சென்னை, அக்.23 செங்கற்பட்டு – மறைமலை நகரில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், பெரியார் திடலுக்கு வருகை தந்து, பெரியார் உலகத்திற்கு, திராவிடர் கழகத் தலைவரிடம் நேரில் நன்கொடைக்கான காசோலையைத் தந்த முதலமைச்சரின் பண்பாட்டைப் பாராட்டியும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று (23.10.2025) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம் (6 ஆம் பக்கம் காண்க)
தீர்மானம் எண் 2:
செங்கற்பட்டு – மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்று செயல்படுத்துவோம்!
4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று, அவற்றின் அடிப்படையில் தீவிரமாகச் செயல்படுத்துவது என்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.
மாநாட்டின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் இச் செயற்குழு நன்றி கனிந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண் 3:
முதல் அமைச்சருக்கு
நன்றியும் – பாராட்டும்!
செங்கற்பட்டு – மறைமலை நகரில் கடந்த 4.10.2025 நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் சிறப்பாகப் பங்கேற்று, நிறைவுரையாற்றி, மாநாட்டைச் சிறப்பித்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
அம் மாநாட்டில் பங்கேற்று, தனது நிறைவுரையில், திருச்சி-சிறுகனூரில் உருவாக இருக்கும் “பெரியார் உலகத்திற்கு” தி.மு.க. சார்பில் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் – ஒன்றரைக் கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்ததோடு, அறிவிக்கப்பட்ட 14 ஆம் நாளில் (18.10.2025) திராவிடர் கழகத் தலைமை நிலையமான சென்னை பெரியார் திடலுக்கு அமைச்சர்களுடனும், தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களுடனும் நேரில் வருகை தந்து, மறைமலை நகரில் தி.மு.க. தலைவரால் அறிவிக்கப்பட்ட நிதியோடு, கூடுதலாகவும் சேர்த்து ரூபாய் ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம் அளித்து உற்சாகப்படுத்திய நமது முதலமைச்சருக்கு இச் செயற்குழு தனது நன்றியு ணர்வைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒரு முதலமைச்சர் உலகத் தலைவர் தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் – வரலாற்றில் என்றென்றும் நிலைக்க வைக்கக் கூடியது “பெரியார் உலகம்” என்ற உணர்வுடனும், மதிப்புடனும் நன்கொடைக்கான காசோலையை அளித்தது, தமிழ்நாடு முதலமைச்சர், தந்தை பெரியார் மீதும், அவர்தம் கொள்கை மீதும் – தாய்க் கழகத்தின் மீதும் வைத்துள்ள பெருமதிப்பையும், பிடிப்பையும் வெளிப்படுத்துவதுடன் நேரில் வருகை தந்து நன்கொடைக்கான காசோலையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களிடத்தில் அளித்தது – நம்முடைய முதலமைச்சரின் சீரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் முன்னுதாரணமான செயல் என்று இச் செயற்குழு நன்றியறிதலுடன் கூடிய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 4:
சிறுகனூர் “பெரியார் உலகம்”
பணி முடிப்போம்!
மறைமலை நகர் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தீர்மானித்தபடி, திருச்சி – சிறுகனூரில் உருவாகிக் கொண்டு இருக்கும் “பெரியார் உலகத்திற்கு” நிதி திரட்டும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு, விரைந்து மாவட்டங்களில் நன்கொடைகளைப் பெரும் அளவில் திரட்டி, பெரியார் உலகப் பணி நிறைவு பெற ஒத்துழைப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 5:
2026 சட்டப் பேரவைத் தேர்தலும் – நமது கடமையும்!
2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியே மலர வேண்டும்; இதுவரை கண்டிராத பெரு வெற்றியைப் பெற வேண்டும் என்னும் திசையில் திராவிடர் கழகம் தீவிரமான பிரச்சாரம் மற்றும் ஆக்கரீதியான தேர்தல் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இதற்கான திட்டத்தை உருவாக்கி நவம்பர் முதல், தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் மறுமலர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் எல்லா வகையிலும் மக்கள் வளர்ச்சிப் பணியில் (Welfare State) சாதனை முத்திரைகளை நாளும் பதித்து வரும் – இந்தியாவிலேயே முதல் நிலை மாநிலம் என்று ஆதாரத்துடன் மெய்ப்பித்துக் காட்டும் – “திராவிட மாடல் ஆட்சி” மீண்டும் மலர வேண்டும் என்று கூறுவது, தி.மு.க.வுக்காக அல்ல; மக்கள் நல – வள வளர்ச்சிக்கானது என்ற உணர்வுடன், தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைக் கடைகோடி வாக்காளர்கள் வரை எடுத்துச் சொல்லி, தி.மு.க.வுக்கும் அதற்குத் துணையாக இருக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அனைத்து வகையிலும் வெற்றிப் பெற்றுத் தர பாடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் 6:
கழகத்தின் அமைப்பு ரீதியான பணிகளைத் தீவிரப்படுத்துதல்
திராவிடர் கழகப் பிரச்சாரப் பணி, இயக்க ஏடுகளுக்குச் சந்தா சேர்க்கும் பணி – அமைப்பு ரீதியான பணிகளில் காலத்திற்கேற்ற வகையில், திட்டமிட்ட வகையில் பணியாற்றுவது என்றும், குறிப்பாக கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை அணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மருத்துவர் அணி ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தி, 2026ஆம் ஆண்டில் புது உத்வேகத்துடன் திராவிடர் கழகம் செயல்படும் வகையில், இந்த இடைக் காலத்தில் கட்டமைப்புப் பணிகளை, திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
இரங்கல் தீர்மானம்
கீழ்க்கண்ட பெருமக்களின் தோழர்களின் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது இச்செயற்குழு.
பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ சேதுராமன் (வயது 91, மறைவு: 6.6.2025)
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89, மறைவு: 6.6.2025)
முதுமுனைவர் இராமர் இளங்கோ (வயது 81, மறைவு: 19.6.2025)
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் தக்கலை எஸ்.கே.அகமது (வயது 86, மறைவு: 20.6.2025)
கல்வியாளர் ஆர்.பெருமாள்சாமி (மறைவு: 15.7.2025)
பகுத்தறிவாளர் – திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் (வயது 68, மறைவு: 18.7.2025)
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து (வயது 77, மறைவு: 19.7.2025)
அரவிந்த் கண் மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள்சாமி (வயது 86, மறைவு: 24.7.2025)
திருப்பத்தூர் மாவட்டம் – சுயமரியாதை வீராங்கனை மீரா ஜெகதீசன் (வயது 80, மறைவு: 1.9.2025)
கழகப் பொதுக்குழு உறுப்பினர் மேலமெய்ஞ் ஞானபுரம் சீ.தங்கதுரை (வயது 77, மறைவு: 19.9.2025)
தாம்பரம் மாவட்டக் கழகக் காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி (வயது 82, மறைவு: 14.10.2025)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் திருநாகேஸ்வரம் அ.மொட்டையன் (வயது 96, மறைவு: 19.10.2025)
கோவை பகுத்தறிவாளர் கு.வெ.கி.செந்தில் (வயது 61, மறைவு: 17.5.2025)
செங்கல்பட்டு நகர கழகத் தலைவர் கலியப் பேட்டை ஜி.தமிழ்மணி (மறைவு: 29.5.2025)
கழகப் போராட்ட வீராங்கனை – பெங்களூரு கோ.இளஞ்சியம் (வயது 74, மறைவு: 23.6.2025)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஒரத்தூர் மாணிக்கம் (வயது 96, மறைவு: 28.6.2025)
தக்கலை ஒன்றிய கழகத் தலைவர்
இரா.இராசீவ்லால் (வயது 75)
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி ஜெயராமன் (வயது 70, மறைவு: 3.8.2025)
கொரடாச்சேரி ஒன்றியம் – பருத்தியூர் கழக செயலாளர் செ.கலியபெருமாள் (வயது 75, மறைவு: 1.9.2025)
பாபநாசம் பெரியார் பெருந்தொண்டர் கருப்புச் சட்டை தி.ம.நாகராசன் (வயது 92, மறைவு: 10.9.2025)
பெரியார் பற்றாளர் மேலப்பாவூர்
இரா.பேச்சிமுத்து (வயது 77, மறைவு: 15.5.2025)
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் திருவிடைமருதூர் படைத்தலைவன்குடி ‘தற்கொலை’ கோவிந்தராசு (வயது 93, மறைவு: 22.10.2025)
ஆகியோரின் மறைவிற்கு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் பிரி வால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
