தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது; வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே!

தந்தை பெரியார் வெறும் படமல்ல – பாடம்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெறவேண்டும்!
 இளைஞர்கள், குழந்தைகள் போன்றவர்கள் – அவர்களைத் திசை திருப்பவேண்டாம்!
தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது;
வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள்மீது தந்தை பெரியாருக்கு அக்கறை உண்டு. தந்தை பெரியார் வெறும் படமல்ல – பாடம், அவரைப் படியுங்கள்! தி.மு.க. என்ற கற்கோட்டை மீது ஓட்டைப் போடலாம் என்று நினைக்கவேண்டாம். வெறும் அரிதாரத்தால் எதையும் சாதிக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர்!

தனது சிந்தனையை, மக்களது பிறவி பேதம், துன்ப, துயர நிலைகள், மூடநம்பிக்கைகள், பொறுப்பற்ற வாழ்வு நிலை, பெண்ணடிமையைப் போற்றுதல் போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராக கூர் ஆயுதங்களாக்கி, வாழ்நாள் முழுவதும் பேசியும், எழுதியும், கொள்கைப் பிரச்சாரங்களை பட்டிதொட்டி எங்கும் பலத்த எதிர்ப்புகளிடையே பரப்பியும், விடியல் கொள்கைகளை வெற்றி பெறச் செய்ய எதிர்நீச்சல், அவதூறுகள், அடக்குமுறைகள், கொடுஞ் சிறைவாசங்கள் இவற்றை ஏற்று, இறுதியில் வெற்றி கண்ட ஒரு மகத்தான வெற்றி வீரர்!

மானிடப் பற்றும், மக்களின் வளர்ச்சிப் பற்றுமே தந்தை பெரியாரின் இலக்கு.

‘மானமும்,அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று அழகுக்கே தனித்ததோர் விளக்கம் தந்தவர் தந்தை பெரியார்!

‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று கூறி, அழகுக்கே தனித்ததோர் விளக்கம் கூறிய வித்தகர்!

அவர் கருத்துகளை அவரது காலத்தில் ஏற்காதவர்க ளும், அவர் உடலால் மறைந்து, உணர்வால் நிலைத்து, அவரது தன்னலமற்ற தொண்டின் விழுமிய பயனாளிக ளும் உணர்ந்து, உலகம் முழுவதும் அவரது கொள்கை களை வரவேற்றுப் பயனடையத் துடிக்கின்றனர்!

மற்ற பல உலக சிந்தனையாளர்களுக்கும், இவ ருக்கும் ஒரு பெரிய மாறுபாடு என்னவென்றால், மற்ற வர்கள் எழுதினார்கள்; பாடினார்கள்; ஆனால், மக்கள் மன்றத்தின் பேதங்களை எதிர்த்து இயக்கம் கண்டு, போராட்டங்களை நடத்தி, சமத்துவம், சமூகநீதி, சம வாய்ப்பு, சம அதிகாரம் கிட்டாத மக்களுக்குப் புதிய உரிமை வாழ்வினை தமது வாழ்நாளிலேயே பெற்றுத் தந்து மகிழ்ந்து, நம் மக்களின் விழிகளை திறந்து வைத்து, பிறகே தமது விழிகளை மூடிக்கொண்டவர்; தனது கொள்கைச் சுடரை ஏந்தி களங்களில் அவர் தொடங்கிய அறிவுப் போரை, அறப்போரை, தங்கு தடையின்றி முன்னெடுத்துச் செல்ல நல்ல இயக்கத்திற்குத் தொண்டர்களையும் உருவாக்கி, அதை ஆயிரங்காலத்துப் பயிராக்கி நிலைக்கும்படி செய்திருக்கி றார்.

‘‘உலகம் பெரியார் மயம் –

பெரியார் உலக மயம்’’

என்ற நிலையை உருவாக்கியவர் வேறு எவர்?

மனிதநேயம், மானுட உரிமை – இவற்றையே மய்யப்படுத்தி, தனது தொண்டறத்தைத் துவளாது, தோற்காது செய்து வெற்றி கண்ட தந்தை பெரியார், இளைஞர்களைத்தான் – அப்புது உலகை நிர்மாணிக்கும் பெரும் பணிக்குத் தனது பாசறைக் கருவிகளாக பெரிதும் இளைஞர்கள், மாணவர்களையே நம்பினார்.

‘‘முதியவர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து, பின்னே இனிக்கும்’’ என்ற முதுமொழிக்கொப்ப, இப்போதைய புதிய தலைமுறைகள் – பயன்பெற்று வருகின்றனர்.

என்றாலும், அவரது இலக்கு முழுமையாக நிறை வேறிடவில்லை.

பல நூற்றாண்டுகள் பழைமை ஆதிக்கம் – இவற்றைப் புரட்டிப் போட்டார் தனது ஆற்றல் வாய்ந்த தொடர் பணிகள் மூலம்!

தனது சுயமரியாதை இயக்கத்தை – தாம் ஏற்கெனவே வகித்த 29 பதவிகளை, ஒரே நாளில், ஒரே தாளில் துறந்து, தூக்கி எறிந்து தொண்டறத்தைத் தொடங்கினார்.

துவளாது களங்கண்டார். விழியால் இனம் கண்டார்  உரிமைகளுக்காக சிறைச்சாலை வாசங்கள் அவரது யதார்த்த வாழ்க்கை முறையாக ஆகிவிட்டது!

அனுபவத்தில் பழுத்தார்.

மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் மீதுதான் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கை!

அவர்தம் நம்பிக்கை இளைஞர்களும், மகளிரும், மாணவர்களுமே!

அது பொய்த்ததில்லை என்றாலும், இளைஞர்கள், மாணவர்களை திசை மாற்றும் பல வேலைகளைச் செய்வதை அவர் அறிந்தே அவர்களைத் வெறுத் தொதுக்காமல், விழிப்புணர்வை ஏற்படுத்தி, விரக்திக்கு இடம் தராத பிரச்சாரக் களங்கள்மூலம் வெற்றி பெற்றார்.

அவர் ஒரு சமூக விஞ்ஞானி! அதனால், காரண, காரியம் கண்டு, நடைமுறைச் சமூகத்திற்கு அவ்வப்போது எச்சரிக்கை மணியையும் அடித்து, அறி வுரை கூறி, சரியான பாதையை அவர்கள் தேர்வு செயது, என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வைத்துள்ளார்.

இளைஞர்களையே பெரிதும் நம்பிய தந்தை பெரியார் என்ற அந்த சமூக விஞ்ஞானி அவர்களை எப்படிச் சரியான பார்வையோடு பார்த்துச் செதுக்க முக்கிய அறிவுரை கூறுகிறார் பாருங்கள்.

குழந்தைகள் போன்றவர்கள் இளைஞர்கள்!

‘‘s இளைஞர்கள், குழந்தைகளுக்குச் சமமானவர்கள்.

s பின் விளைவுகளை அனுபவித்து அறியாதவர்கள்.

s கண்ணோட்டம் விழுந்தால், பற்றி விடுபவர்கள்.

s எழுச்சி என்பது எங்கெங்கு காணப்படுகின்றனவோ,  கூட்டம் குதூகலம் எங்கே காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்ததும் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.’’

தலைமைப் பண்புக்கு
முக்கியமானது எது?

நீதிக்கட்சி, அதன் ஆட்சி, பெரியார்தம் பேரா தரவு – தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் – ஆச்சாரியாரின் குலக்கல்வியை ஒழித்து, பல்லாயிரம் பள்ளிக்கூடங்களைத் திறந்த பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி – மனுதர்மத்தை எதிர்த்து சமதர்மத்தை நிலை நாட்டிவரும் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடந்துவரும் சமூகநீதி தொடர்ந்து, சமத்துவ, சம வாய்ப்பு ஆகியவற்றிற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., ஆரியம் – விளைவுகளை எண்ணி, பொறுப்பிற்கு பக்குவமாகாத நிலையிலேயே, தமது பணம், திரைப்படச் செல்வாக்கே போதுமானது – ஆட்சி, முதலமைச்சர் என்று கனவு கண்டு, ரசிகர் மன்றத்தையே வாக்கு வங்கி என்று தப்புக்கணக்குடன் களமாடுகிற – அரசியல், களம், கொள்கை எதுவும் இல்லாமல், எழுதிக் கொடுத்த வசனம் பேசி, அப்பாவி இளைஞர்கள், வேடிக்கைப் பார்க்க வந்த, படித்த, பாமர மக்கள் உள்பட பலரைப் பலி வாங்கிய நிகழ்வுகளுக்குத் தாம் சிறிதும் பொறுப்பேற்காமல், தமிழ்நாடு அரசு, காவல்துறை மீது  அழிபழி சுமத்தி, அறியாமையின் உச்சத்தில் உள்ளதை அய்யா அறிவுரையுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய அருமையான தருணம் இது – அரசியல் களத்தில்!

நல்ல தலைமைக்கு முக்கிய முதல் அடையாளம் – தமது தோழர்கள், தொண்டர்கள் செய்த தவறாயினும் கூட, தானே முன்வந்து, பொறுப்பேற்று, புதிய பாடம் கற்றுப் பொல்லாங்குகளைக் களைந்து, புதிய புத்தியும், உத்தியும்பற்றிச் சிந்தித்து தனது சுயபரிசோதனை மூலம் செய்தல்.

நடிப்பு அரிதாரம் மீட்சிக்கு உதவாது!

தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணி என்ற கற்கோட்டை யில் ஓட்டை ஏதாவது விழாதா? என்ற ஏக்கத்தில் இருந்து, ஏமாற்ற அரசியலினால் நாளும் புதுப்பழி, ஆதாரமில்லாத அவதூறு பிரச்சாரம் செய்து வருபவர்கள், இப்படி ஒருவருக்கு, அவரது குழம்பிய மனநிலையையே தற்போதைய கூட்டணி அழைப்பு என்று போட்டிப் போட்டுக்கொண்டு அரசியல் தூண்டியலைத் தூக்கிக் கொண்டு அலைகின்றனர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அ.தி.மு.க. கூட்டணியினர்.

நடிகரின் அரிதாரம் – பெரியார்  பட மாலை போன்ற காட்சிகள், வெறும் காட்சிகள்தான் – மீட்சிகளுக்கானவை அல்ல. சாதிக்கலாம் என்பது பகற்கனவே!

சினிமா கவர்ச்சி, பல கோடி ரூபாய் பணம் மூலம், உண்மையான ஜனநாயகனாகவே முடியாது. பிறரிடம் சரண் ஆகாமல், அவரும், அவரது தோழர்களும் புரிந்துகொண்டு, திருத்திக்கொண்டு அரசியல் நடத்த வரவேண்டும். அதற்குரிய பரிபக்குவம் முதலாவது பாலபாடம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

21.10.2025  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *