தாழ்த்தப்பட்டோர் ஜாதி பழங்குடியினர்க்கான நாடாளுமன்றக் குழு அறிக்கை தரும் தகவல்கள் இவை. தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின்(National Scheduled Caste Finance and Development Corporation – NSFDC) செயல்பாடு, எஸ்.சி எஸ்.டி நலனுக்கான திட்டங்களின் அமலாக்கம் ஏமாற்றம் அளிக்கிறது. தேசிய தாழ்த்தப் பட்டோர் ஜாதி நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் 15 பேர் கொண்ட இயக்குநர் அவையில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் ஜாதியினர்.
1989 இல் துவங்கிய இக் கழகம் 33 ஆண்டுகளில் 17 லட்சம் தாழ்த்தப்பட்டோர் பயனாளிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது மிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பங்கு மூலதனம் 33 ஆண்டுகள் கழித்தும் வெறும் ரூ.1500 கோடி மட்டுமே. 2021 – 2022 இல் ரூ.2500 கோடியாக உயர்த்த வேண்டுமென்று அக் கழகம் கோரிக்கை வைத்தும் அது இதுநாள் வரை நிறைவேறவில்லை. இந்த கோப்பு பல அமைச்சகங்களின் பரிந்துரை, பரிசீலனை என பந்தாடப்பட்டு வருகிறது.
2020 – 2021 இல் இக்கழகம் வாயிலாக தொழில் நுட்ப பயிற்சி பெற்ற 5537 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இன்னும் பல தாழ்த்தப்பட்டோருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஜாதி நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் திட்டங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.