கு.வெ.கி. ஆசான் நினைவு நாள் இன்று (22.10.2010)
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிறந்தவர். இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலைப் பட்டமும், சட்டப் பட்டமும் பெற்று கோவையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
இவருக்கு மனைவி சாரதாமணி, மகள் உமா, மகன்கள் செந்தில், குமார் ஆகியோராவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன்வாய்ந்த இவர் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைமையகச் செயலாளராகவும் இருந்தார்.
மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம். மொழி உரிமை, வருண ஜாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார் உள்ளிட்ட பல தலைப்புகளில் எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவர் ‘கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’ என்ற தலைப்பில் ரிச்சர்ட் டாக்கின்சின் “The God Delusion” நூலைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய ‘குமரன் ஆசான்’ நூல் பல பதிப்புகள் கண்டது.
‘விடுதலை’ நாளிதழ், ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் மாணவர்களுக்கு சிறப்பாக வகுப்புகளை நடத்தக் கூடியவர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை மய்யத்தின் பாடத் திட்டக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.
பெரியாரியத்தைப் பற்றிய கைலாசம் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகப் ‘பெரியார் பேருரையாளர்’ என்ற விருது பெற்றார். தமிழ், தமிழர் உரிமை, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றிற்காக பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு, தடுப்புக் கைதுக்கும் ஆளானவர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர், திராவிடர் கழகத்தின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
