கடந்த 18.10.2025 அன்று சென்னையில் திராவிடர் இயக்கத்தின் அடிக்கட்டுமான முன்னோடிகளில் ஒருவரான அருமைத் தோழர், கவிஞர் கருணானந்தம் அவர்களது நூற்றாண்டு விழா நடந்ததில், அதனை ஓர் ஆக்கபூர்வ நிகழ்வாக ஆக்கிடும் வண்ணம் அவரது முக்கிய சில நூல்களை ஒரு நல்ல தொகுப்பாக்கி புதிய தலைமுறைக்கும் – இனி வரப்போகும் திராவிடர் இயக்க ஆய்வாளர்களுக்கும் பயன் தரும் வகையில், வெளியீட்டு விழா நடத்தினர்.
அந்தத் தொகுப்பில் ‘கவிஞர் கருணாந்தம் படைப்புகள்’’ என்ற அந்த நூலில் ‘அண்ணா – சில நினைவுகள்’ என்று 1986ஆம் ஆண்டு, அய்யா (தந்தை பெரியார்), அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், கலைஞர் ஆகிய பலரிடம் மிக நெருங்கிப் பழகிய பான்மையர் – அதிக விளம்பர வெளிச்சத்தைத் தேடாது, மற்றவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரத் துணை நின்ற தூயவரான அவரது நூலை, மறு வாசிப்பு இப்போது செய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
அதில் ஒரு கட்டுரையின் ஒரு பகுதி இதோ:
‘அெட, வாய்யா மாநாடு ஸ்பெஷலிஸ்ட்’ என்ற உற்சாகத்துடன் அண்ணா என்னை அருகே அழைத்து தட்டிக்கொடுத்து “என்னா? எப்போ வந்தே? இங்கே என்னென்ன விசேஷம்?” என்று கனிவுடன் வினவினார்.
“நான் இப்பதான் முதல் தடவையா மாநாடு நடத்தறேன். முன்னாடியே வந்திருந்து எனக்கு உதவணும். உன் அனுபவம் துணையாயிருக்குமல்லவா?’ என்று கடலூர் திராவிடமணி கடிதம் எழுதியிருந்தாரு அண்ணா. அதான் நாலு நான் முன்னதாக வந்தேன். மாநாட்டு ஏற்பாடுகள், அலங்காரமெல்லாம் பார்த்தீங்களா? பண்ணுருட்டியிலேயிருந்து இந்தப் புதுப்பேட்டை வரையிலே ரோட்டிலே இரண்டு பக்கமும் தென்னை மட்டைகளை முழுசு முழுசாப் புதச்சி வச்சி, மயில் தோகையை விரிச்சாப்போலே அழகா வச்சிருக்கோம்.”
“நல்ல புதுமையான கற்பனைதான். சரி, வேறென்ன இந் தனியான சிறப்பு?” அண்ணா கேட்டார்.
“மாநாட்டுக்கு முதல் நாளே – இது திராவிட மாணவர் மாநாடுதானே -இங்கே நமக்கென்ன வேலைண்ணு எண்ணாமெ, இந்தத் தென்னார்க்காடு மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலேயிருந்தும், கட்டுச் சோறு எடுத்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளோட, குடும்பம் குடும்பமாய் மக்கள் வந்துட்டேயிருக்காங்க. இந்த மாதிரி எழுச்சியெ வேற எங்கேயும் பார்த்ததில்லே அண்ணா! வியப்புடன் கூறினேன். கடந்த ஆண்டு நான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மாவட்டம் இது.
“சரி. சேலம் மாநாட்டுக்குப் பின்னே நாம் எதிர்பார்த்த இப்படிப்பட்ட எழுச்சி உண்டாகியிருக்குது! வீரமணி வந்திருக்குதா, இங்கே?”கேட்டார்.
“வராமெ இருக்குமா? இந்த வூர்லே மாநாட்டு வேலையெல்லாம் கழகத்தோழர் இராமலிங்கத்தோட முயற்சிதானே! வீரமணி அவருக்கு உதவியா ஓடியாடி தொண்டு செய்யுது. இங்கே அது வெறும் பேச்சாளரா வரல்லியே, அவுங்க ‘வாத்தியார்’ திராவிடமணி நடத்துறதாச்சே.”
சிறுவன் வீரமணியை அண்ணா சேலம் மாநாட்டிலேயே வீரமணியை சந்தித்துப் பாராட்டிவிட்டார். இப்போது உள்ள ஒரு இசைக் கலைஞருடன் ஒப்பிடுவது பொருத்தம். அவர்தான் மாண்டலின் யூ. சீனிவாசன், கர்நாடக இசையை இந்தச் சிறு கருவியில் இசைக்க முடியும் என இதற்கு முன் யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. அதே போல வீரமணியும் தன் பத்தாவது வயதிலேயே ஓர் எதிர் நீச்சல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இன்றளவும் அதிலேயே நிலைத்திருப்பது, மாபெரும் அற்புதமாகும். இசையுலகில் சிதம்பரம் ஜெயராமன், வீணை பாலச்சந்தர், பாலமுரளி கிருஷ்ணா, புல்லாங்குழல் டி ஆர். மாலி, மிருதங்கம் டி. கே. மூர்த்தி ஆகியோர் பால்யத்திலேயே திறமைசாலிகள் எனினும், முன்னோர் சென்ற வழியிலேயேதான் இவர்களும் சென்றனர். புதுமையோ புரட்சியோ செய்யவில்லை. அதைச் செய்த ஒரே சிறுவன் சீனிவாஸ். அஃதே போன்ற புரட்சிச் செய்த சிறுவன் வீரமணி ஒருவரே என்பதை நாம் மறத்தலாகாது! வேறு எவரும் இத்துறையில் இவருக்கு நிகரானோர் இலர்!
1945 சனவரித் திங்கள் இந்த மாநாட்டை முன்னின்று நடத்திய புதுப்பேட்டை இராமலிங்கம் பின்னர் சென்னையருகே குடியேறி. இன்றைக்கும் ‘அனகாபுத்தூர் இராமலிங்கம்’ என்ற பெயரில் பொதுத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர். புதுப்பேட்டை சிறந்த நெசவாளர் மய்யம். அதனால் அவர் கைத்தறியாளர் பிரச்னைகளில் நிபுணராக விளங்குகிறார். சிறந்த சுயமரியாதைத் தமிழன்பரும், கொள்கைக் குன்றும், நிகரிலாத் தொண்டரும், பல வீரமணிகள் உருவாக உழைத்தவருமான கடலூர் ஆ. திராவிடமணி பி.ஏ.அண்மையில் மறைந்து போனார். சென்ற ஆண்டு, அதாவது, 15.10.1985 அன்று. யார்க்கும் தெரியாது. காரணம் திருச்சி மாநாட்டுப் பணிகளைக் கவனிக்கக் கலைஞரும் முன்கூட்டியே வந்து தங்கியிருந்து, தினமும் அண்ணா இருக்கும் பங்களாவுக்கு வருவார். தான் பொறுப்பேற்று ஆேலாசனை வழங்கிய கண்காட்சிக்கான அலுவல்களைப் பார்த்து ஓவியர்களிடம் வேலை வாங்குவார்.’’
புதுப்பேட்டை ‘பலா’புகழ் பண்ருட்டிக்கு அருகே உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூரில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் எனது ஆசான் ஆ. திராவிடமணி அவர்களால் (அவ்வூரைச் சேர்ந்த ‘தேவராஜன்’ என்பவர் கடலூர் மு.து. நகரில் ஒரு பெரிய ஜவுளிக் கடை மேனேஜர் – ஆ. திராவிட மணியின் அருமைக் கொள்கைத் தோழர்)
அவரது கருத்துப்படி ‘துணிந்து’ 1945இல் புதுப்பேட்டை திராவிட மாணவர் மாநாட்டில் ஆசான் ஆ. திராவிடமணி அவர்கள் – பெரு முயற்சியால் பெரியார், அண்ணா, முதலிய பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநாட்டில் பணி செய்து பெற்ற அனுபவம் – களப் பயிற்சி – இன்று எமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்று எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
கடலூரில் பொதுக் கூட்டங்கள் போடும்போது, எங்களுக்கு மேடை அமைப்பதிலிருந்து அழைக்கப்பட்டு வரும் தலைவர்கள் (கடலூர் O.T.யில் ‘வள்ளலார் அச்சகம்’ – பெரியவர் சிதம்பரநாதன் அவர்களுடையது. அவர் வள்ளலார் – பெரியார் பற்றாளர். நோட்டீஸ் 1/16, 1/32 (சிறிய துண்டறிக்கை) அளவிலிருக்கும். ஆசிரியர் ஆ.திராவிடமணி எழுதித் தருவார். அச்சகத்திலிருந்து நோட்டீசை அச்சிட்டு வாங்கிட அச்சகத்திற்குத் தர வேண்டிய கட்டண பாக்கியை ஆசிரியர் ஆ. திராவிடமணி தனக்குச் சம்பளம் வரும்போது 1 ரூபாய் 2 ரூபாய் என மாத மாதம் கொடுத்து விடுவார். அச்சிட்டதை நான் வாங்கி வருவேன். தகரக்கடை செல்வராஜ் தகரத்தை வளைத்து இலவசமாக மெகா போன் செய்து தருவார். குரல் எங்களுடையது. இப்படித்தான் நோட்டீஸ் – கடன், மெகா போன் – இலவசம், உழைப்பு – எங்களுடையது!) சிறப்புப் பேச்சாளர் களை வரவேற்று உபசரித்துத் திருப்பி அனுப்புவது, பெஞ்சு, நாற்காலிகளைப் போடுவது, ‘கூட்டம் சேர்க்க’ மெகா போனில் சிறு ஊர்வலமாக ஊர்தியில் கடை வீதிவழியே சென்று கூட்டம் சேர்ப்பது, சகலமும், நாங்களே, பின்னின்று எங்களை இயக்குபவர் எங்கள் ஆசான் ஆ. திராவிடமணி.
அரசு ஊழியர் அவர்மீது உருட்டுக்கட்டையில் நெருப்பு பற்ற வைத்து அடித்தபோதுகூட அவர் அஞ்சாமல், துஞ்சாமல் எங்களுக்கு கற்பித்த பாடங்களும், பயிற்சிகளும் தான் இன்றளவும் உதவுகின்றன. அதன் பிறகு கடலூரில் ஒரு பெரிய மாநாடு – திராவிட நாடு பிரிவினை மாநாடு 1947 செப்டம்பர் 14 (14.9.1947) அதிலும் என் பணி, ஏற்பாடுகள், ஊர்வலம் இவற்றை எல்லாம் ‘விடுதலை’ நாளிதழில் அன்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயிற்சிக் களத்தின் பாடம் என்ன?
பேச்சாளர் என்ற விளம்பம் பெற்று விட்டோம். இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யலாமா? என்ற கர்வமனப்பான்மை என்னைப் போன்ற இயக்க மாணவர்கள் – தோழர்கள் பலரைப் பற்றிக் கொள்ளவே இல்லை.
மேடையோடு, மேடையில் கூட்டம் சேர்க்கப் பாடுவது, மேஜை மேல் பெட்ேராமாஸ் லைட்டில் காற்றுக் குறைந்தால் பம்பு அடித்து ஒளியைக் கூட்டி, கல் விழுந்தால் ஏற்றுக் கொள்வது இவையெல்லாம் இயல்பாகி விட்டது.
இயக்கத்தின் முதுபெரும் பெரியார் தொண்டர்கள் எல்லோரும் பணிகளைக்கூட பகிர்ந்து செய்து மகிழ்ச்சி அடைந்தோம்.
இத்தகைய பயிற்சிப் பட்டறையில் உருக்கி, வார்த்து நன்கு பதப்படுத்தப்பட்டு, மேலும் அடிகள் வாங்குவதுதான் …. என்று கருத்தும் கற்றுத்தந்த பள்ளிக்கூடமாகும். அதனால் எதையும் துணிவோடும், தெளிவோடும் – எதிர் நீச்சலோடு நம் பணியை பருவம் பாராது தொடருவது மகிழ்ச்சியே – மறைமலை நகர் மாநாட்டின் வெற்றிக்கும்கூட அந்தகளப்பயிற்சி திட்டமே காரணமாகும்.
எனவே வினையாற்றும் திறன் வளர்க்க இப்படிப்பட்ட உழைப்பு தான் நமது மகிழ்ச்சிகளை கூட்டிற்று.
இயக்கத்தின் நாற்றுகளே கற்றுக் கொள்வீர்!
