சென்னை, அக். 22- பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் தமிழ்நாட்டில் சென்னையில் காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றது.இருப்பினும் மழை கைகொடுத்ததால் காற்று, மாசு சற்று
சீரானது.
காற்றின் தரம் மிகவும் பாதிப்பு
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் காற்றின் தரம் மோசம் அடைகிறது. பொதுவாக காற்றின் தரத்தை குறியீடுமூலம் கணக்கில் கொள்ளப்படுகிறது. 0 முதல் 50 என்ற குறியீடு நன்று என்றும், 51 முதல் 100 வரையிலான குறியீடு திருப்தி கரமானது என்றும், 101 முதல் 200 வரையிலான குறியீடு மிதமானது என்றும், 201 முதல் 300 வரையிலான குறியீடு மோசமானது என்றும், 301முதல் 400 வரையிலான குறியீடு மிக மோசமானது என்றும், 401 முதல் 500 வரையிலான குறியீடு அபாயகரமானது என்றும் கணிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் நேற்று (21.10.2025) காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம் வெடித்த பட்டாசால் தமிழ்நாட்டில் சென்னையில்தான் காற்றின் தரம் அதிக அளவில் மோசம் அடைந்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இடையிடையே மழை சற்று கைகொடுத்த தால் காற்று மாசு சீரானது. சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அந்த அளவுக்கு காற்றின் தரத்தில் பாதிப்பு இல்லை. சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி, கடலூர், நாகையில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றிருந்தது.
வளசரவாக்கம் பகுதியில்…
சென்னையில் அதிகபட்சமாக வளசர வாக்கத்தில் காற்றின் தரக்குறியீடு 332 என்ற அளவில் இருந்தது. இது மிக மோசமான காற்றின் தரம் ஆகும். அதற்கடுத்தபடியாக, நுங்கம்பாக்கத்தில் 326 என்ற அளவிலும் (மிக மோசம்), தியாகராயநகரில் 273 என்ற அளவிலும் (மோசம்), சவுகார் பேட்டை யில் 260 என்ற அளவிலும் (மோசம்), திருவல்லிக்கேணியில் 227 என்ற அளவிலும் (மோசம்), திருவொற்றியூரில் 207 என்ற அளவிலும் (மோசம்), பெசன்ட் நகரில் 190 என்ற அளவிலும் (மிதமானது) காற்றின் தரக்குறியீடு இருந்தது. இது கடந்த ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் காற்றின் தரம் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதை காட்டுகிறது.
ஒலி மாசுவும் அதிகம்
காற்று மாசு போல, தமிழ்நாட்டில் ஒலி மாசுவும் தீபாவளி நாளன்று சாதாரண நாள்க ளைவிட அதிகமாக இருந்தது. ஒலியை டெசிபல் என்ற அளவில் கணக்கில் கொள்ளப்படுகிறது. இதில் குடியிருப்பு பகுதியில் 50 டெசிபலும், வணிகம் மற்றும் தொழில் பகுதியில் 65 முதல் 75 டெசிபல் வரையிலும் இருக்கலாம்.
அந்தவகையில் சாதாரண நாள்களில் பதிவாகும் ஒலி அளவைவிட தீபாவளி நாளன்று தமிழ்நாட்டில் 20 முதல் 30 டெசிபல் அளவுக்கு ஒலி மாசு அதி கரித்திருந்தது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் திருப்பூர் ராயபுரத்தில் சாதாரண நாட்களில் 53.9 டெசிபலாக இருக்கும் ஒலி அளவு, தீபாவளித் தினத்தன்று 82 என்ற ஒலி அளவில் இருந்தது. சென்னையை பொறுத்தவரையில், திருவொற்றியூரில் ஒலி மாசு (88.4 டெசிபல்) அதிகமாக இருந்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
தீபாவளி நாளன்று கண்டறியப்பட்ட காற்று மற்றும் ஒலி மாசு அளவுகள், வரை யறுக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற காற்று மாசு மற்றும் ஒலி மாசின் அளவுகளை விட அதிகமாக உள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்திருக்கிறது.
