பழங்கால இந்தியர்கள் அறிவியலைப் பரப்பினார்களா?

ழங்கால இந்தியர்கள் மெக்சிகோ முதல் சைபீரியா வரை பயணித்து, அறிவியல் மற்றும் கலாச்சாரம் குறித்து கற்பித்தனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது: ‘‘நமது முன்னோர்கள் மெக்சிகோ முதல் சைபிரீயா வரை பயணித்தனர். அப்போது உலகிற்கு அறிவியல் மற்றும் கலாச்சாரம் குறித்து கற்பித்தனர். அவர்கள் மதம் மாற்றவில்லை. அல்லது மதத்தைத் திணிக்கவில்லை. நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமைக்கான செய்தியுடன் பயணித்தோம்; பல படையெடுப்பாளர்கள் வந்து நம்மிடம் கொள்ளையடித்தனர். நம்மை அடிமைப்படுத்தினர். கடைசியாக வந்தவர்கள் நமது மனங்களை கொள்ளையடிக்க வந்தனர். நமது பலத்தையும், உலகிற்கு என்ன பகிர்ந்தோம் என்பதையும் நாம் மறந்துவிட்டோம். ஆன்மிக அறிவு இன்னும் செழித்து வளர்கிறது. நம்மிடம், அறிவியல் மற்றும் ஆயுதங்கள், வலிமை மற்றும் சக்தி, நம்பிக்கை மற்றும் அறிவு உள்ளது. இந்திய அறிவியல் அமைப்பைத் தான் நாம் படிக்க வேண்டும். மெக்காலே கல்விமுறையை அல்ல. நமது அறிவுத்திறனின் அடித்தளம் அந்தக் கல்வி முறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறது. உடலாலும், மூதாதையர்களாலும் இந்தியர். ஆனால், இதயம் மற்றும் மனதால் வெளிநாட்டினர். ஒரே வித்தியாசம் நாம் எந்த அளவுக்கு இருக்கிறோம் என்பது தான். இப்போது நாம் அதில் இருந்து முற்றிலும் விலக வேண்டும். ‘அதிர்ஷ்டவசமாக’ மேற்கத்திய நாடுகளின் மேம்பட்ட அறிவியல் நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் ஒரு நிலையை அடைந்துள்ளது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரிடமிருந்த இத்தகைய கருத்துகளைத் தான் எதிர்பார்க்க முடியும்.

நம் முன்னோர்களிடம் அறிவியல் மனப்பான்மை இருந்ததாம்; அதனைத்தான் நாம் படிக்க வேண்டுமாம்!

புராணங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மூடத்தனங்கள், மந்திரங்கள் – இந்தக் குப்பைகளைத் தவிர இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனைகள், சாதனங்கள் என்னவென்று விரலைக் காட்ட முடியுமா?

சூரியன் என்பது ஒரு ‘நட்சத்திரம்’ என்ற உண்மையை அறிவார்களா? இன்றைய வரைகூட அதை ‘கிரக’ங்களின் பட்டியலில்தான் வைத்துள்ளனர். அதனை வைத்து தானே ஜாதகங்களைக் கணிக்கின்றனர்.

பூமியைப் போல் 13 லட்சம் அளவைக் கொண்ட ஒரு நட்சத்திரம் என்பது எந்த ஜோதிடருக்காவது – ஏன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் போன்றவர்களுக்குத் தெரியுமா?

விண்ணில் உள்ளவை நட்சத்திரங்கள் 10 ஆயிரம் கோடி முதல் 40 ஆயிரம் கோடி உள்ளன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதில் 27 நட்சத்திரங்களை மட்டும் வைத்து ராசிப் பொருத்தம் பார்க்கும் பேதமையைத் தவிர நம் முன்னோர்கள் கண்டுபிடித்தது என்ன? ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுவாரா?

‘‘விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; ஜோதிடம் என்பது விஞ்ஞானப் பூர்வமற்ற ஓர் அபத்தமே!’’ என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறவில்லையா?

மும்பையில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘‘நம் முன்னோர்களில் உடல் உறுப்புகள் மாற்றும் அறுவைச் சிகிச்சையை அறிந்திருந்தனர். ‘சிவ பெருமான் யானைத் தலையை வெட்டி, முண்டமான பிள்ளையாளுக்குப் பொருத்தி உயிர்ப்பித்தார்!’’’ என்று பேசவில்லையா?

அம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்த நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ‘இந்தியாவில் நடக்கும் இது போன்ற மாநாடுகளில் பங்கேற்க மாட்டேன்!’ என்று கூறவில்லையா?

பாற்கடலை மத்தால் கடைந்தது – சஞ்சீவி மலையையே பெயர்த்து அனுமான் விண்ணில் பறந்தான் என்ற கற்பனை மாயா ஜாலங்கள் எல்லாம் விஞ்ஞான ரீதியானவையா? அவை எல்லாம் வெறும் கற்பிதங்கள் தானே!

மெக்காலே கல்வியையும் கேலி செய்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையான குருகுலம், வேதபாடசாலைகள் மூடப்பட வேண்டும் என்றும், மேற்கத்திய அறிவியல் கல்வித் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்றும், ஆங்்கிலக் கல்வி வேண்டும் என்றும் லார்டுதோமஸ் பாபிங்டன் மெக்காலே வகுத்த கல்வித் திட்டம் (1830) பஞ்சாங்கத்திற்கும், பார்ப்பனீய சமஸ்கிருதத்திற்கும் எதிராக இருந்ததால் தீச்சட்டியில் விழுந்த ஈக்களாகத் துடிக்கின்றனர்.

‘‘கணவனைவிட மனைவி அதிகம் படித்து, அதிக சம்பளம் வாங்கினால், அந்தக் குடும்பம் சரிவராது; மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும்’’ என்று கருத்துக் கூறியவர்தானே இந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத்!

ஆர்.எஸ்.எைஸச் சேர்ந்தவர்களுக்கு அறிவியல் என்றால் கசக்கத்தான் செய்யும்! புதிய கல்வித் திட்டம் என்ற பெயரால் குருகுலக் கல்வியைக் கொண்டு வருபவர்கள் இப்படிப் பேசாமல், வேறு எப்படிதான் பேசுவார்கள்? சிந்தியுங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *