காந்திநகர், அக்.21 குஜராத்: முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான குஜராத் பா.ஜ.க. ஆட்சியில் திடீர் மற்றும் அதிரடியான அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதலமைச்சர் பூபேந்திர படேல் நீங்கலாக, அமைச்சரவையில் இருந்த மொத்தம் 16 அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகியுள்ளனர். இந்தச் செயல் குஜராத் மாநில பா.ஜ.க.வில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவையின் விலகலைத் தொடர்ந்து, அடுத்த நாளே 25 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், பதவியேற்றவர்களில் 19 பேர் முற்றிலும் புதிய முகங்கள் மற்றும் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர். இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
புதிதாகத் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஹர்ஷ் சங்கவி (40 வயது) இந்த அமைச்சரவை மாற்றத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது திடீர் உயர்வும், இளம் வயதும் குஜராத் பா.ஜ.க.வில் உள்ள பல மூத்த தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற அரசியல் கட்சிகள், “வரும் 2027 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இளம் வயதிலேயே துணை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஹர்ஷ் சங்கவிதான் அடுத்த முதலமைச்சராக வருவார்; இப்போதிருந்தே அவருக்குப் பயிற்சி அளிக்கும் நோக்குடன்தான் இந்தத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது” என்று பேசி வருகின்றனர்.
