சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டைத் திறந்து வைத்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரை

18 Min Read

விஷத்தை முறிக்கும் மருந்துதான் சுயமரியாதை இயக்கம்!
எத்தனையோ எதிர்ப்புகளை, விமர்சனங்களைக் கடந்து நிற்கும் இயக்கம் இது!
கொள்கையை வழி நடத்தும் 92-ம்,
ஆட்சியை வழி நடத்தும் 72-ம் தான் எங்கள் நம்பிக்கை!

செங்கல்பட்டு, அக்.23 எத்தனையோ எதிர்ப்புகளை, விமர்சனங்களைக் கடந்து நிற்கும் இயக்கம் இது! கொள்கையை வழி நடத்தும் 92-ம்,  ஆட்சியை வழி நடத்தும் 72-ம் தான் எங்கள் நம்பிக்கை! விஷத்தை முறிக்கும் மருந்துதான் சுயமரியாதை இயக்கம் என்றார் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டைத் திறந்து வைத்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நம்முடைய எதிரிகள் மலைபோல பார்க்கின்ற அளவில், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழாவினுடைய தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே! தோழர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், ஒரு நூறு ஆண்டு கடந்த ஓர் இயக்கத்திற்கு, நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்து, அந்த விழாவிற்குத் தமிழர் தலைவர் அவர்கள் தலைமை தாங்கி, விழா நிறைவுப் பேருரையாக திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற, நம்முடைய மாண்புமிகு முதல மைச்சர் அவர்கள் நிறைவுரையாற்ற, மேடையில் இருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அன்புக்குரிய தோழர் வீரபாண்டியனைப் போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துரை வழங்க, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த மாபெரும் மாநாட்டினைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பினை எனக்கு அளித்ததற்காக தமிழர் தலைவர் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தினுடைய அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியை, வணக்கத்தை முதலில் நான் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

மலைப்பும், வியப்பும் ஏற்படுகிறது

எண்ணிப் பார்க்கிறேன். 1980 களில் திராவிடர் கழகத்தினுடைய தலைவர்கள் மேடையிலே இருந்து, பல்வேறு தலைப்புகளிலே உரையாற்றும்போது, ஒரு கல்லூரி மாணவனாய் ஒரு 40 பக்கம் நோட்டுப் புத்தகத்தையும், பேனாவையும் வைத்துக்கொண்டு எல்லா குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு அந்த பந்தலிலேயே தூங்கி, அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆ.இராசாதான், இன்றைக்கு இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டை திறந்து வைக்கிறார் என்று எண்ணுகிறபோது, எனக்கே என்னை நம்புவதற்கு மலைப்பாகவும், வியப்பாகவும் இருக்கின்றது.

100 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கு இந்தியா விலேயே எத்தனை இயக்கங்கள் இருக்கின்றன? மிக முக்கியமான காலத்திலே நாம் நின்று கொண்டி ருக்கின்றோம். மகிழ்ச்சி ஒரு பக்கம் நம்முடைய இதயத்தில் அரும்புகிறது. ஆனால், இன்னொரு பக்கம், நம்முடைய நெஞ்சத்தை கலக்கமும், கவலையும் சூழ்ந்து நிற்கின்ற சூழலில் நாம் இருக்கின்றோம்.

’ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதா யத்தைத் திருத்தி உலகத்தில் இருக்கிற பிற சமுதாயத்தினர் போல், மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டினை மேற்ப்போட்டுக்கொண்டு வாழுகிறேன்’ என்று சூளுரைத்துவிட்டு, இந்த மண்ணிலே வாழ்ந்த ஒரு மாமனிதர் தோற்றுவித்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்! தோன்றிய ஆண்டு 1925. அதே ஆண்டில் பொதுவுடைமை இயக்கம் தோன்றியது. அதே ஆண்டில் ஒரு நச்சரவம் –  ஆர்.எஸ்.எஸ். தோன்றியது. அதே காலகட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு நிலைகளிலே தோன்றி இருந்தாலும் கூட, அரசியலிலே ஒரு வடிவத்தைக் கொடுத்திருந்த இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம். அக்காலத்தில் தோன்றிய சமூக இயக்கங்கள் பிரம்ம சமாஜமாக இருந்தாலும், ஆரிய சமாஜமாக இருந்தாலும் அவையெல்லாம் வந்து போன; கலைந்து போன மேகங்கள் ஆயின. ஆனால், அரசியல் தத்துவத்தோடு கொண்டுவரப்பட்ட இயக்கங்களான நான்கு இயக்கங்களை மட்டும் நான் பார்க்கிறேன்.

நம்முடைய வீரபாண்டியன் அவர்கள் இங்கே இருக்கிறார். வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்கின்ற அந்த நோக்கத்தோடு சொல்லுகின்றேன். பொதுவுடைமை இயக்கம் இந்த மண்ணில் வேரூன்றிய காலம் 1925. இன்னும் சொல்லப் போனால் பெரியார் எதையெல்லாம் தாண்டி வந்திருக்கிறார்? பெரியாரே சொல்கிறார், “நான் எந்தத் தலைவரை வெறுக்கவில்லை? நான் யாரை விமர்சிக்கவில்லை? காந்தியிலே தொடங்கி, இந்த மண்ணிலே நின்றுகொண்டிருக்கிறோமே மறைமலை அடிகள், அவர் உள்பட எல்லாக் கட்சித் தலைவர்களையும் நான் விமர்சித்து இருக்கிறேன். அப்படி விமர்சிக்கின்ற நேரத்தில் எதையும் என்னுடைய நன்மைக்காக செய்ததில்லை. நான் எதைச் செய்தாலும் இந்த சமூகத்திற்காக, தமிழர்களுக்காக, அவர்களுக்கு மானமும் அறிவும் வரவேண்டும் என்பதற்காகச் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்.

அன்று ஏற்க மறுத்தவர்கள் இன்று பெரியார்தான் தேவை என்கிறார்கள். நான் அந்த அடிப்படையிலே பார்க்கிறேன். இந்த இயக்கத்தின் மீது எத்தனை குற்றச்சாட்டுகள்? Putting centuries into the capsules என்று சொல்வார்களே, ஒரு நூற்றாண்டை ஒரு மாத்திரைக்குள் அடக்கிப் பார்த்தால், அந்த இயக்கத்தினுடைய வீரியம் புலப்படும் என்று அண்ணா சொன்னாரே! Putting centuries into the capsules என்று தந்தை பெரியாரை! அந்த அடிப்படையில் நான் எண்ணிப்பார்க்கிறேன். பொதுவுடைமை இயக்கம் ஒரு காலகட்டத்தில் ஜாதி ஒழிப்பில், தீண்டாமை ஒழிப்பில் உரிய அக்கறை காட்டியதா என்றால், வர்க்கப் போராட்டத்தை முன்னி றுத்திவிட்டு, பிறகு பார்க்கலாம் என்று சொன்னார்கள். மொழி உணர்ச்சியிலே அவர்களுடைய நிலை என்ன? குற்றச்சாட்டு சொல்லவில்லை. வந்த வரலாற்றைச் சொல்லுகிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைகளில் அன்றைக்கு என்ன எழுதினார்கள்? இந்தியாவை இணைப்பதற்கு ஒரு ஹிந்தி மொழி தேவை, தேசிய மொழி தேவை என்று எழுதினார்கள். பெரியாரை எதிர்த்தார்கள். பொதுவுடைமைத் தத்துவவாதிகள் யார் பெரியாரை எதிர்க்கவில்லை? சிங்காரவேலர் விமர்சித்தார். ‘ஆதிக்க சக்திகளோடு சரஸ சல்லாபம்’ என்று எழுதினார். பெரியார் கோபித்துக் கொள்ளவில்லை. அப்படியே எழுதியதை அடுத்தநாள் பத்திரிகையில் போட்டார். சிங்காரவேலர் மட்டுமல்ல, ஜீவா எதிர்த்தார். ஜீவா விமர்சித்தார். இயக்கத்தை விட்டு வெளியே சென்றார். ஆக, பொதுவுடைமைவாதிகள் இந்த இயக்கத்தை; நூறாண்டு கண்ட இந்த இயக்கத்தை விமர்சித்தார்கள். விலகி நின்றார்கள். ஆனால், இன்றைக்கு இந்த மேடையில் அவர்கள் எல்லோரும் வந்து, பெரியார்தான் இன்றைக்கு தேவை என்று சொல்லுகிறார்கள்.

வல்லபாய் பட்டேலைக்
கொண்டாடுவது – ஏன்?

காங்கிரஸை பெரியார் விமர்சித்தார். காங்கிரஸ் பெரியாரை விமர்சித்தது. எதையெல்லாம் விமர்சித்தோம்? 1931 கராச்சி மாநாட்டில் ஆறாவது தீர்மானம், என்ன தீர்மானம்? தீண்டாமை ஒழிய வேண்டும். அதே நேரத்தில் இந்தியாவில் ஜாதியால், மதத்தால் எந்த சலுகையும் யாருக்கும் வழங்கப்படக் கூடாது. இது காங்கிரஸ் கட்சி 1931இல் போட்ட தீர்மானம். கண்டித்து பெரியார் எழுதினார். எழுதியது மட்டுமல்ல. நீங்கள் எல்லோரும் யோக்கியர்களா என்று கேட்டு, இன்னொரு கேள்வியையும் கேட்டார். “அய்நூறு ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கக் கூடாது என்று காந்தி கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் – அய்நூறு ரூபாய்க்கு மேல் யாரும் ஊதியம் வாங்கக் கூடாது என்று சொல்லி அமல்படுத்தி விட்டார்கள். ஆனால், வல்லபாய் பட்டேல் அன்றைக்கு நாலாயிரம் ரூபாய் வாங்கினார். இதுதான் உங்கள் யோக்கியதையா? ஒழுக்கமா?” என்று கேட்டவர் பெரியார்!

அந்த வல்லபாய் பட்டேலுக்குத்தான் இவ்வளவு பெரிய சிலை; ஏன் வல்லபாய் பட்டேலை கொண்டா டுகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்? என்ன காரணம்? காந்தியார் படுகொலைக்குப் பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அய் மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம் என்று முன்மொழிந்தவர், வல்லபாய் பட்டேல். முடியாதுன்னு சொன்னவர் நேரு. அந்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு எங்கே இருக்கிறது தெரியுமா? நான் இன்னமும் கூட ஒரு படி மேலே போகிறேன். நேரு தீர்மானம் 13, டிசம்பர் 1946. இந்திய அரசியல் நிர்ணய சபையில் நேரு தீர்மானம், `வரப்போகிற அரசியலமைப்புச் சட்டம் எப்படி இருக்க வேண்டும்’’ என்ற தீர்மானம். அந்தத் தீர்மானத்திலே இந்தியா எப்படி அமையப்போகிறது என்பதற்கு, Independent Republic Sovereign Secular  இல்லை. Socialism இல்லை. 13 டிசம்பர் 1946 இல், இந்தியா எப்படி அமைய வேண்டும் என்கின்ற தீர்மானத்தில் இரண்டு மூன்று கூறுகள்தான் இருந்தன. அதில் ஒன்று, India will be a Independent Soverign Democratic  Republic. இரண்டாவது, Adequate safeguards will be given to depressed classes, scheduled caste and scheduled tribes and other backward classes. நேரு கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்றால், ‘இதுவொரு தன்னிச்சையான இறையாண்மையுள்ள குடியரசு! அவ்வளவுதான். அடுத்து என்ன சொன்னார்? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மலைவாழ் மக்களுக்குப் போதுமான பாதுகாப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும். ஆறு கூறுகளில் இரண்டு கூறுகள் முக்கியமானது. அப்போது மிகப்பெரிய விவாதம் நடைபெற்றது. ஏன் Democratic என்ற வார்த்தை இல்லை? ஏன் Socialism என்ற வார்த்தை இல்லை? ஏன் Secular என்ற வார்த்தை இல்லை? இவற்றையெல்லாம் கேள்வி கேட்டது யார் தெரியுமா? நம்மோடு இருப்பவர்களே கேட்டார்கள். எதிர்முனையில் இருந்தவர்களும் கேட்டார்கள். அந்த குறிக்கோள் தீர்மானத்தில் இரண்டு பேர் பேசினார்கள். ஒருவர் ஜெயகர். இன்னொருவர் அம்பேத்கர். மற்றவர்கள் எல்லாம் ஏதோ கணக்குக்குப் பேசினார்கள். அப்படி பேசிய ஜெயகர் தான், ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாட்டிற்கு தலைமை தாங்குங்கள் என்று தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டு, அவர் வந்து இங்கே பேசினார்.  அவரை ஏன் கூப்பிட்டீர்கள்? என்று கேட்டார்கள். பெரியார் சொன்னார், ”ஜெயகர் ஹிந்து மகாசபைக்குச் சொந்தக்காரர். ஹிந்து மதத்தை ஆதரிக்கி றவர், ஆனால், ஹிந்து மதத்திலே தீண்டாமை ஒழிய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எழுதி, அதற்காக தனி அமைப்பை வைத்திருக்கிறார். அதற்காக நான் கூப்பிடுகிறேன்” என்றெல்லாம் தேடித் தேடி கூப்பிட்டார்.

எல்லாவற்றுக்கும் தீர்வு- பெரியாரிடத்தில் – திடலில் இருக்கின்றது

இன்றைக்கு நான் கேட்கிறேன். இப்படியெல்லாம் இருந்த காங்கிரஸ் பேரியக்கம். இன்றைக்கு எங்கே இருக்கிறது தெரியுமா? எப்படி பொதுவுடைமை இயக்கம் நம்மோடு இருக்கிறதோ; எந்த பெரியாரை விமர்சித்தார்களோ, நாட்டைத் துண்டாடுகிறோம் என்று சொன்னார்களோ, யாரைப் பார்த்து, Nonsense என்று நேரு சொன்னாரோ, அந்த காங்கிரஸ் இயக்கம் இன்றைக்கு என்ன செய்கிறது என்றால், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன  நிலைப்பாட்டை முன்னெடுக்கிறதோ அதுவேதான் அவர்கள் நிலைப்பாடு. “திராவிட முன்னேற்றக் கழகம் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது’’ என்று நம்முடைய முதலமைச்சரைக் கேட்டால், “தாய்க்கழகம் திடலில் என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான்’’ என்கிறார். அன்றைக்குத் தோன்றிய எத்தனை இயக்கமாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் தீர்வு எங்கே இருக்கிறது என்றால், தந்தை பெரியாரிடத்தில் இருக்கிறது; திடலில் இருக்கிறது!

நமக்கிருக்கிற ஒரே எதிரி இயக்கம் எது தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இந்த சுயமரியாதை மாநாடுகளில் என்னவெல்லாம் செய்தார் பெரியார்? வெறுமனே மாநாடு போட்டிருக்கலாமே? ஒரு தனிப் பிரிவு வாலிபர் மாநாடு! இன்னொரு பிரிவு மகளிர் மாநாடு! இன்னொரு பிரிவு சங்கீத மாநாடு! இன்னொரு பிரிவு தமிழிசை மாநாடு! இன்னொரு பிரிவு மதுவிலக்கு மாநாடு! 1925 லே தொடங்கி, 1940 வரைக்கும் இத்தனை மாநாடுகள் நடத்தி, உரியவர்களை தேடித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து, “தமிழ்ச் சமுதாயத்தை, இன்றைக்கு இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் என்றால் யார் காரணம்?” என்று காங்கிரஸ்காரர்கள் டில்லியில் எங்களை கேட்டால், அது பெரியாரால் தான் சாத்தியப்பட்டது என்று நாங்கள் சொல்லுகிறோம் – இந்த நூறாண்டு காலத்தில் யாரெல்லாம் நம்முடைய நண்பர்களாக இருந்து, சகோதரத்துவத்தோடு நம்மை விமர்ச்சித்தார்களோ, அவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிற இடம் தந்தை பெரியார்! சுயமரியாதை இயக்கம்! திராவிடர் கழகம்!

அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கின்ற தகுதி யாருக்கு உள்ளது?

இப்போது எல்லாரும் சேர்ந்து யாரை எதிர்த்து நிற்கிறோம்? நீங்க பார்க்கிறீர்களே! இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுகிறபோது குறிக்கோள் தீர்மானம் என்று சொன்னேனே, அதற்குப் பெயர் நேரு தீர்மானம்! Nehru Resolution. அதில். Independent republic.என்று இருந்த்தது. Preample of the constitution மாற்றும்போது என்ன சொன்னாங்க? ஏன் Democratic இல்லை என்று கேட்டாங்க? ஏன் Socialism இல்லை என்று கேட்டாங்க? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை என்று கேட்டாங்க. இதையெல்லாம் இந்தியாவில் கொண்டு வந்து அம்பேத்கர் சேர்த்தார் என்றால், We the people of India. Having solemnly resolved to constitute India Sovereign, Secular, Democratic Republic. 46 இன் அரசியல் நிர்ணய சபையில் என்ன குறிப்புகளுடன் இந்த அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டுள்ளது என்று நேரு சொன்னாரோ, அவற்றை எல்லாம் முறித்து, இந்திய மக்களான நாங்கள் இந்தியாவை ஒரு சமத்துவ நாடாக, ஒரு மதச்சார்பற்ற நாடாக, ஒரு ஜனநாயகக் குடியரசாக, இறையாண்மையுள்ள நாடாகக் கட்டமைத்து இருக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் எழுது கிறபோது, என்னவெல்லாம் தோன்றியதோ, அந்த உணர்வுகளையெல்லாம் எங்கே பிரதிபலித்தார்களோ, எந்த காங்கிரஸ்காரர்களும் விமர்சித்தார்களே,  அவர்கள் இன்றைக்கு நாங்கள் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றக்கூடிய தகுதியும், திறமையும் இருக்கிற ஒரே இயக்கம், திராவிடர் இயக்கம் என்று நம்மிடத்தில் வந்திருக்கிறார்கள்.

தமிழை தமிழரைக் காத்தது
இந்த இயக்கம்தான்

அகில இந்திய அளவில் என்று சொன்னால், தமிழ்நாட்டிலே என்ன நிலை? தமிழ்நாட்டிலே நிலைமை, `பெரியார், தமிழுக்கு விரோதி’, `பெரியார், தமிழ் இசைக்கு விரோதி’ என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்கள் எங்கே வந்து சேர்ந்தார்கள்? சைவமும், தமிழும் என்னிரு கண்கள் என்று சொன்னவர் மறைமலை அடிகளார். அவரோடு பணியாற்றியவர் கா.சு. பிள்ளை. அந்த காலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில், ஏன் பார்ப்பனர்கள் அல்லாத ஒரு சமுதாயத்தில் முதன்முத லாக சட்ட மேற்படிப்பு படித்த ஒரே மனிதர். தமிழ்நாட்டில் கா.சு.பிள்ளை. கா.சுப்பிரமணியம். அவருக்கு பெயரே பூசைப் பிள்ளை என்று சொல்வார்களாம். ஏனென்றால், அவரு வீட்டுல தினமும் பூசை செய்வாராம். அவருடைய நிலைமை என்ன? எம்.எல். முடித்த ஒருவருக்கு – அன்றைக்கு இருந்த சட்ட அமைச்சராக இருந்த சி.பி.ராமசாமி. வைஸ்ராய் கவுன்சில் என்று சொல்வார்களே, 1943 இல் வைஸ்ராய் கவுன்சில் போட்டது. அந்தக் கவுன்சிலில்,  மேலே அமைச்சராக இருந்தவர் அம்பேத்கர், சட்ட அமைச்சராக இருந்தவர் சி.பி.ராமசாமி. அவர் திருவாங்கூரில் சட்ட அமைச்சராக இருந்தார். அந்த சி.பி.ராமசாமி சட்ட அமைச்சராக இருந்தபோது, எல்லா தலைவர்களும் – பெரியார் உட்பட ஒரு திராவிடனுக்கு அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவி வேண்டும் என்று சொன்ன போது; அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, கா.சு.பிள்ளை ஒரு சூத்திரன், அங்கே வந்து உட்கார்ந்து விடக்கூடாது என்பதற்காக அந்தப்பதவியை அவருக்குத் தராமல் தட்டிவிட்டது யார்? சி.பி.ராமசாமி. சட்டக்கல்லூரி முதல்வர் ஆக்கலாமா? சட்டப் பேராசிரியர் ஆக்கலாமா? அதற்கும் தேவையில்லை. மூத்த வழக்குரைஞர்கள் சட்டக்கல்லூரியில் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை வைத்து மாலை நேரத்தில் வகுப்புகளை நடத்திக்கொள்கிறோம் என்றார்கள். ஒரு எம்.எல். படித்த கா.சு.பிள்ளை கடைசிக் காலத்தில் பக்கவாதம் வந்து கஷ்டப்படுகிறார். மறைமலை அடிகளும், பெரியாரிடம் சென்று, “அய்யா, சட்ட மேற்படிப்பு படித்த ஒரு தமிழர், திராவிடர், பிள்ளைமார் – ஒரு சூத்திரன் அவ்வளவு கஷ்டப்படுகிறார்” என்று சொன்னவுடன், அன்றைக்கு மாதம் 50 ரூபாய் கொடுத்து, கா.சு.பிள்ளையின் தமிழைக் காப்பாற்றியது இந்த இயக்கம்தான்.

வையாபுரிப் பிள்ளை மிகப்பெரிய பேராசிரியர்! பெரியாரைப் பிடிக்காது – திராவிடர் கழகத்தைப் பிடிக்காது – அவர்தான் தமிழ் லெக்சிகன் எனப்படும் தமிழுக்கு அகராதியைக் கொண்டு வந்தவர். அவர் பதிப்பாசிரியர். அதற்கு ஒரு குழு போட்டார்கள். அதற்கு கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் தலைவர். அவர் மீட்டிங்குக்கே வந்தது இல்லை. ஆனால், அவ்வளவு பெரிய புத்தகத்தைக் கொண்டு வந்ததற்கு, எல்லா தமிழ் மக்களும் பாராட்டக்கூடிய அளவுக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்திய போது, அதன் தலைவர் கிருஷ்ணசாமி அய்யர் எல்லோருக்கும் நன்றி சொன்னார். ஆனால், வையாபுரிப் பிள்ளைக்கு நன்றி சொல்லவில்லை. அதற்கு கண்டனத்தை தெரிவித்தது சுயமரியாதை இயக்கம்தான். குடிஅரசு ஏடுதான். இப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு, அதற்கு மாற்றாக எல்லா விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு – அகில இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் இயங்கிய ஒற்றை மனிதராக – இராணுவமாக இயங்கிய ஒருவர்தான் தந்தை பெரியார்! அவர் உருவாக்கிய மாற்றங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.

நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தினுடைய வேலை அதிகமாக தேவைப்படுகிறது

தமிழ்நாடு

அம்பேத்கர், நேருவால் முடிந்ததா?

1929 இல் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரி யாதை இயக்க மாநாட்டின் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டனவே! நான்கூட மேடை யிலே கலைஞரை வைத்துக்கொண்டே பேசினேன். 1929 இலே பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் பெரியார். 1952 அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார் அம்பேத்கர். அம்பேத்கர் வெற்றிபெற முடிந்ததா? நேரு தன்னை ஒரு அக்னாஸ்டிக் என்று சொல்லிக்கொண்டாரே; தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று காட்டிக்கொண்டாரே, அவரால் முடிந்ததா? பார்ப்பனர்கள் விட்டார்களா? இல்லை. பெரியார் அதைத்தான் கேள்வி கேட்டார்.

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் இருக்கிறார்களே, அவர்கள் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்டவர்களா? எல்லாரும் ஓட்டுரிமை இருந்து போனார்களா? இல்லை. அன்றைக்குத் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற்றவர்கள் 16,000 பேர்தான் இருந்தார்கள். வருமான வரி கட்டியிருக்க வேண்டும், இத்தனை சொத்து இருக்கணும். இல்லன்னா, பட்டதாரியாக இருக்கணும். யாரு இருந்தார்கள்? இன்று திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்களே?

1901  கணக்கெடுப்பின்படி, சென்னை ராஜதானி முழுக்க, ஆந்திராவின் பாதி, கேரளாவின் பாதி, எல்லாம் சேர்த்து, சென்னை ராஜதானியில், படிப்பறிவு 1%. அந்த 1% யாரு? நீங்களா? நானா? உங்க தாத்தாவா? எங்க தாத்தாவா? அப்ப பி.ஏ படிச்சிருந்தாதான் ஓட்டுப்போட முடியும் என்றால், இன்றைக்கு இருக்கிற ஓட்டில் 2 சதவீதம் கூட ஓட்டுப் போடாமல் அரசியல் நிர்ணய சபைக்கு போனார்கள். பெரியார் கேள்வி கேட்டார். அரசியல் நிர்ணய சபையில், இந்தியா எப்படி இருக்க வேண்டும், அதன் தலைமைக்கு என்ன வேண்டும்ன்னு தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு, ஓட்டுப் போடுவதுதான் வழி என்றால், வெகு மக்கள் ஓட்டுப்போடவில்லையே! இந்த அரசியல் நிர்ணய சபையை ஏற்றுக்கொள்ளலாமா?’’ என்று கேள்வியை முதல் முதலாக இந்த மண்ணிலே எழுப்பிய ஒரே ஓர் அரசியல் தலைவர், பொதுவாழ்க்கையில் இருந்தார் என்றால், தந்தை பெரியார் தான்! ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுறபோது, ஏதோ தன்னால் முடிந்த அளவுக்குச் செய்திருக்கிறேன் என்று அம்பேத்கர் சொன்னார்.

ஆர்.எஸ்.எஸ் பற்றி
நேரு கூறியவை எவை?

இன்றைக்கு, இவ்வளவையும் தாண்டி இந்த இயக்கம் நூறாண்டு கடந்து வந்திருக்கிறதே! நமக்கு முன்னால் இருக்கும் சவால் என்ன? 1952 இலிருந்து 62 வரைக்கும் நேரு கடிதம் எழுதி இருக்கிறார், எல்லா முதலமைச்சர்களுக்கும்! Prime Minister’s Letter to Chief Minister என்று தனியாகப் புத்தகம் வந்திருக்கிறது. தமிழிலும் வந்திருக்கிறது. 1952 இலிருந்து 62 வரை, அவர் எழுதிய கடிதங்களில் 80% இந்த
ஆர்.எஸ்.எஸ் செய்த அயோக்கியத்தனத்தைத்தான் சொல்லி இருக்கிறார். எல்லா முதலமைச்சர்களுக்கும் சொல்லி இருக்கிறார், ‘‘கவனமாக இருங்கள். இந்த நாட்டைத் துண்டாடுவதற்கு, இந்த நாட்டில் இருக்கிற சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கின்ற ஒரே ஒரு மோசமான இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.” என்று அலுவல்பூர்வ கடிதம் இருக்கின்றது.

எம்.எஸ்.கோல்வால்கர்
ஓடி ஒளிந்து விடுகிறார்

நான் இன்னும்கூட சொல்லுகிறேன். 1947 ஜூன், உத்தரப்பிரதேசத்தின் உள்துறைச் செயலாளர் அய்.எஸ். அதிகாரி ராஜேஸ்வர் தயாள். அவர் எழுதுகிறார். உத்திரப்பிரதேச மாநிலத்தினுடைய முதலமைச்சர் கோவிந்த வல்லபாய் பந்த். உத்தரப்பிரதேசத்தினுடைய உள்துறை செயலாளர், அவருடன் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரி ஜெட்லி. இந்த இரண்டு பேரும், உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கோவிந்த வல்லப பந்த்தை ஜூன் 1947 இல் இரவு நேரத்தில் சந்தித்து இரண்டு டிரங்குப் பெட்டியைக் கொண்டு சென்று,  ‘‘இந்த நாட்டில் ஏதோ ஒரு மிகப்பெரிய வன்முறை நடக்கப்போகிறது. இசுலாமியர்களுக்கு எதிராக மட்டுமல்ல, இசுலாமியர்களுக்கு ஆதரவாக இயங்குகின்ற மதச்சார்பின்மைக்கு ஆதரவாக இயங்கு கின்ற தலைவர்கள் யாராவது ஒருவர் கொலை செய்யப்படுவார்கள். அதற்கான ஆதாரங்களை ஆர்.எஸ்.எஸ். வைத்திருக்கிறது” என்று முதலமைச்சரிடம் சொல்கின்றனர்.  இது புத்தகமாகவே வந்திருக்கிறது. கோவிந்த வல்லப பந்த், தள்ளித் தள்ளிப் போடுகிறார். “அப்படியா?” என்று கேட்கிறார். இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதைக் கேபினட்டில் விவாதிக்கிறார். யாரோ ஒரு கேபினட் அமைச்சர், அன்றைக்கு எம்.எஸ்.கோல்வால்கர் என்று சொல்லி இருக்கிறார். அவரைத் தேடுவதற்கு உத்தரவிடுகிறார்கள். அவர் ஓடி ஒளிந்துவிடுகிறார் – அப்படியே அந்தப் புத்த கத்தில் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் ஓடி ஒளிந்துவிடுகிறார். அடுத்த ஆறு மாதத்தில் பல்வேறு இசுலாமியர்களுக்கு எதிராகப் பல்வேறு படுகொலைகள் நடைபெறுகின்றன. அதன் உச்சமாகத்தான் காந்தி படுகொலை செய்யப்பட்டார். எழுதியது நானல்ல, ராஜேஸ்வர் தயாள். எந்த அரசி யலமைப்புச் சட்டம் இது மதச்சார்பற்ற நாடு என்று சொல்கிறதோ; எந்த அரசியலமைப்புச் சட்டம் இது சோசியலிஸ்ட் நாடு என்று சொல்கிறதோ; எந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மிகப்பெரிய பங்கு வகித்த அம்பேத்கர் சொன்னாரே, ஹிந்து ராஜ்ஜியம் அமைந்தால், அதைவிட இந்தியாவுக்கு வேறு ஆபத்து இல்லை என்று சொன்னாரே – இவர்களெல்லாம் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் இருக்கிற போதே, அதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து ஒருவர் பிரதமராக வந்து, நாணயம் வெளியிடுகிறார் என்றால், நூறாண்டு கண்ட நம்முடைய சுயமரியாதை இயக்கத்தினுடைய வேலை அதிகமாக தேவைப்படுகிறது. ஸ்டாம்ப் வெளியிடுகிறார். எந்த இயக்கத்தைத் தடை செய்தார்களோ, எந்த இயக்கத்தைக் காந்தி கடுமையாகத் தாக்கினாரோ, நேரு தாக்கினாரோ அந்த இயக்கத்துக்கு இப்போது அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எல்லா தளங்களிலும் ஊடுருவிட்டார்கள். தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையமாக இல்லை. ஆர்.எஸ்.எஸ். ஆகிவிட்டது. நீதிமன்றங்கள், நீதிமன்றங்களாக இல்லை. உள்ளே நுழைந்துவிட்டனர். நாடாளுமன்றத்துக்குள்ளேயே வந்துவிட்டார்கள். இப்படி எல்லா அரசு அமைப்பு களுக்குள்ளும் ஆர்.எஸ்.எஸ். வந்துவிட்டது. ஆட்சி அதிகாரத்திலே வந்துவிட்டார்கள்.

சுயமரியாதை இயக்கம் நூறாண்டுகளை கடந்த பின்னரும் அதன் தத்துவத்தைப் பேசுகின்ற தலைவரும் – ஆட்சியமைத்துப் பேசுகின்ற தலைவரும்!

வேறு ஒரு நிகழ்ச்சியிலே ஆசிரியரை வைத்துக் கொண்டு சொன்னேன். இந்த தத்துவம் எவ்வளவு உயர்வானது? எந்த ஒரு தேசத்திலும் நூறாண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஓர் இயக்கம்; ஒரு தத்துவம் அதே வீரியத்தோடு இருந்ததில்லை. கம்யூனிஸ்ட் இயக்கத்தை நான் குறை சொல்லவில்லை. ஆனால், அங்கே ஒரு கோர்பசேவ் வந்தார். அங்கே தத்துவத்தைச் சிதைத்துவிட ஆள் வந்தார்கள். ஆனால், இந்த இயக்கம்தான் நூறாண்டுகளுக்குப் பின்னும் 92 வயதில், அந்த தத்துவத்தை பேசுகின்ற தலைவர்; அந்தத் தத்துவத்தை ஆட்சியமைத்துப் போற்றுவதற்கு இன்னொரு தலைவர், அந்தத் தலைவர் மாலையில் வந்து பேச இருக்கிறார்.

நூறாண்டு காலம் ஒரு தத்துவம் தளராமல் ஈர்ப்போடு இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது இன்னும் ஆட்சி பொறுப்பிலேயே இருக்கிறது என்பது உலகத்திலேயே வேறு எந்த தத்துவத்துக்கும் கிடைக்கவில்லை. எந்தத் தலைவனுக்கும் கிடைக்கவில்லை. அது பெரியாருக்கும், பெரியார் தத்துவத்திற்கும் தான் கிடைத்திருக்கிறது. இந்த பெருமையோடு வாழ்கிற நாம், ஆர்.எஸ்.எஸ்.சைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் பெருமையோடு சொல்கிறேன். உங்களுக்கு வயது 92 அல்ல. சண்முகத்துக்கு வயது 102 அல்ல. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் பயத்தோடு இருக்கிற காரணத்தினால் எங்களுக்குத்தான் 92. உங்களுக்கு 29 தான்.

நீங்கள் பேசுவதால் தான் எங்களுக்கு உணர்ச்சி வருகிறது.  ஏனென்றால், நாங்கள் சோர்ந்து போகிறோம். நாங்கள் வளர்ந்த விதம் அப்படி! ஏறத்தாழ, போன்ஸாய் மரங்கள் போலத்தான் நாங்கள் வளர்ந்தோம். உங்களைப் போல அடிபட்டு உதைபட்டு வரவில்லை. பெரியாரைப் போல அடிபட்டு உதைபட்டு வரவில்லை. ஒருவேளை அதுதான் காரணமாகக்கூட இருக்கலாம். வந்து இங்கிருக்கின்ற தம்பி, தங்கைகளுக்கு நிச்சயமாகச் சொல்கிறேன். கவலைப்படுங்கள். கனத்த இதயத்தோடு இருங்கள். ஆனால், நமக்கிருக்கும் நம்பிக்கையெல்லாம் இந்த 92–ம், அந்த 72–ம்தான்.

இந்தியாவில் எந்த முதலமைச்சருக்கு இந்த துணிச்சல் உள்ளது?

நான் அன்போடு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்கு நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ, அந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டு எந்தக் களச் சாவு வந்தாலும் ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்த தேசத்தை எப்படி காப்பாற்றுவது என்று சொன்னால் – உங்களிடம் இருக்கும் துணிச்சல் யாரிடம் இருக்கும் – எங்கேயாவது ஒரு முதலமைச்சர் இந்தியாவின் அரசமைப்பில் இருந்துகொண்டு, இந்தியாவின் பகுதியில் முதல மைச்சராக இருந்து கொண்டு நாங்கள் டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று சொல்ல முடியுமா? அவரா பேசுகிறார்? இல்லை, அவர் உள்ளே இருக்கின்ற பெரியார் பேசுகின்றார்! அண்ணா பேசுகின்றார்! கலைஞர் பேசுகின்றார்! கருப்புச் சட்டை பேசுகின்றது!

எனவே, இந்த ஆற்றலும், துணிச்சலும் இருக்கின்ற ஒரே இயக்கம் இந்த இயக்கம்தான். இந்த இயக்கம் சொல்வதைக் கேளுங்கள் தமிழ்ப்பெருங்குடி மக்களே, நீங்கள் கோயிலுக்குப் போகலாம்; எங்கே வேண்டுமானாலும் போகலாம்; என்ன வேண்டு மானாலும் செய்யலாம்; எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம்; எந்த காட்டுக்குள்ளும் செல்லலாம். ஆனால், அங்கே உங்களை ஒரு விச ஜந்து தீண்டினால், அதை முறிப்பதற்கான ஒரே மருந்து இந்த மருந்துதான்! இந்த மருந்தைக் காப்பாற்றுவதற்கு நாம் எல்லோரும் முனைவோம்.

வாழ்க பெரியார் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

– இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *