சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி

2 Min Read

நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன். தமது கொள்கையினைத் தெளிவாக உணர்ந்து இந்த ஊர் ஊராட்சி மன்றத்தார் தங்கள் வரவேற்பில் குறிப்பிட்டு இருக் கின்றார்கள். அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
நாங்கள் சட்டசபைக்குப் போகின்றவரும் அல்ல, மந்திரி வேலைக்குப் போக விரும்புகின்றவரும் அல்ல. சமுதாயக் குறைபாடுகளுக்கு உண்மையாகவே பரிகாரம் காணப் பாடுபடுகின்றோம்.
மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும் வண்ணமாக உள்ள சாதனம், சொத்துக்கள் தான் நாங்கள் வெளியிட்டு உள்ள புத்தகங்கள் ஆகும்,
இந்த நாடு தமிழ்நாடு. நாம் தமிழர்கள். 100-க்கு 90 பேர்கள் தமிழர்களாகவே உள்ளோம். உடலுழைப்புச் செய்கின்ற மக்கள் நாம்தான். யாரும் மறுக்க முடியாது. பார்ப்பான் ஏர் உழுதலே பாவம் என்று எழுதி வைத்துக் கொண்டுள்ளான். இப்படி மக்களுக்குத் தேவையான தொழில் செய்யக் கூடிய நமக்குக் கிடைத்த பலன் என்ன? என்றால் நாம் இழிமக்கள், சூத்திரர்கள், நம் பெண்கள் சூத்திரச்சிகள், பார்ப்பானுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியவர்கள் என்று எழுதி வைத்துக் கொண்டு உள்ளார்கள்.
மேலும் பார்ப்பான் மனு நீதியில் எழுதியுள்ளான். சூத்திர னுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவு ஏற்படும்படி கல்வி மட்டும் கொடுக்கக் கூடாது என்று எழுதி வைத்துள்ளான்.
இதன் காரணமாக நாம் வளர்ச்சி அடையவே இல்லை. காட்டுமிராண்டியாக இருந்த வெள்ளையன் இன்றைக்கு அறிவு பெற்று புதிய உலகத்தையே உண்டு பண்ணத்தக்க பெரிய அறிவாளிகளாக ஆகி விட்டார்கள். ஒரு பெண், மணிக்கு 10,000 மைல் பறக்கும்படியாக இன்று முன்னேற்றம் அடைந்து உள்ளார்கள். ஆனால், நாம் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம் என்று எழுதிக் கொண்டு பெருமை பேசும் நாமோ உலகிலேயே இன்றைய தினம் சுத்த காட்டுமிராண்டிகளாக உள்ளோம்.
நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வரக் காரணமாக இருப்பது நாம் கைக்கொண்டு உள்ள காட்டுமிராண்டி மதமும், கடவுளும், சாஸ்திரங்களுமேயாகும். இவற்றைக் கட்டிக் கொண்டு அழும் வரைக்கும் நாம் உருப்படியாக முடியாது என்று எடுத்துரைத்தார்.
மேலும், கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.
28.10.1963 அன்று சேலத்துக்கு அடுத்த கல்பாறைப்பட்டியில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை (‘விடுதலை’ 9.11.1963).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *