி!
பார்த்துக் களித்தார் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் தளபதி மு.க. ஸ்டாலின். ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஓர் இன்ப அதிர்ச்சியை வழங்கினார்.
‘ஆசிரியர் அய்யா தொடங்கி, செயல்படுத்திக் கொண்டு இருக்கும் பெரியார் உலகத்திற்கு தி.மு.க.வின் பங்கு இருக்க வேண்டாமா? என்று கூறி தி.மு.க. சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் சார்பில் ரூபாய் ஒன்றரைக் கோடி அளிக்கப்படும் என்று அறிவித்த நேரத்தில் ஏற்பட்ட ஆரவாரமும், சமுத்திர அலைகளின் ஆர்ப்பரிப்போ என்று கருதும் வண்ணம் பொங்கி ஒலித்த கர ஒலிகளும் அடங்க வெகு நேரமாயிற்று.
அப்படி அறிவித்த 14ஆம் நாளில் நேரடியாக திராவிடர் கழகத் தலைமை நிலையம் இயங்கும் சென்னை பெரியார் திடலுக்கு அமைச்சர்களுடனும், கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களுடனும் வருகை தந்து, தி.மு.க. சார்பில் மாநாட்டில் அறிவித்ததைவிட கூடுதலாக பெரியார் உலகத்திற்கான ரூபாய் 1 கோடியே 70 லட்சத்து 20,000 ரூபாய்க்கான காசோலையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் மானமிகு கி. வீரமணியிடம் அளித்தது – தந்தை பெரியார் கொள்கை மீதும், ‘தாய்க் கழக’த்தின் மீதும் தமக்குள்ள பற்றுதலையும், பிடிப்பையும் வெளிப்படுத்தியதாக மட்டுமல்ல – நேரில் சென்று அந்தக் காசோலையை வழங்க வேண்டும் என்று கருதிய பண்பாட்டின் நேர்த்தியையும் இனிவரும் பல கால கட்டங்களில் கோடிட்டுக் காட்டத்தக்க முன்னுதாரணமாகும்.
முதலமைச்சர் அறிவித்ததும், நன்கொடையை நேரில்வந்து அளித்ததும், தமிழ்நாட்டுத் தலைவர்களிடத் திலும், பொது மக்களிடத்திலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
தலைமைச் செயற்குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் எம்.பி., அவர்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்கு வருகை தந்து, கட்சியின் மக்களவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் – சார்பாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணியிடம் வழங்கி மகிழ்ந்தார்கள்.
இத்தகு சூழலில்தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம் நேற்று (23.10.2025) சென்னையில் நடைபெற்றது.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டுவது பற்றித் தோழர்கள் உற்சாகமாகப் பேசினார்கள். முதலமைச்சரின் செயற்கரிய செயலால் நல்லதோர் சூழ்நிலை எங்கும் பரவியுள்ள இந்தக் கால கட்டத்தில், கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் முனைந்து செயல்பட்டால் ‘பெரியார் உலக’த்திற்குத் தேவையான நிதி வேக வேகமாகக் குவியத் தொடங்கும் என்பதில் அய்யமில்லை.
எதையும் காலம் கருதி செய்ய வேண்டும், காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருஞ்சட்டைத் தோழர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
தோழர்களே, தலைமைக் கழகச் செயற்குழுக் கூட்டத்தில் உணர்ச்சித் ததும்பப் பேசினீர்கள்! உற்சாகத்தோடு கிளம்பினீர்கள்! இந்த உற்சாகத்தின் ஒரு துளிகூட சோதாரம் ஆகாமல் இதேவேகத்தில் களத்தில் இறங்குங்கள்; தனி ஒருவராகச் செல்லாதீர்கள்; கழகத் தோழர்களுடன் செல்லுங்கள் – ‘உங்களைப் பார்த்தாலே எதற்கு வந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு ‘பெரியார் உலகம்’ மக்களைச் சென்றடைந்திருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தக் காலத்தைப் புறந்தள்ளாமல் ஆதரவான உணர்ச்சி அலைகள் எழும்பி நிற்கும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமும் ஆகும்.
வந்தோம் – பேசினோம் – சென்றோம் – திரட்டினோம் நிதியை என்ற செய்தி நாள்தோறும் தலைமைக் கழகத்திற்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்!
நம் கடன் பணி செய்வதற்கே, தொண்டறம் புரிவதற்கே! கருஞ்சட்டைக்காரர்களாக வாழ்கிறோம். அதன் அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டாமா? என்ன தோழர்களே சரிதானா?
