சென்னை அக். 21 தமிழர்களின் பண்டி கையே அல்ல தீபாவளி. அந்தப் பண்டி கையைக் கொண்டாடுவதற்காகச் சொல்லப்படும் காரணங்களும் ஏற்பு டையதல்ல. அப்பண்டிகையைக் கொண்டாடுவதால், பணச் செலவும், பொருளிழப்பும்தான் ஏற்படுகின்றன.
தமிழ்நாட்டில் நேற்று (20.10.2025) தீபாவளியன்று பட்டாசு வெடித்ததால் 13 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு, 89 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு கட்டடமும் தரைமட்டமாகியுள்ளது. காற்றின் மாசும் அதிகரித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
பட்டாசுகள் வெடித்ததில்
89 பேர் காயம்!
89 பேர் காயம்!
தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததில் தமிழ்நாடு முழுவதும் 89 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (அக்.20) தெரிவித்தார். இதில் 41 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும், 48 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு வதாகவும் அவர் கூறினார்.
பட்டாசு விபத்து
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்து வப் பணியாளர்களைச் சந்தித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறு வது வழக்கமாக இருந்து வருகிறது.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளியையொட்டி சிறப்பு சிகிச்சை வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 20 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான தீக்காய வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி பட்டாசு வெடித்ததினால் தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 89. இதில் 41 பேர் சிகிச்சைக்குப் பின் இல்லம் திரும்பிவிட்டனர். 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8 பேர் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கும், 32 பேர் மிகச் சிறிய அளவிலான அறு வைச் சிகிச்சைக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தைக்கு 7 சதவிகித தீக்காயமும், மற்றொரு குழந்தைக்கு 15 சதவிகித தீக்காயமும் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 13 இடங்களில்
தீ விபத்து
தீ விபத்து
தமிழ்நாட்டில், தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்தது உள்ளிட்டவற்றால், 13 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இவற்றில் சென்னையில் மட்டுமே 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசால்
இடிந்து விழுந்த கட்டடம்!
இடிந்து விழுந்த கட்டடம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தபோது கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமான பொருள்கள் மற்றும் உபகரணங்கள் அருகில் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நேற்று (20.10.2025) பட்டாசு வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பட்டாசு, அந்த கட்டடத்திற்குள் விழுந்ததாக தெரிகிறது. இதில் அந்த கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து சேதமானது. இருப்பினும் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கோவி லுக்குச் சொந்தமான உபகரணங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: அபாய அளவில் காற்றின் தரம்!
தீபாவளியையொட்டி நேற்று (அக். 20) இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதிலும், அதனையும் மீறி காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூரில் காற்றின் தரக் குறியீடு 400-அய் கடந்து பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருப்பதால் பட்டாசுப் புகை கலைந்து செல்வது தாமதப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
