சென்னை, அக். 24- மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அனைத்து அமைச்சர்களும் தங்களது மாவட்டங்களில் இருந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை, கடந்த 16-ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியது. சற்று தாமதமாகத் தொடங்கினாலும், அதன் வேகம் மிகத் தீவிரமாக இருக்கிறது. தொடங்கிய வேகத்திலேயே 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கட்டுப்பாட்டு மய்யம்
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 17 செ.மீ ஆகும். ஆனால் கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை மட்டுமே 21செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. அதிலும் கடந்த 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 8 செ.மீ.மழையும், வடகிழக்கு பருவமழை தொடங்கிய 16-ஆம் தேதி முதல் நேற்று வரை 13 முதல் செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. ஏற்ெகனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.
சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கால கட்டுப்பாட்டு மய்யம் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை கட்டுப்பாட்டு மய்யம் அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். மேலும் மழை பெய்வதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைபற்றியும், மழை பெய்த பிறகு எடுக்கவேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
அந்த அடிப்படையில் மழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை பணிகள் முடிக்கப்பட்டு இருந்தன. மழை தொடங்கிய நாள் அன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கினார். சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மய்யத்துக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர்களுடன் மழை நிலவரம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார்.
தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை கைப்பேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்து இருக்கிறது? எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது? மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவர் துல்லியமாக கேட்டு வருகிறார்.
அமைச்சர்களுக்கு உத்தரவு
முதலமைச்சரே கைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்பதால் ஆட்சியர்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் இருந்து மழை முன்னெச்சரிக்கை பணிகளையும், நிவாரண பணிகளையும் முன்னின்று செய்ய வேண்டும் என்று நேற்று கடு மையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதாவது துரும்பை, இரும்பாக்கி அவதூறு கிளப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கிறார்கள். நாம் அதற்கு இரையாக கூடாது. மழை எவ்வளவு பெய்தாலும், மக்களுக்கு பாதிப்பு இருக்கக்கூடாது என்ற வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
புகார்கள்
அதன்படி முதலமைச்சர் பிறப்பித் துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-
* அமைச்சர்கள் தங்களது மாவட்டத்தை விட்டு எங்கும் செல்லக் கூடாது. மாவட்டங்களிலேயே தங்கி இருந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தங்கியிருக்க வேண்டும்.
* மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு இருக்க வேண்டும்.
* மாவட்ட ஆட்சியர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் மழை தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விவரங்களை அரசுக்கு தினமும் தெரிவிக்க வேண்டும்.
மின்சாரம்
* அணைகள், ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி விட்டால் அதனை திறக் கும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்களுக்கு அதனை சரியான முறையில் தெரியப்படுத்த வேண்டும்.
* மழையால் ஏற்படும் மின் தடையை உடனடியாக சீரமைத்து மின்சாரம் வழங்க வேண்டும்.
* சாலைகள் மற்றும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து நீர் வெளியேற்ற வேண்டும்.
* வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உரிய வசதிகளை செய்துதர வேண்டும். அவர்களுக்குத் தரமான உணவுகள் வழங்க வேண்டும்.
* மிக முக்கியமாக மழையால் சேதம் அடைந்த சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
* மழையால் எந்த பாதிப் பும் மக்களுக்கு இல்லாத அளவுக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் செயல்படவேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
