சென்னை, அக்.21 சென்னையில் 3 முக்கியமான சாலை திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ஜிஎஸ்டி சாலை பாலம், சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலை ஆகியவை தீவிரமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இந்த சாலை திட்டங்கள் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டம் 1 – திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) ரூ. 2,100 கோடி மதிப்பீட்டில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழி மேம்பாலம் அமைக்க உள்ளது. இது மாநில அரசு மேற்கொள்ளும் மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற காரணங்களால் திட்டத்தின் இறுதிச் செலவு மாறக்கூடும்.
சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் பிற சுற்றுலா, புனித யாத்திரை தலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும். த.மா.நெ. ஆணையம் 19.10.2025 அன்று இந்த திட்டத்திற்கான பன்னாட்டு ஒப்பந்தங்களை வெளியிட்டது.
இந்த உயர்மட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், திட்டத்திற்காக கடற்கரை (ECR) சாலை 30 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், LB சாலை சந்திப்பு மற்றும் நீலாங்கரை போன்ற முக்கிய இடங்களில் துணைப் பாதைகள் அமைக்கப்படும்.
திட்டம் நிறைவடைந்ததும், தற்போதைய 60 நிமிட பயண நேரம் 15-20 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைடல் பார்க் முதல் உத்தண்டி வரை, நடுவரிசையில் தூண்கள் அமைத்து இந்த மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தச் சாலை 16 முதல் 20 மீட்டர் அகலத்துடன் நடைபாதைகளையும் கொண்டிருக்கும்.
இந்த மேம்பாலத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். வங்கிக் கடன்கள் மூலம் தனியார் பங்களிப்புடன் இந்தச் சாலை கட்டப்படும். இது கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசலைக் குறைப்பதுடன், அடையாறில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர், மாம்பாக்கம் போன்ற ஓஎம்ஆர் பகுதிகளுக்கும் மாற்றுப் பாதையாக அமையும்.
நீலாங்கரை, கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி, இஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூர் உள்ளிட்ட 13 முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எல்.பி. சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ, நீலாங்கரை, இஞ்சம்பாக்கம், அக்கரை ஆகிய இடங்களில் இந்த மேம்பாலத்தில் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும்.
திட்டம் 2- மதுரவாயல் பாலம்
எதிர்பார்த்ததை விட வேகமாக துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு உயர்நிலை சாலைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த வழித்தடத்தில் பல இடங்களில் புதிய பில்லர்கள் முழுமையாக நிறுவப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இந்த திட்டத்திற்காக கூவத்தில் தற்போது தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன.
துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு பாலத்தின் பணிகளுக்கு இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறுவதில் உள்ள தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிக்கட்டத்தில் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வும் செய்யப்பட்டு உள்ளது. மதுரவாயல் – துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு. முட்டுக்கட்டை போட்டார்.
இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்ெகனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் நடந்து வருகிறது.
மதுரவாயல் – துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. முதல்முறையாக மதுரவாயல் சாலையில் பேரிகேட் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பின் அந்த பில்லர்கள் இடிக்கப்படும். இப்போது கூவம் நதியில் பில்லர்கள் கட்டப்படும் நிலையில்.. கூவத்தில் ஆங்காங்கே மணல், மண் கொட்டப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் இதற்காக தற்போது கூவத்தில் குழிகள் தோண்டி தூண்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன.
இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே.
அதேபோல்தான். ஆனால் இதில் இரண்டு மேம்பாலங்களும் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும். பன்னாட்டுகள் பலவற்றில் இது போன்ற பாலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற இரட்டை பாலங்கள் பயன்படுத்தப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
திட்டம் 3 – அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை
சென்னை, தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை உயர்மட்டச் சாலைத் திட்டம், தமிழ்நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த மேம்பால கட்டுமானமாக உருவெடுத்துள்ளது. இதன் பணிகள் தற்போது 50% முடிந்துள்ளன. அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த உயர்மட்ட சாலை, சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஒரு முக்கிய திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சாலை அமைக்கப்படவுள்ளது.
பரபரப்பான அண்ணா சாலையில் 3.2 கி.மீ., நான்கு வழி உயர்மட்ட சாலைப் பணிகள் முடிந்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த சாலை ஒரு நீளமான பாலமாக அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்பார்க்கப்பட்டதை விட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இங்கு அமைக்கப்படும் தூண்கள் கான்கிரீட் இல்லாமல் இரும்புத் தூண்களாக இருப்பதால், வரும் நாட்களில் பணிகள் விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
