குன்னூர், அக்.21 மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக 7 இடங்களில் மரங்கள் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் கட்டப்பெட்டு சாலை மற்றும் சோலூர்மட்டம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி உதவியுடன் மண் சரிவை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். குன்னூர் அம்பிகாபுரத்தில் கார் மீது மரம் விழுந்ததில் கார் சேதமடைந்தது. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதனால், மேட்டுப்பாளையம்-குன்னூர் மற்றும் குன்னூர் ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளியால் டில்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு பொதுமக்கள் கடும் அவதி
புதுடில்லி, அக்.21 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி அளித்ததன் காரணமாக டில்லியில் தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பிராந்திய பகுதிகளில் காற்று மாசுபாடு மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த பிரச்சினை காரணமாக தலைநகரில் கடந்த 7 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி கேட்டு் பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு டில்லியில் தீபாவளியன்றும், அதற்கு முன்தினமும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்தது. காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 8 முதல் 10 மணி வரையும் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி தீபாவளிக்கு அதற்கு முன்நாளும் நேற்று டில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்தனர். இது தலைநகரின் காற்று மாசுபாட்டு மீண்டும் அதிகரித்தது. தலைநகரில் உள்ள 38 காற்று மாசு கண்காணிப்பு மய்யங்களில் 31-இல் காற்று மாசு மிகவும் அபாய அளவை எட்டியிருந்தது கண்டறியப்பட்டது.காலையில் 339 ஆக இருந்த மாசுபாடு அளவு (ஏ.கியூ.அய்), நண்பகலில் 334 ஆகவும் இருந்தது. அதேநேரம் ஆனந்த் விகார்(402), வாசிர்பூர்(423), அசோக் விகார்(414) ஆகிய 3 மய்யங்களில் மிகவும் மோசமான அளவை எட்டி இருந்தது.
இது வரும் நாட்களில் மேலும் மோசமடையக்கூடும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏ.கியூ.அய். அளவு 0 முதல் 50 வரை இருப்பதே சிறப்பான அளவாக கருதப்படுகிறது. ஆனால் தலைநகரில் பல இடங்களில் 400-க்கு மேல் ஏ.கியூ.அய். பதிவாகி இருப்பது அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.இந்த காற்று மாசுபாட்டால் டில்லிவாசிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.இதைத்தொடர்ந்து காற்று மாசுபாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையிலான நடவடிக்கைகளை மக்கள் எடுக்குமாறு முதலமைச்சர் ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.