புரட்சியாளர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸோடு அமர்ந்து பேசுவது போலவும், மடிக்கணினி பயன்படுத்துவது போலவும், அம்பேத்கரை அமர வைத்து, பெரியார் புல்லட் ஓட்டிச் செல்வது போலவும், பள்ளிச் சிறுமியை அழைத்துச் செல்வதுபோலவும், பட்டம் வாங்கிய இளம்பெண்கள் பெரியாரைத் தூக்கிச் சுமந்து கொண்டாடுவது போலவும் என விதவிதமான பெரியார் படங்கள், மிக தத்ரூபமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் (ஏ.ஐ.) உருவாக்கப்பட்டு, கடந்த மே மாதத்தில் இணையத்தை ஆக்கிரமித்தன.
தற்போது, அவற்றின் அப்டேட் வெர்சனாக, முழுக்க முழுக்க ஏ.அய்.-யால் உருவாக்கப்பட்ட, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த காணொலி The Al Dravidian’ யூடியூப் சேனலில் ‘தந்தை பெரியார்: வாய்ஸ் ஆஃப் ரேசனலிஸம்’ என்ற தலைப்பில், வெளியாகியிருக்கிறது. விக்னேஷ் கிருஷ்ணன் என்பவர் உருவாக்கியுள்ள இந்த காணொலியின் முதல் அத்தியாயத்தில், பெரியாரின் பிறப்பு, சீர்திருத்தக்காரர் ஆனது எப்படி, ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. 10.49 நிமிடங்கள் கொண்ட இந்த முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள விறுவிறுப்பான ஏ.ஐ. காட்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை யும் வெளிப்படுத்தி. வியப்படையச் செய்கின்றன.
மார்பிங் செய்வது, முகத்தை மாற்றி இழிவுபடுத்துவது என ஏ.அய். தொழில்நுட்பத்தை மோசமாக பயன்படுத்து வோருக்கு மத்தியில், ஒரு சித்தாந்தத்தைப் போதித்து, தமிழ்நாட்டின் திசைவழியைக் கட்டமைத்த தன்னி கரற்ற தலைவரின் வரலாற்றைச் சொல்வதற்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியிருக்கிறார் விக்னேஷ் கிருஷ்ணன். காணொலி வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து சமூக வலைதளங்களிலும் பலர் பதிவிட்டுள்ளனர். நவீன விரும்பியான பெரியாரை நவீனப்படுத்துவதில் புதுமையான முயற்சி இது.
நன்றி: ‘முரசொலி’ 23.10.2025
