மதுரை, அக். 23- மதுரையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை இல்லை. இந்த நிலையில் என்னுடைய சகோதரருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் என் சகோதரர் இறந்துவிட்டார். இதனால் அவரது மகனை தத்தெடுக்க முடிவு செய்தோம். இதற்கு என் அண்ணன் மனைவி சம்மதம் தெரிவித்தார். சட்டப்படி குழந்தை தத்தெடுப்புக்கு பதிவுத் துறையில் விண்ணப்பித்தேன். ஆனால் தத்தெடுப்பு நடவடிக்கையை இஸ்லாம் மதம் அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் மறுத்து உத்தரவிட்டுள்ளனர். இதனை ரத்து செய்து என் அண்ணன் மகனை தத்தெடுக்க அனுமதிக்கும்படி உத்தர விட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குஐரஞர், “2022ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்ணின் குழந்தையை தத்து கொடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் மனுதாரர் வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இஸ்லாம் மதம் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை என்பது உண்மை தான். அதே நேரத்தில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச்சட்டமானது, விருப்பம் உள்ளவர்கள் குழந்தை களை தத்தெடுக்க வழிவகை செய்கிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதம் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும் அந்த மதத்தினர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம். அதேநேரத்தில் இந்து மதம் தத்தெடுப்பை வெளிப்படையாக அனுமதிக்கிறது.
இந்த வழக்கை பொறுத்தவரை, குழந்தையை தத்து கொடுப்பவரும், தத்து எடுப்பவர்களும் இஸ் லாமியர்கள். இவர்கள் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பெற்றோர்களின் சம்மதத்துடன் குழந்தை தத்தெடுப்பு நடக்க வேண்டும். எனவே மனுதாரர் தரப்பினர் இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும். அதன்படி மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட குழந்தையின் ஒப்புதலை பெறுவதும் அவசியம். உரிய நடைமுறைகளை பின்பற்றி 3 வாரத்தில் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
