அமெரிக்கா-வர்ஜீனியாவில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியரைப் பற்றி பொறியாளர் ம.வீ.கனிமொழி எழுதிய ‘‘உனை வாழ்த்திப் பொழிகின்றன’’நூல் வெளியீட்டு விழா!

9 Min Read

வர்ஜீனியா, அக்.22- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைப் பற்றி பொறியாளர் ம.வீ.கனிமொழி எழுதிய கவிதை நூல் ‘‘உனை வாழ்த்திப் பொழிகின்றன’’ வெளியீட்டு விழா 18.10.2025 அன்று மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை அமெரிக்கா- வர்ஜீனியா பர்க் மத்திய நூலக அரங்கில் நடைபெற்றது. பொறியாளர் அறிவுப் பொன்னி எழில் வடிவன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை சுபாஷ் ஒருங்கிணைத்தார்.

நூலினை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வெளியிட்டு நூலின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். நூலினைப் பெற்றுக்கொண்டு பேராசிரியர் அரசு செல்லையா உரையாற்றினார். திமுக செயலக அணி தொடர் கமலா பாரதி சுசீந்திரன் மேனாள் வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க தலைவர் அகத்தியன் பொறியாளர் எழில் வடிவன், மேரி பொன்முடி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். நூலின் ஆசிரியர் கவிஞர் ம.வீ.கனிமொழி ஏற்புரை ஆற்றினார். நிகர் மொழி பதிப்பகம் நூலினை சிறப்பாக வெளியீடு செய்திருந்தது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி பற்றிய ‘‘உனை வாழ்த்திப்ப் பொழிகின்றன’’ கவிதை நூல் பற்றிய கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ஆய்வு உரை:

நூலாசிரியர் கவிஞர் ம.வீ.கனிமொழி நன்றியின் வெளிப்பாடு இந்நூல். திராவிடர் இயக்க வரலாற்றை கற்பதற்கு ஒத்தது – ஆசிரியரைப் பற்றிய வரலாற்று கவிதைகளை எழுதுவது என்பதையும் பெரியாரை நான் அறிந்திருப்பதே ஆசிரியரால் தான். சங்க காலப் புலவர்  கபிலரின் குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களுடன் ஆசிரியர் அய்யா அவர்களை தொண்டுப்பூவாகக் கருதி நூறு பூக்கள் 100 பாக்கள் எழுதியது உண்மையிலும் உண்மை, சிறப்பிலும் சிறப்பு.

மலர்களைப் பொதுவாக மகளிருக்கு உவமையாகக் கூறுவதே இயல்பு. கவிஞர் ம.வீ.கனிமொழி  தமிழர் தலைவருக்கு அவரின் பண்பு நலன்களோடு பூக்களின் பண்பு நலன்களை ஒப்பிட்டு தலைவரின் தொண்டை, தியாக வரலாற்றைக் கவிதைகளாக யாப்பதில் மகிழ்ச்சி. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் 100 கவிதைகளில் 10 கவிதைகளை அதன் மதிப்பீட்டை, சிறப்பை, பெருமையை தமிழர் தலைவரின் தொண்டின் கனிவை, துணிவை, தத்துவப் பேராசான் தந்தை பெரியார் கொள்கையை உலகமயப்படுத்தி வரும் ஆற்றலை சிறுகனூரில் பெரியார் உலகத்தை உருவாக்கும் நோக்கத்தை குறுகத் தரித்த பாடல்கள் மூலம் சிறப்பாக இந்நூலினை ஆக்கியுள்ளார் கனிமொழி. அவருக்கு நமது பாராட்டுகள். அதுவும் அமெரிக்காவில் வெளியிடக்கூடிய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்; அதற்கும் நன்றி. எறுழம் பூ – தீ எரிவது போன்று காட்சியளிக்கும் பூ இது. மனுவை எரித்த எங்களின் எறுழம் நீ  உன் சொற்களும் அவ்வாறே அறியாமை இருளை விரட்டும் எறுழம்பூ தீ எரிவது போன்றே காட்சியளிக்கும்.

திராவிடர் கழகம்

அடுத்து காயாம்பூ!

காய்க்காத மரம் காயா. ஆரியத்தின் கொடு மைகள் தமிழ் நிலத்தின் காய்க்காமல் தடுத்திடும் நீ எங்களின் காயா மரம் என்று ஒப்புமைப் படுத்துகிறார். அனிச்ச மலர் பற்றி, ‘சூரியன் உதிக்கும் போது பூத்திடும் அனிச்ச மலர்கள் போல பெரியார் எனும் சூரியனின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் மலரும் உன் முகம் என்றும்,

பெரியார் உலகமும் கோளரங்கமும் படிப்பகமும் நூல் நிலையமும் அருங்காட்சியகமும் காலம் தோறும் அறிவு ஆசான் புகழ் பாடும் அப்புகழின் வீச்சில் என்றும் நிறைந்திருக்கும் உன் உழைப்பின் சுவடுகள் என்றே அனிச்ச மலர்கள் உன் விடா முயற்சிக்காய் உனை வாழ்த்திப் பொழி கின்றன என்றும் எழுதுகிறார் கவிஞர்.

அடுத்து குறிஞ்சி!

மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கொரு ஒரு முறை காலம் தவறாது பூக்குமாம். எங்கள் தந்தை கண்டெடுத்த வீரமணி பெரியார் எனும் தத்துவ மலையில் பூத்து 24 மணி நேரமும் 365 நாள்களும் கடமையாற்றும் குறிஞ்சி நீ!  வெட்சிப் பூ பற்றி கவிஞர் தமிழர் தலைவரை எப்படி சமப்படுத்துகிறார் பாருங்கள்!  அமில மண்ணில் பூத்திடும் வெட்சி மலரின் கூர்மையான அரும்புகள் உன் சொற்கள். பெரியாரியம் தழைக்க உன் வளமையைப் பெரியாருக்கே ஈந்த உன்னை எப்பாடலில் எச் சொல்லில் எப்பண்ணில் போற்றுவது என்று வியக்கிறார்.  வாழ்த்துகளை நீ விரும்புவதில்லை என்றாலும் எங்களின் வாழ்த்து நன்றியின் வெளிப்பாடு எனும்போது அதை ஏற்று வெற்றி மலர்கள் ‘உனை வாழ்த்திப் பொழிகின்றன’ என்கிறார்.

ஆம்பல்

பெரியார் எனும் வேர் தண்டுக் கிழங்கிலிருந்து முளைத்த ஆம்பல் நீ! ஆம்பல் மணப்பதில்லை, பகுத்தறிவு ஆம்பல் நீயோ மணக்கின்றாய், கருப்புச் சூரியனின் கட்டளையை உன் நரம்பு களில் ஏற்றிக்கொண்ட கருப்பு ஆம்பல் நீ, பரணி பாடுகிறோம் எங்கள் கருப்பு ஆம்பலின் தொண்ட றத்தைப் பண் கூட்டி அதனைக் கேட்டு ஆம்பல் மலர்கள் உன்னை வாழ்த்திப் பொழிகின்றன.

தேமா

நேர் நேர் தேமா என்கிறது யாப்பிலக்கணம் முக்கனிகளில் ஒன்று தேமா நீயோ பெரியார் கண்ட பகுத்தறிவுக் கனி கனிந்த சொற்களுடன் நெருப்புக் கொள்கையைப் பரப்பும் எங்கள் தேமாங்கனி நீ!

சுள்ளிப் பூ!

சொல்லென கருத்துகளை கோர்வையாக எடுத்து வைக்கும் ஆற்றல் உண்டு உனக்கு சுள்ளி மலர் சில்லென விலங்கின் உடம்பிலும் மனிதர்களின் ஆடையிலும் பற்றிக் கொண்டு தன் இனத்தை பரப்பிக் கொள்ளுமாம். சுள்ளெ னும் சொற்கட்டுகளால் பெரியாரின் கருத்துகளை மாணவர் அறிஞர் பெண்கள் என அனைவரின் மனத்திலும் ஏற்றி தமிழ் இனத்தின் உணர்வினையும் அறிவினையும் தூண்டும் உன்னை சுள்ளி மலர்கள் வாழ்த்திப் பொழிகின்றன! இக்கவிதையில் 10 வயது தொடங்கி 14 வயதுக்குள்ளாக தமிழர் தலைவர் ஆசிரியர் பாலப்பருவத்தில் பகுத்தறிவுப் பணியாற்றிய பான்மையை வரிசைப்படுத்தி இருக்கிறார் பாராட்டுக்குரிய முயற்சி!

புழகு மலர்!

எருக்கம் பூவே புழகு மலராம். எருக்கம் நார் கயிறாகப் பயன்படுமாம் அதன் உறுதியால் வில்லின் நாணிலும், மீன் வலையிலும் அதன் பயன்பாடு நீண்டு இருக்கிறது; எருக்கத்தின் நாரைப் போல உறுதியான எண்ணங்களே உன் தொடர் பயணத்தின் வெற்றி!

மவ்வல் மலர்!

முதல் எட்டு ஆண்டுகளில் மரமாகி, 40 ஆண்டுகள் வரை இருக்குமாம்; முதல் 10 ஆண்டுகளில் கொள்கை மரமாகி, 90 கடந்தும் பெரியார் இயலை கடத்தும் எங்களின் மவ்வலே நீ வாழ்க! என்று ஆசிரியரை வாழ்த்துகிறார் நூல் ஆசிரியர்.

காந்தள் மலர்

கடலூரின் பிளாட்டோ நீ!

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் எங்களுக்கு அளித்த தொண்டு நிழல் நீ!

எதிரிகள் வாயடைத்து போவர் ஆதாரக் குறிப்புகளை நீ பட்டியலிட்டால்! பற்றி எரியும் மூடத்தனம் உன் பகுத்தறிவு பழி வினை கேட்டால் பெரியாரின் சுடர் அணியாமல் காத்திடும் உன் காந்தல் சொற்கள்! அறிவு ஆசான் இலக்கின் வெளிச்சம் கூட்டும் உன் சொற்காந்தல் விரல்கள்!

வேரிப்பூ!

வன் பரணருக்கு வேரியின் தேனைத்

தந்தான் வல்வில் ஓரி

தமிழர்களுக்குத் தேனீக்கள் போன்ற சுறுசுறுப்பு கொண்ட உன்னை கொடை அளித்தார் பெரியார்.

பெரியார் அளித்த கொடை நீ!  அக் கொடை தான் அவசர காலத்தில் இயக்கத்தைக் காத்தது அக்கொடை தான் சிறையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை காத்தது!

மலர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் இனி உன் பெயரும் சேர்ந்தே ஒலிக்கும் திராவிடர் இயக்க வரலாற்றின் எங்கள் காலத்தின் நீண்ட வரலாறு! புதிய புறநானூறு என்றென்றும் வாழ்க என வாழ்த்துகிறார் பூக்களின் வழியே தோழர் கனிமொழி.

குவளை மலர்கள்!

மகளிரின் கண்களைக் குவளையோடு ஒப்பிட்டது இலக்கியம்!

பெரியாரின் கொள்கைக் குவளையாய் திராவிடர் இயக்க வரலாறு உன்னையே கை காட்டும் ஆகமங்கள் ஆகாயப் புரட்டு என்றே முழங்கி அடுக்கடுக்கான ஆயிரம் கூட்டங்கள் நடத்தி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வரவேண்டும் எனும் பெரியாரின் பெருங்கனவை நிறைவேற்றத் தீச்சுடர் ஏந்திய, எங்கள் செங்குவளை நீ! திராவிட வெண்குவளை! எங்கள் கருங்குவளை! நூற்றாண்டைக் கண்டும் கடந்தும் வாழ்க நீ எம்மான்!

தும்பை!

தும்பைப் பூ வெண்மையா அறியாமை இருள் நீங்கி வெளிச்சம் பெறவே உழைக்கின்றாய் சுயமரியாதையும் அறிவியலும் ஒன்றே பகுத்தறிவும் சுயமரியாதையுமே அறிவியல் என்றே புது மொழி பகன்றாய்! அம்மொழி கேட்டே தும்பைப் பூக்கள் உனை வாழ்த்திப் பொழிகின்றன!

நெய்தல்

வைகறையில் பூக்குமாம் நெய்தல் அம்மலர் போன்றே நீயும் வைகறையில் எழுகின்றாய்!

உனைப்பற்றி புரட்சி கவிஞர் உரைக்கையில் பெரியார் துணை ஒன்றே பெரிதெனக் கருதிய கருத்து வீரமணியை வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை என்றார். அவ்வரிகளை மெய்ப்பித்து நடக்கின்றாய் இன்றும்!

புத்தம் சரணம் கச்சாமி!

சங்கம் சரணம் கச்சாமி!

தம்மம் சரணம் கச்சாமி!

இத்தொடரின் எடுத்துக்காட்டு வீரமணி என்றே நெய்தல் மலர்கள் உனை வாழ்த்திப் பொழிகின்றன.

நீ எங்களுக்கு
எட்டாவது அதிசயம்…. எப்படி?

வள்ளி என்பது போரின்போது போரிடும் வயவர் சூடும் அடையாளப் பூவாம். இதனை வாடா வள்ளி என்கிறது தொல்காப்பியம். அந்த வள்ளி மலர் போல வாடாமல் சலிக்காமல் பணி செய்கின்றாய். ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைத்திடும் நீ எங்களுக்கு எட்டாவது வியப்பு என எண்ணி வள்ளி மலர்கள் உன்னை வாழ்த்திப் பொழிகின்றன.!

குறு நறுங்கண்ணி!

இதன் விதை கருஞ்சிவப்பு நிறம்! விதையாய் கருஞ்சிவப்பு அணியில் உன்னை இணைத்துக் கொண்டு ‘ஒரே இயக்கம் ஒரே கொள்கை ஒரே தலைவர்’ என பயணிக்கும் நீ எங்களின் குறு நறுங்கண்ணி!

முல்லை!

‘முல்லைக்குத் தேர் தந்தான் பாரி’ என படித்ததுண்டு முல்லையிடம் அன்பு காட்டும் பண்பைப் படித்தால் போதுமா?

மற்றவர்கள் உங்களை அதிகமாக நேசிக்க வேண்டும் அன்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட மற்றவர்களிடம் நீங்கள் காட்டும் நேசிப்பும், அன்பும் வற்றாதவை! என்றும் வளரட்டும் என்ற உன் வாழ்வியல் சிந்தனைகளை எண்ணி முல்லை மலர்கள் உனை வாழ்த்திப் பொழிகின்றன.

வேங்கை….

வேங்கைகள் காடுகளில் மட்டுமல்ல; வீடு களிலும் இருப்பதால்தான் பொதுவாழ்வு சாத்தி யப்படுகிறது தலைவர்களுக்கு!

குடும்பத்தின் சூழல் எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுத் தாங்கி வேங்கையாய் வழிநடத்திய பெருமை அம்மா மோகனாவையே சாரும்.

‘தோகை மயில் நிகர் மோகனா இந்நாள் பெற்ற பேரு யாவர் பெறுவார்’ என உன் திருமணத்தில் அகவற்பா பாடினார் புரட்சி கவிஞர். காலம் அவரைப் பெற்றதால் நீ பெற்ற பேரு யாவற்பெறுவார். என உணர்த்தி நிற்கின்றது அவரின் உழைப்பால் எதற்கும் பதட்டமில்லாமல் அமைதி ஏந்தி அணுகும் தன்மை அம்மாவினுடையது என உன் எழுத்துகளே உரைத்துள்ளன..

என்று மோகனா அம்மையாரின் தொண்டினை போற்றி வேங்கைப் பூக்கள் உனை வாழ்த்திப் பொழிகின்றன!

நூறாவது பூ
தொண்டுப் பூ!

நூறாவது பூ கபிலர் செப்பிய பூவல்ல.. குறிஞ்சிப்பாட்டு பாடும் மலர் அல்ல.. திராவிடர் இயக்கத் தோட்டத்தில் மலர்ந்த பூ இது

பெரியாரின் மனத்தில் நிரம்பிய மணம் இது.

தொண்டறம் எனும் சொல்லைச் சமைத்துக் கொடுத்த எங்கள் ஆசிரியர் தொண்டின் சிகரம்! 92 வயதிலும் தொண்டின் சிகரம் அத்தொண்டுப் பூ என்றும் வாழட்டும்!

இப்படியாய் 100 பூக்கள் 100 பாக்களாய் தமிழர் தலைவரின் வரலாற்றை, தொண்டின் கனிவை ஈகத்தை போராட்ட உணர்வை, எழுத்தாற்றலை பேச்சாற்றலை பறைசாற்றுகிறது இந்நூல்… அண்மையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ கத்தில் பெரியாரின் படத்தை திறந்த திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உரை வீச்சும், சிறுகனூர் பெரியார் உலகம் எனும் தமிழர் தலைவரின் எண்ணக் கனவும், சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம் எனும் பெரியார் கொள்கை உலகமயம் ஆகிட தமிழர் தலைவர் படும் பாடுகளை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அடிப்படையில் தன் நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் கனிமொழி. வரும் டிசம்பர் இரண்டாம் நாள் 93ஆவது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர். தமிழ் தமிழர் தமிழ்நாடு வாழ வெல்ல தமிழர் தலைவர் ஆசிரியர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற வாழ்த்தைச் சொல்லி என் ஆய்வு உரையை நிறைவு செய்கிறேன்’’ என்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *