ஒன்றிய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையின் மண்டல நீர் பகுப்பாய்வகங்களில் தற்காலிக வேதியியலாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஆய்வக உதவியாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட 126 பேருக்கும் கடந்த ஜூன் முதல் உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்பதுடன், திடீரென கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மாலை அதிகாரிகள் கூடி முடிவெடுத்து, அவர்கள் அனைவரும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று மாதங்களின் சம்பளத்தைக் கூட அவர்கள் தாமதமாகவே பெற்றுள்ளனர். 11 மாதத் தற்காலிகப் பணி என்றும், பணிநீக்கம் எனில் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் சொல்லப்படும் என்றும் பணி ஆணையில் இருப்பினும், திடீரென அவர்களைப் பணி நீக்கம் செய்திருப்பது சரியானதன்று. அவர்களின் வாழ்வாதாரத்தையும், கொடுக்கப்பட்ட பணி ஆணை உறுதிமொழியையும் கணக்கில் கொண்டு, அதன்படி உரிய காலத்தில் சம்பளத் தொகையை வழங்கி அவர்களைப் பணியமர்த்துவதே சரியானதாக இருக்கும்.
