முனைவர் அதிரடி
க.அன்பழகன்
மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம்
உலகில் எங்கு நோக்கிலும் – எதில் நோக்கிலும் மாற்றம் என்பது மறுக்க முடியாதது. மாற்றம் ஒன்றிற்கு என்றும் அழிவும் கிடையாது. எல்லாமும் மாற்றத்திற்கு உரியது.
இந்த உண்மையைத்தான் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று அறிஞர்கள் – புரட்சியாளர்கள் வரையரை செய்து ஆய்ந்து உரைத்தனர்.
அந்த மாற்றத்திலும் தலைகீழ் மாற்றமே புரட்சி என்றாகிறது. எந்த ஒரு தலைகீழ் மாற்றத்தினை உருவாக்குபவரே ‘புரட்சியாளர்கள்’ என்று புகழ்ந்துரைக்கப்படுகிறார்கள். வரலாற்றில் ‘புதிய வரலாறு படைத்தவர்’ என்று வரையப்படுகிறார்கள்.
அச்சிறப்புக்குரிய புரட்சியாளர்கள் உலகெங்கும் பலர் உருவாகியுள்ளனர் – உருவாகி வருகின்றனர் – உருவாகவுள்ளனர். இவ்வரிசையில் தந்தை பெரியார் எனும் புரட்சியாளர் இன்றைய நாள் வரை ஈடற்ற – இணையற்ற புரட்சியாளராய், புரட்சிக்கு புது இலக்கணம் ஆனவராய் – புரட்சியின் இலக்கணத்திற்கான இலக்கியமாய் திகழக்கூடியவர் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை என்று அறுதியிட்டுக் கூற முடியும்.
புரட்சிகர கருத்து: புரட்சிகரமான கருத்துகளை – கொள்கைகளை உருவாக்கும் புரட்சியாளர்கள் – புரட்சியை நடத்திடும் களத்தில் இடம் பெறாதவர்களாகத்தான் வெகு பலர் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் புரட்சிக் கருத்துகளை விதைப்பது ஒரு நாட்டில் – புரட்சி வெடிப்பது ஒரு நாட்டில். அப்புரட்சியை முன்னெடுப்போரும் வேறொருவர் என்றுதான் வரலாற்றில் காணக் கிடைக்கிறது.
ஆனால், தந்தை பெரியார் ஒருவர்தான் புரட்சிக் கருத்தை விதைத்த இடத்தில் புரட்சி நடக்கவும் – அப்புரட்சியை தலைமை ஏற்று தானே நடத்தவும் – தன் வாழ்நாளில் தனது புரட்சிகர கொள்கையின் வெற்றியை ஈட்டிக் கண்பவரும் உலகில் பெரியார் ஒருவர்தான்.
பொதுவாக, புரட்சி நடைபெற போர் நடத்தி – சண்டையிட்டு – உயிர் நீத்து – பல்வேறு பேரிழப்பு நடைபெற்று பிறகே சாத்தியமாகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆயுதம் ஏந்தி நடத்தப்படுவதே புரட்சி.
மற்றொரு வகையில், ஜனநாயக வழியில் மக்களை திரட்டி அதிகாரத்தை தேர்தல் மூலம் கைப்பற்றி புரட்சிகர மாற்றம் நடைபெறுகிறது. ஆனால், தந்தை பெரியாரின் புரட்சிக்கான நடைமுறை முற்றிலும் இவைகளிலிருந்து மாறுபடுகிறது.
ஆயுதம் ஏந்தி போரிடாது – வன்முறை நடக்காது – உயிர்ப்பலி இல்லாது – பொது சொத்துக்கு இழப்பில்லாது நடக்கும் புரட்சியாகும்.
அடுத்து, ஆட்சி அதிகாரத்தில் இல்லாது – அதிகார வர்க்கத்திடம் பலவந்தமின்றி – வன்முறை இன்றி போராடி – தன்னலம் துறந்து – ஆகப் பெரும் கொடுமை, தண்டனை, இழிவு, இழப்பு எல்லாரும் ஏற்றுப் புரட்சியை வென்றெடுப்பது.
இம்முறையை அகிம்சை – உண்ணா நோன்பு போன்றவைகள் அல்ல. பெரியார் இவ்வகைப் போராட்ட முறைகளை கண்டித்தார் என்று வர்ணிக் கிறார்.
ஆனால், பெரியாரின் போர்முறை என்பது,
- மூலத்தை தாக்குவது
- வீரமிகு நெஞ்சத்தோடு போராடுவது
- எதிர்த்து தாக்குதல் நடத்தாதது
- தண்டனையை எதுவானாலும் இன்முகத்தோடு ஏற்பது.
- தண்டனையை முழுமையாய் அனுபவித்து நிறைவேற்றுவது.
- தண்டனையின் தாக்கத்தை முழுமையாய் ஏற்று எதிர் கொள்வது.
- ஜாமீன் கேட்காது தண்டனைக் காலம் முழுதும் சிறையிலிருப்பது.
- நீதிமன்றத்தின் முன் செய்ததை அப்படியே ஒத்துக் கொள்வது.
- நீதிமன்றத்தில் செய்தது தவறு என்றால் உச்சபட்ச தண்டனைக் கேட்டுப் பெறுவது.
- சலுகை பெற – கேட்க – அனுபவிக்க முற்றிலும் மறுப்பது
- தண்டனையை எதிர்த்து கருத்தோ – போராட்டமோ நடத்தாமல் ஏற்பது.
- எவ்விடத்திலும் மன்னிப்புக் கோராதது.
- எதிர் நடவடிக்கை எதுவானாலும் நாள் – இடம் – நேரம் சொல்லிச் செய்வது.
- சட்டத்தின் வழியே தப்ப முயல்வது
- தண்டனைக்கு முன்னும் பின்னும் பொதுச் சொத்துக்களை – பிறரது பொருளை சேதப்படுத்தாதிருப்பது.
- நான் – தான் என்று அகந்தை பாராட்டாது இருப்பது.
- நாம் என்று நிலை தவறாதது.
18.ஒழுக்கத்திற்கே முதலிடம் கொடுப்பது.
- நாணயம் – நம்பிக்கை தவறாதது.
- கொள்கையில் சமரசம் செய்யாமை.
போன்ற சிறப்பியல்புகள் தான் உலகப் புரட்சியாளர்களிடமிருந்து பெரியாரை ஒப்பாரும் –மிக்காரும் இல்லா – உலகின் ஒரே புரட்சியாளராய் உயர்த்திக் காட்டுகிறது. இச்சிறப்புகள் பெரியாரின் தொண்டர்களுக்கும் உரியதாய், பெரியார் தன் தொண்டர்களை உருவாக்கியது கூடுதல் சிறப்பு.
பொதுவாக போராட்டக் களத்திற்கு தலைமை ஏற்கும் தலைவர்கள் – தளபதிகள் என்போர் திரை மறைவு வாழ்க்கை, சட்டத்தின் துணை கொண்டு தப்பிக்கும் முயற்சி என கீழிறக்கமான வேலைகளில் ஈடுபடுவர். இதை இராஜதந்திரம் என்பர். பதுங்குவது பாய்வதற்கு என்று பறைசாற்றுவர். ஆனால், பெரியார் கொள்கை – இயக்கம் – பிரச்சாரம் – போராட்டம் ஆகிய எதிலும் ஒழிவு மறைவின்றி – உண்மை வென்றெடுக்க – திறந்த புத்தகமாய் களம் காணும் புரட்சியாளர்.
நீதிமன்றத்தில் தந்தை பெரியார், நீதி அரசரை பார்த்து நீங்கள் பார்ப்பனர், உங்களிடம் எனக்கு நீதி கிடைக்காது என்பது எனக்கு தெரியும். நீங்கள் விரும்பும்படி – உங்கள் ஆசை தீர அதிகபட்ச தண்டனையை வழங்கிட வேண்டுமாய் கேட்டுள்ளார்.
‘‘பார்ப்பன நீதிபதி – பார்ப்பனச் சட்டம் – பார்ப்பன ஆட்சி இதில் எனக்கு நீதி, கிடைக்காது என்பது நன்றாக தெரியும். நான் வாதாட விரும்பவில்லை. அதிகபட்ச தண்டனையை வேண்டுகிறேன்’’ என பல வழக்குகளில் பெரியார் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். நீதிபதிக்கு முன் நீ பார்ப்பன நீதிபதி உன்னிடம் நீதி கிடைக்காது என்று கூறிய பெரியாரை போல் உலக நாடுகளின் பொது வாழ்வு வரலாற்றின் பக்கத்தில் பார்க்க ஓர் உதாரணம் உண்டா?
‘‘நீதிமன்றத்தில் நான் வக்கீல் வைத்து வாதாட விரும்பவில்லை. நானே வாதாடவும் விரும்பவில்லை. நான் செய்தது தவறில்லை. ஆனால், உங்கள் சட்டம் நான் செய்ததை தவறென்று கூறினால், எனக்கு தாராளமான தண்டனை வழங்குங்கள்’’ என்று பெரியார் கேட்டிருக்கிறார். நீதியரசருக்கு முன் நீதிமன்றத்தில் முழங்கிய பெரியாரின் இம்முழக்கம் போல் உலகில் கேட்டதுண்டா?
வைக்கத்தில் போராட சென்ற பெரியாரை திருவிதாங்கூர் சமஸ்தானம் வரவேற்பு கொடுக்க வந்தபோது – அதை பெற மறுத்து விட்டார். ‘‘நான் சமஸ்தானத்தின் விருந்தினராக வரவில்லை. சமஸ்தானத்தை எதிர்த்து போராட வந்திருக்கிறேன்’’ என்று மறுத்துவிட்டார்.
ஒரு சமஸ்தானம் தந்த வரவேற்பை உதறி விட்டு களம்கண்ட வென்ற பெரியாரை வரலாற்றுக்கு முன்னும் பின்னும் காண வாய்ப்புண்டா?
நீதிமன்றத்தில் நான் செய்தது சரி – உன்சட்டம் தவறு என்று கூறினால் சட்டம் கூறும் அதிகபட்ச தண்டனை ஏற்க தயார் என மார்தட்டிய வீரர் பெரியாரை உலக நாடுகளின் மனித குல வரலாற்றில் வலை வீசி தேடினாலும் வேறொருவர் கிடைப்பாரா?
வக்கீல் வைத்து வாதாடவும் மாட்டேன் – ஜாமீன் கேட்டு வெளியேறவும் மாட்டேன் – பரோலில் வெளிவரும் உரிமையை பயன்படுத்தவும் மாட்டேன் என்று சவால் விட்ட போராட்டச் சிங்கம் பெரியாரை தோற்கடிக்கும் வீரன் உலகில் எங்குமுண்டா?
கையிலே ஏ.கே. 47 துப்பாக்கி – பீரங்கி புடை சூழ்ந்திட – விமானப் படை தலைக்கு மேல் வட்டமிட – தன்னைச் சுற்றி 100க்கு மேலானதற்கொலைப் படை வீரர்கள் – மனிதக் குண்டுகளை உடலில் சுமந்து வரும் தன் குண்டுக்கு தன் உயிரையே கொடுக்க காத்திருக்கும் சுத்த வீரர்கள் சகிதமாகமாய் வரும் ஒரு படைத்த தலைவரின் எதிரே.
காண்போரை கட்டிப் போடும் போராட்ட உருக்கொண்ட முகம்; கருப்புச் சட்டை – சட்டைக்குள் குறிப்பேடும், பேனாவும். ஒரு கையிலே தடி, மற்றொரு கையிலே சொட்டிக் கொண்டிருக்கும் சிறுநீரை சுமக்கும் வாளி. இருபுறமும் தன் பருத்த உடலைத் தாங்கிப் பிடிக்கும் இருவர்; ஆறு கால் நடையில் நடை போடும் அரிமாவாய் பெரியார்.
துப்பாக்கிகள் துணையோடு நடைபோடும் புரட்சியாளர்கள்;
பகுத்தறிவு சிந்தாந்தத்தோடு பயணிக்கும் புரட்சியாளர் பெரியார்.
கொன்று குவித்து வெற்றி வாகை சூடும் புரட்சியாளர்கள்;
கொள்கை முரசு கொட்டி வெற்றி வாகை சூடும் புரட்சியாளர் பெரியார்.
உலகப் புரட்சியாளர்களின் மொத்த வரலாறும் ஒரு பக்கம்;
தனித்துவமான மனிதரானம் புரட்சியாளர் பெரியாரின் ஒப்பற்ற வரலாறு ஒரு பக்கம்.
இந்த வரலாறுகள் கற்பிக்கும் பாடமென்ன ஒப்பற்ற உலகப் புரட்சியாளர் – உலகத் தந்தை பெரியாரே!
